Published:Updated:

``கண்டுகொள்ளாத உறவுகள்... கடுப்பில் சுதாகரன்” - உறவுகளுக்கு செக் வைக்க அரசியல் 'மூவ்'வா?

சுதாகரன்
News
சுதாகரன்

தினகரனுக்கு செக் வைக்க அவரது சகோதரர் சுதாகரனை அ.தி.மு.க-வுக்குள் கொண்டுவந்து நெருக்கடி கொடுக்கலாம் என்று சிலர் எடப்பாடியிடம் சொல்லியிருக்கிறார்கள்.

``சொந்த உறவுகளே தன்னைக் கைவிட்டதால், அவர்களுக்குக் கடுப்பை ஏற்படுத்த அ.தி.மு.க-வில் எப்படியும் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று சத்தமில்லாமல் மூவ் செய்துவருகிறார் சுதாகரன்” என்கிற தகவல் இப்போது கசிய ஆரம்பித்துள்ளது.

ஜெ., சசி, இளவரசி, சுதாகரன்
ஜெ., சசி, இளவரசி, சுதாகரன்

சசிகலாவின் அக்கா வனிதாமணியின் மகன் சுதாகரன். இவரை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வளர்ப்பு மகனாகத் தத்தெடுத்து, 1995-ம் ஆண்டு சுதாகரனுக்கு நடத்திவைத்த ஆடம்பரத் திருமணம் இன்றளவும் பேசுப்பொருளாக உள்ளது. ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்குக்கு அந்தத் திருமணமும் ஒருகாரணமாக அமைந்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைத் தண்டனை பெற்றபோது, அவருடன் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் சேர்த்தே தண்டனை வழங்கப்பட்டது.

ஜெயலலிதா 2016-ம் ஆண்டு மறைந்த பிறகு உச்ச நீதிமன்றம் சசிகலா உள்ளிட்ட மூவருக்கும் சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராத் தொகையையும் உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து, சசிகலா, அவரின் அண்ணி இளவரசி, அவரின் அக்காள் மகன் சுதாகரன் ஆகியோர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த ஆண்டு இறுதியில் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோருக்கான அபராதத்தொகையான 10 கோடி ரூபாயை அவர்களின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் கட்டினார்கள். ஆனால், சுதாகரனுக்கான 10 கோடி ரூபாயைக் கட்ட அவரின் உறவினர்கள் யாரும் முன்வராமல் போனதால், தண்டனைக் காலம் முடிந்தும் சுதாகரன் சிறையிலிருந்து வெளியே வர முடியவில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அபராதத் தொகையை கட்டவில்லையென்றால் கூடுதலாக ஓர் ஆண்டு தண்டனைக் காலத்தை கழிக்க வேண்டும் என்கிற நீதிமன்ற உத்தரவுப்படி சுதாகரன் கூடுதல் தண்டனைக் காலத்தையும் சிறையில் கழித்துவிட்டு, கடந்த அக்டோபர் மாத இறுதியில் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். சிறையிலிருந்து வெளியே வந்த சுதாகரனை அவரின் உறவினர்கள் யாரும் சென்று சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது. சென்னைக்கு வந்த சுதாகரன், தி.நகரில் உள்ள நடிகர் சிவாஜி குடும்பத்துக்குச் சொந்தமான ஒரு வீட்டில் குடும்பத்தினருடன் இருக்கிறார்.

சுதாகரன் திருமணம்
சுதாகரன் திருமணம்
விகடன்

சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு அமைதியாக இருக்கும் சுதாகரன் சமீபத்தில் தனக்கு நெருக்கமானவர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது தனது மனக்குமுறலையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். ``அம்மா இருந்தபோது என்னை ஒதுக்கிவைத்தார்கள். அதற்குச் சில காரணங்கள் இருந்தன. ஆனால், அவர் மறைவுக்குப் பிறகு எனது உறவுகள்கூட என்னைக் கண்டுகொள்ளவில்லை. சித்தி, அத்தையோடு சிறைக்குள் ஒன்றாகச் சென்றவன் நான். என்னை வெளியே எடுப்பதற்கு எனது உறவுகள் யாருமே முயற்சி செய்யவில்லை. குறிப்பாக எனது சித்தி சசிகலாவும் இந்த விஷயத்தில் ஆர்வம்காட்டவில்லை. அதேபோல், என்னுடன் பிறந்த தினகரனும் பாஸ்கரனும் ஆரம்பத்திலேயே என்னை ஒதுக்கிவைத்துவிட்டார்கள். உறவுகளெல்லாம் கஷ்ட நேரத்தில் என்னையும் எனது குடும்பத்தையும் உதறித் தள்ளி வேடிக்கை பார்த்ததை என்னால் மறக்க முடியாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நான் கொஞ்ச நாள்கள் அமைதியாக இருந்துவிட்டு, மீண்டும் அரசியல் பயணத்தில் ஈடுபடும் எண்ணம் உள்ளது. அம்மா அவர்களால் வளர்க்கப்பட்ட அ.தி.மு.க-வில்தான் எனது அரசியல் பயணம் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்” என்று சொல்லியிருக்கிறார்.

சிறையிலிருந்து வந்த சுதாகரனுக்கு ஆதரவாகத் தற்போது இருப்பது, அவரின் மனைவி வழி உறவினர்களான நடிகர் சிவாஜி குடும்பத்தினர் மட்டும்தானாம். சுதாகரன் உறவுகள் யாரும் அவரைக் கண்டுகொள்ளவில்லையாம். சுதாகரனின் அப்பா விவேகானந்தன் மட்டுமே, சுதாகரனின் அபராதத் தொகையைக் கட்ட சில முயற்சிகள் எடுத்திருக்கிறார். ஆனால், அதற்கு அவர்களின் குடும்பத்தினர் ஒத்துழைப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

நீதிமன்றத்தில் சுதாகரன்
நீதிமன்றத்தில் சுதாகரன்

இதையெல்லாம் மனதில்வைத்து இப்போது தனது உறவுகள்மீது கடும் கடுப்பில் இருக்கிறாராம் சுதாகரன். மேலும் அ.தி.மு.க-வில் இணைவதற்காக அந்தக் கட்சியில் உள்ள முக்குலத்தோர் நிர்வாகிகள் மூலம் சில பேச்சுவார்த்தைகளும் நடந்துள்ளன. ஆனால், அ.தி.மு.க தலைமையோ, ``சசிகலாவையே கட்சிக்குள் கொண்டுவர விரும்பவில்லை. அவருடைய உறவுகளுக்கும் அதே நிலைதான்” என்று சொல்லியிருக்கிறது. ஆனாலும் மனம் தளராமல் தொடர்ந்து அ.தி.மு.க-வில் இணைவதற்கான முயற்சியில் சுதாகரன் இறங்கியிருக்கிறார். மற்றொருபுறம் தினகரனுக்கு செக் வைக்க அவரின் சகோதரர் சுதாகரனைக் கட்சிக்குள் கொண்டு வந்து நெருக்கடி கொடுக்கலாம் என்று சிலர் எடப்பாடியிடம் சொல்ல, அதையும் எடப்பாடி தரப்பு பரிசீலனையில் வைத்திருக்கிறதாம். தனது அரசியல் பயணம் உறுதியான பிறகே வெளிப்படையாகத் தனது கருத்துகளை முன்வைக்கவும் சுதாகரன் தயாராக இருக்கிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.