Published:Updated:

ரஃபேல் மனு தள்ளுபடி; ராகுல் காந்தி வழக்கு முடித்துவைப்பு!- உச்ச நீதிமன்றத்தின் அடுத்தடுத்த தீர்ப்புகள்

ரஃபேல் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ரஃபேல் போர் விமானம்
ரஃபேல் போர் விமானம்

ரஃபேல்... இந்தியாவில் இந்தப் பெயரை கேள்விப்படாதவர்களே இருக்க முடியாது. அதற்குக் காரணம், ஒன்று, ரஃபேல் போர் விமானத்தின் தன்மை. மற்றொன்று, இந்தப் போர் விமானத்தை வாங்குவதற்காகப் போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறிய குற்றச்சாட்டு.

மன்மோகன் சிங்
மன்மோகன் சிங்

ரஃபேல் விவகாரம் காங்கிரஸ் ஆட்சியிலிருந்து தற்போது வரை பேசப்பட்டு வருகிறது. 2007-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவை வலுப்படுத்தும் நோக்கில் பிரான்ஸிடமிருந்து 126 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்தம், 2012-ல் இறுதிசெய்யப்பட்டது.

இதில், பறக்கத் தயாரான நிலையில் உள்ள 18 ரஃபேல் போர் விமானங்களை இறக்குமதி செய்யவும் மீதமுள்ள 108 ரஃபேல் போர் விமானங்களை பிரான்ஸ் நாட்டின் `டசால்ட்' விமான நிறுவனம் மற்றும் பெங்களூரில் உள்ள ஹிந்துஸ்தான் விமான நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவிலேயே கட்டமைக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது.

ரஃபேல் போர் விமானம்
ரஃபேல் போர் விமானம்

2014-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு, 126 ரஃபேல் விமானங்கள் வாங்க ஏற்படுத்திவைத்திருந்த ஒப்பந்தத்திலிருந்து சில காரணங்களால் பின்வாங்கியது. ஆனால், 126 ரஃபேல் போர் விமானங்களுக்குப் பதிலாக, பறக்கத் தயாரான நிலையில் உள்ள 36 ரஃபேல் விமானங்களை வாங்க மோடி அரசு முடிவுசெய்தது. இது தொடர்பான ஒப்பந்தத்தில், 36 விமானங்களுக்கு 59,000 கோடி ரூபாய் தரவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

Vikatan

இந்த ஒப்பந்தம் வெளியான சில மாதங்களிலேயே காங்கிரஸ் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. குறிப்பாக, விமானம் அதிக விலைக்கு வாங்கப்படுகிறது எனவும், இதன் காரணமாக, பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும், ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனம், இந்த ஒப்பந்தத்துக்காக வெறும் 10 நாள்களுக்கு முன்புதான் தொடங்கப்பட்டது எனவும் கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூறியது காங்கிரஸ். இதன்பிறகு ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்பியது. ரஃபேல் ஆவணங்கள் திருப்பட்டது என பல்வேறு தொடர் சர்ச்சைகளும் கிளம்பின.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

இதையடுத்து, ரஃபேல் ஊழல் தொடர்பாக, விசாரணை நடத்த வேண்டும் என்று வழக்கறிஞர்கள் எம்.எல்.சர்மா, வினீத் தாண்டா, ஆம் ஆத்மியைச் சேர்ந்த சஞ்சய் சிங் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அதேபோல், `இதுதொடர்பாகப் புலனாய்வுத் துறை விசாரணை வேண்டும்' என காங்கிரஸ் கட்சி சார்பில் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி மற்றும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர்.

Vikatan

இந்த வழக்கு விசாரணையில் மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையில், `ரஃபேல் ஒப்பந்தத்தில் எந்த இழப்பும் ஏற்படவில்லை என சி.ஏ.ஜி அறிக்கை கொடுத்துள்ளது. அது, நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது' என தெரிவித்தது. இறுதியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, ``ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை" எனச் சொல்லி மனுக்களைத் தள்ளுபடி செய்தது.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

இதையடுத்து, மத்திய அரசு கொடுத்த அறிக்கை தவறானது எனக்கூறி பிரசாந்த் பூஷண், யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்டோர் மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் ஆஜரான மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், ``ராணுவ அமைச்சகத்திடமிருந்த ரஃபேல் போர் விமானம் பேரம் தொடர்பான அதிமுக்கிய ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன” என கூறினார்.

இதில் , `திருடப்பட்ட ஆவணங்கள் என்றால், அதில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துவிட முடியுமா?' என்று உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியதுடன், `அந்த ஆவணங்கள் அடிப்படையில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்' என்றும் கூறியது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, `ரஃபேல் விவகாரத்தில், தன்னைக் குற்றமற்றவர் என மோடி சொல்லிக்கொண்டிருக்கிறார். புதிய ஆவணங்களின் அடிப்படையில், விசாரணை நடத்த சம்மதித்ததன்மூலம் நாட்டின் காவலாளியான பிரதமர் மோடியை, திருடன் என உச்ச நீதிமன்றம் கருதுகிறது என்பதாகத்தான் பொருள்படுகிறது’ என தேர்தல் பிரசாரத்தில் பேசியிருந்தார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

பிரதமரை, `திருடன்' என ராகுல் காந்தி கூறியது பா.ஜ.க-வினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் உச்சநீதிமன்றம் சொல்லாத ஒரு கருத்தை ராகுல் காந்தி தெரிவித்ததாகக் கூறி அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. ரஃபேல் மறுசீராய்வு மனு மற்றும் ராகுல் மீதான நீதிமன்ற அவமதிப்பு ஆகிய இரண்டு வழக்குகளிலும் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ரஃபேல் விவகாரம் தொடர்பாக பிரசாந்த் பூஷண், யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து இன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ராகுல் காந்தி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், `வருங்காலத்தில் ராகுல் காந்தி கவனமாக பேசவேண்டும்’ என எச்சரிக்கையைவிடுத்து அவர் மீதான வழக்கையும் முடித்துவைத்துள்ளது உச்சநீதிமன்றம்.