குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. அதனால், அடுத்த குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றன. எதிர்க்கட்சிகள் சார்பில் சரத் பவார் உள்ளிட்ட மூத்த எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டு யஷ்வந்த் சின்ஹாவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்தனர்.
அதைத் தொடர்ந்து ஆளும் பா.ஜ.க கூட்டணி சார்பாக, குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில், பிஜு ஜனதா தள கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், ஒடிசா முதல்வருமான நவீன் பட்நாயக், தனது ட்விட்டர் பக்கத்தில் ,"ஒடிசாவின் மகள் திரௌபதி முர்முவை நாட்டின் மிக உயர்ந்த பதவியான குடியரசுத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்க, கட்சி எல்லைகளைக் கடந்து, ஒடிசா சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஒருமனதாக ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" எனப் பதிவிட்டிருக்கிறார்.
முன்னதாக, நவீன் பட்நாயக் பதிவிட்ட ட்வீட்டில், ``மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி ஜி என்னுடன் இது குறித்து விவாதித்தபோது நான் மகிழ்ச்சியடைந்தேன். ஒடிசா மக்களுக்கு இது உண்மையிலேயே பெருமையான தருணம்" என்று முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
