Published:Updated:

'இனி குர்ப்ரீத் சிங்தான் கவனிப்பார்!' - தன் தொகுதிக்கு பிரதிநிதியை நியமித்த பி.ஜே.பி எம்.பி

ர.முகமது இல்யாஸ்

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் மாநில அமைச்சர் சுக்ஜிந்தர் சிங் ரந்தவா, "இது தனக்கு வாக்களித்த குர்தாஸ்பூர் தொகுதி மக்களுக்கு, சன்னி தியோல் செய்திருக்கும் துரோகம்!" என்று கூறியுள்ளார்.

பிரதமர் மோடியுடன் சன்னி தியோல்
பிரதமர் மோடியுடன் சன்னி தியோல் ( Twitter )

பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான பிரபல நடிகர் சன்னி தியோல் தனது தொகுதி விவகாரங்களை, குர்ப்ரீத் சிங் பல்ஹேரி என்ற தனது பிரதிநிதி கவனித்துக் கொள்வார் என அறிவித்துள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியோல் கடந்த ஏப்ரல் மாதம் பி.ஜே.பியில் இணைந்தார். பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூர் தொகுதியில் பி.ஜே.பி சார்பில் போட்டியிட்ட அவர், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சுனில் ஜாகரை விட 82 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்று, நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மோடி
மோடி

இந்நிலையில், சன்னி தியோல், நேற்று தனது கடிதத்தில், 'நான் இந்தக் கடிதத்தின் மூலம், குர்ப்ரீத் சிங் பல்ஹேரி என்பவரை எனது தொகுதி நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், தொகுதி விவகாரங்களைக் கவனிக்கவும் அதிகாரம் அளித்து, எனது பிரதிநிதியாக நியமிக்கிறேன்' என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது எதிர்க்கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சன்னி தியோல் தனக்கு பிரதிநிதி நியமித்ததைக் கண்டித்த பஞ்சாப் காங்கிரஸ் அமைச்சர் சுக்ஜிந்தர் சிங் ரந்தவா, "மக்கள் சன்னி தியோலைத் தங்கள் பிரதிநிதியாகத் தேர்தலில் தேர்ந்தெடுத்துள்ளனர். எப்படி அவர் தனக்கு மற்றொரு பிரதிநிதியை நியமிக்க முடியும்? இது தனக்கு வாக்களித்த குர்தாஸ்பூர் தொகுதி மக்களுக்கு, சன்னி தியோல் செய்திருக்கும் துரோகம்!" என்று கூறியுள்ளார்.

சன்னி தியோல்  எழுதிய கடிதம்
சன்னி தியோல் எழுதிய கடிதம்

இதைப் பற்றி, சன்னி தியோல் நியமித்த பிரதிநிதியான குர்ப்ரீத் சிங் பல்ஹேரி, 'சன்னி தியோலின் கடிதம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. சன்னி தியோல், குர்தாஸ்பூர் தொகுதி பி.ஜே.பி.யினர் ஆகியோர் தொகுதி நலனுக்காகத் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இந்தக் கடிதம், தொகுதியின் பிரச்னைகளை, 24 மணி நேரமும் நேரடியாகக் கவனித்துக் கொள்வதற்காக மட்டுமே' என விளக்கம் அளித்துள்ளார்.

சன்னி தியோல் தனது பிரதிநிதியாக நியமித்த குர்ப்ரீத் சிங் பல்ஹேரி பஞ்சாப் திரைப்பட இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் உள்ளார்.