Published:Updated:

எடியூரப்பா அடித்தது சிக்ஸரா... கேட்சா? தகிக்கும் கர்நாடக அரசியல்

ந.பொன்குமரகுருபரன்

ஆட்சிக் கவிழ்ப்பை நோக்கி நகர்ந்துள்ளது, கர்நாடகாவின் குமாரசாமி அரசு. ஆட்சியைத் தக்கவைக்க அனைத்து அஸ்திரங்களையும் எய்ய காங்கிரஸ் தயாராக இருக்கிறது. ஜெயிக்கப்போவது யார்?

எடியூரப்பா, குமாரசாமி
எடியூரப்பா, குமாரசாமி

காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா குறித்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமாவில் குறிப்பிட்ட காலவரையறைக்குள் முடிவெடுக்குமாறு சபாநாயகரை நிர்பந்திக்க முடியாது எனத் தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், நாளை நடைபெறும் நம்பிக்கைத் தீர்மானத்தில் கலந்துகொள்ளுமாறு அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை வற்புறுத்தக் கூடாது என்றும் தீர்ப்பளித்துள்ளது. இதனால், ஆட்சியைத் தக்கவைப்பதில் குமாரசாமி அரசுக்கு சிக்கல் எழுந்துள்ளது.

குமாரசாமி
குமாரசாமி

கர்நாடகாவில் மொத்த எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 224. இதில் 113 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருந்தால் ஒரு கட்சி ஆட்சியமைக்க முடியும். சபாநாயகர் உட்பட 79 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் 37 எம்.எல்.ஏ-க்கள், ஒரு சமாஜ்வாதி எம்.எல்.ஏ என 117 பேரின் ஆதரவுடன் குமாரசாமி அரசு நடைபெறுகிறது. பி.ஜே.பி-க்கு 105 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். இதுபோக, கே.பி.ஜி.பி. கட்சி, சுயேச்சை எனத் தலா ஒருவர் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஜூலை 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில், 3 ம.ஜ.த., 13 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் என 16 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால், சட்டமன்றத்தில் மொத்த எம்.எல்.ஏ-க்களின் பலம் 208 ஆகக் குறைந்ததுடன், ஆட்சியைத் தக்கவைக்க 105 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கிடைக்காமல் குமாரசாமி அரசுக்கு நெருக்கடி எழுந்தது. ஆட்சி பறிபோய்விட்டால், 105 எம்.எல்.ஏ-க்கள் பலமுள்ள பி.ஜே.பி, தனித்தே கர்நாடகாவில் ஆட்சியமைக்க முடியும்.

கர்நாடகா சட்டமன்றம்
கர்நாடகா சட்டமன்றம்

ஆட்சியைத் தக்கவைக்க தமிழ்நாடு பாணியில், அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்வதற்கு காங்கிரஸ் காய் நகர்த்தியது. அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா கடிதத்தில் எந்த முடிவையும் எடுக்காமல், சபாநாயகர் ரமேஷ் குமார் காலம் தாழ்த்தினார். இதனை எதிர்த்து அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் பத்து பேர் உச்சநீதிமன்றம் சென்றனர். இவ்வழக்கில்தான் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், தீபக் குப்தா, அனிருதா போஸ் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இன்று இடைக்காலத் தீர்ப்பளித்துள்ளது.

‘ராஜினாமா கடிதத்தில், குறிப்பிட்ட காலவரையறைக்குள் முடிவெடுக்குமாறு சபாநாயகரை நீதிமன்றம் நிர்பந்திக்க முடியாது’ எனத் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ‘ராஜினாமா செய்த அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள், நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளுமாறு யாரும் வற்புறுத்தக் கூடாது’ எனவும் தீர்ப்பளித்துள்ளது.

எடியூரப்பா
எடியூரப்பா

இதனிடையே, சம்பந்தப்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்வதுகுறித்து எந்தத் தடையையும் உச்ச நீதிமன்றம் விதிக்காததால், ஆட்சியைக் காப்பாற்ற காங்கிரஸ் அந்நடவடிக்கையை எடுக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஒருவேளை ஆட்சி பறிபோகும் சூழல் ஏற்பட்டால், பதவியை ராஜினாமா செய்யும் மனநிலைக்கு குமாரசாமி வந்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீர்ப்பு குறித்து நம்மிடம் பேசிய அரசியல் சாசன நிபுணரும், கணேஷ் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனருமான கணேஷ், “சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிட முடியாது என்கிற விஷயத்தை, உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இதுவே, அரசியல் சாசன விதிமீறல் என்றால், உச்ச நீதிமன்றம் தலையிடலாம்.

கணேஷ்
கணேஷ்

இத்தீர்ப்பால் ஆளும் கர்நாடகா அரசுக்கு ஆபத்து எழுந்துள்ளது. நாளை நம்பிக்கைத் தீர்மானம் கொண்டுவரப்படும் நிலையில், ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ளும் அளவுக்கு குமாரசாமிக்கு எண்ணிக்கை இல்லை. ஆட்சி கவிழும் சூழலே அதிகம்.” என்றவரிடம், “இதே தீர்ப்பு ஓ.பி.எஸ் உட்பட 11 எம்.எல்.ஏ-க்கள் மீதான தகுதிநீக்க வழக்கிலும் எதிரொலிக்குமா?” என்றோம்.

“இரண்டு வெவ்வேறு அடிப்படையிலான வழக்குகள். கர்நாடகா விவகாரத்தில் சபாநாயகரின் அதிகாரத்தையும் உரிமையையும் உச்சநீதிமன்றம் நிலைநாட்டியுள்ளது. ஓ.பி.எஸ் வழக்கைப் பொறுத்தவரையில், அ.தி.மு.க கொறடா வெளியிட்ட உத்தரவுக்கு எதிராக ஓ.பி.எஸ் உட்பட 11 பேர் எதிர்த்து வாக்களித்துள்ளனர்.

எடியூரப்பா அடித்தது சிக்ஸரா... கேட்சா? தகிக்கும் கர்நாடக அரசியல்

இதன்மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது அப்பட்டமான விதிமீறல். கர்நாடகாவில் எடியூரப்பா வழக்கிலும், கோவாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் தொடர்பான வழக்கிலும் சபாநாயகரின் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆகவே, இரண்டு வழக்குகளையும் பொருத்திப் பார்க்கக் கூடாது” என்றார்.

இதேநிலை நீடித்தால், ஆட்சியைப் பிடிக்க பி.ஜே.பி-க்கு 24 மணிநேரமே இருக்கும் நிலையில், அக்கட்சித் தலைவர் எடியூரப்பா தன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் கிரிக்கெட் விளையாடி குஷியாகியுள்ளார். பெங்களூருவில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ள பி.ஜே.பி எம்.எல்.ஏ-க்களுடன் எடியூரப்பா கிரிக்கெட் விளையாடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகின்றன.

`எம்.எல்.ஏ-க்களுடன் `ஜாலி’ கிரிக்கெட்!’ - இது எடியூரப்பா ஆட்டம்!

அரசியலில் எடியூரப்பா அடித்தது சிக்ஸரா அல்லது கேட்சா? என்பது நாளை தெரிந்துவிடும்.