Published:Updated:

`விரும்பும் தேதியில் ஸ்ரீநகர் செல்லுங்கள்; தாயைக் காணுங்கள்!' - இல்டிஜா முப்திக்கு கிரீன் சிக்னல்

பிரேம் குமார் எஸ்.கே.

இந்நிலையில் தன் தாயை சந்திக்க அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனுவை தாக்கல் செய்தார்.

 Iltija Mufti
Iltija Mufti ( Twitter )

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் நீக்கியது. இதன் காரணமாக காஷ்மீரில் வன்முறை வெடிக்கலாம் என்னும் கருத்தால் காஷ்மீர் மாநில முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். காஷ்மீருக்கு வெளியே இருக்கும் காஷ்மீரைச் சேர்ந்தவர்களும் காஷ்மீருக்குள் செல்ல முடியாமல் தவித்தனர்.

Jammu Kashmir
Jammu Kashmir

காஷ்மீரில் காவலில் இருக்கும் தலைவர்கள் நிலை குறித்து அவ்வப்போது எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால், மத்திய அரசின் தரப்பிலும் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் தரப்பிலும் மீண்டும் மீண்டும் சொல்லப்படும் விஷயம், பாதுகாப்புக் காரணங்களுக்காக அவர்கள் சிறைவைக்கப்பட்டுள்ளனர் என்பதுதான்.

இந்நிலையில், கடந்த ஒரு மாததுக்கும் மேலாகக் காவலில் இருக்கும் தனது தாயை சந்திக்க அனுமதிகோரி ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் இளைய மகள் இல்டிஜா முப்தி தொடர்ந்து போராடி வந்தார். இது தொடர்பாக அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதமும் எழுதினார்.

Mehbooba Mufti
Mehbooba Mufti

இந்நிலையில், தன் தாயை சந்திக்க அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

விசாரணையின் முடிவில் இல்டிஜா முப்தி, தான் விரும்பும் தேதியில் ஸ்ரீ நகர் செல்லலாம் என்றும் அவர் தன் தாயைச் சந்திக்கத் தடை எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின்போது, `ஸ்ரீநகரில் இருக்கும் உங்களின் தாயை சந்திக்கும் முயற்சியில் ஏதேனும் சிக்கல் இருக்கிறதா?' என்று இல்டிஜாவிடம் நீதிபதிகள் கேட்டனர்.

Supreme Court
Supreme Court
Vikatan

இதற்கு இல்டிஜா முப்தி தரப்பில், கடந்த முறை ஸ்ரீநகர் சென்றபோது தன் தாயை சந்திக்க அனுமதிக்கவில்லை என்றும் தன்னை வீட்டில் இருந்து வெளியே செல்லவும் அனுமதிக்கவில்லை என்றும் தெரிவித்தார். தொடர்ந்து, இல்டிஜா முப்தி தரப்பில் இருந்து, ஸ்ரீநகரில் சுதந்திரமாகச் செயல்படவும் அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெற்று செயல்படுங்கள் என்று தெரிவித்தனர்.

`டியர் அமித் ஷா; இப்படிக்கு இல்டிஜா முப்தி’ - மெகபூபா முப்தி மகளின் வேதனை கடிதம்

கடந்த வாரம் சீதாராம் யெச்சூரி, காஷ்மீரில் சிறைவைக்கப்பட்ட தன் நண்பர் முகமது யூசஃபை காண வேண்டும் என உச்ச நீதிமன்றம் மூலம் அனுமதி பெற்று சென்று வந்தார். ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் தொடரப்பட்ட மூன்றாவது ஹேபியஸ் கார்பஸ் மனு இல்டிஜா முப்தி தாக்கல் செய்த மனு என்பது குறிப்பிடத்தக்கது. இல்டிஜா முஃப்தி, தற்போது சென்னையில் இருக்கிறார்.