Published:Updated:

``பொங்கல் பரிசுத்தொகுப்பில் முழுக்கரும்பும் வழங்கப்படும்!" - தமிழக அரசு அறிவிப்பு

முதல்வர் ஸ்டாலின்

பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு சேர்த்து வழங்கப்படும் என அரசு தெரிவித்திருக்கிறது.

``பொங்கல் பரிசுத்தொகுப்பில் முழுக்கரும்பும் வழங்கப்படும்!" - தமிழக அரசு அறிவிப்பு

பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு சேர்த்து வழங்கப்படும் என அரசு தெரிவித்திருக்கிறது.

Published:Updated:
முதல்வர் ஸ்டாலின்

2023-ம் ஆண்டு பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்த அறிவிப்பை அண்மையில் தமிழக அரசு வெளியிட்டிருந்தது. அதில் 2.16 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1,000 ரூபாய் ரொக்கமும், ஒரு கிலோ சர்க்கரையும், ஒரு கிலோ பச்சரிசியும் வழங்குவதாக முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு சேர்க்காதது குறித்து எதிர்க்கட்சிகள், விவசாயிகளை தி.மு.க ஏமாற்றுவதாக விமர்சித்துவந்தன.

இந்த நிலையில், இன்று (28.12.2022) தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி, தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோருடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து, பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு சேர்த்து வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானது. இது தொடர்பாக அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தி வெளியீட்டில், ``விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன், முழுக்கரும்பு ஒன்றையும் சேர்த்து வழங்க உத்தரவிடப்பட்டிருக்கிறது.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

மேலும், இந்தப் பொங்கல் பரிசுத்தொகுப்பு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கை தமிழர் மறுவாழ் முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் வழங்க முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டிருக்கிறார். இதனடிப்படையில், பொங்கல் பரிசு வழங்குவதற்கான டோக்கன் 3.1.2023 முதல் 8.1.2023 வரை வழங்கப்படும். பொங்கல் பரிசு 9.1.2023 அன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வழங்கப்படும்" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.