Published:Updated:

அன்று கர்நாடகா... இன்று மகாராஷ்டிரா! - நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்புமா பா.ஜ.க?

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நாளை மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிரா
மகாராஷ்டிரா

தேர்தல் முடிவுகள் வந்து ஒரு மாதத்துக்கும் மேலாகவும் புதிய அரசு அமையாமல் தவித்துவந்தது மகாராஷ்டிரம். கூட்டணி அமைத்து போட்டியிட்ட ஆளும் பா.ஜ.க - சிவசேனா கூட்டணி முறையே 105, 56 இடங்களையும், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் முறையே 44, 54 இடங்களையும் கைப்பற்றின. பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் கிடைத்தபோதும் ஆட்சிப் பங்கீட்டில் சரியான உடன்படிக்கை எட்டப்படாததால் பா.ஜ.க - சிவசேனா கூட்டணி முறிந்தது.

அரசியல் கட்சிகள்
அரசியல் கட்சிகள்

இதைத் தொடர்ந்து சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வைத்து ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதற்குள்ளாக மகாராஷ்டிர மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஒருபுறம் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்றுவந்தது. கூட்டணி அரசுக்கு உத்தவ் தாக்கரே முதல்வராக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது. மூன்று கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோரவிருந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக சனிக்கிழமை அதிகாலை பட்னாவிஸ் முதல்வராகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 54 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு தனக்கு இருப்பதாக அஜித் பவார் தெரிவித்தார்.

`நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு; நேரடி ஒளிபரப்பு!'- மகாராஷ்ட்ரா அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

இதைத்தொடர்ந்து மூன்று கட்சிகள் கூட்டணி உச்சநீதிமன்றத்தை அணுகின. பெரும்பான்மை இல்லாமல் பட்னாவிஸ் பதவியேற்றது சட்டவிரோதம் என்றும் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரினர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ள உச்சநீதிமன்றம் நாளை மாலை 5 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் அதை நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

ஃப்ளாஷ்பேக் கர்நாடகம்:

கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலிலும் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜ.க ஆட்சிக்கு வருவதைத் தடுக்க மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்தது காங்கிரஸ். ஆனால், ஆளுநர் பா.ஜ.க-வை ஆட்சி அமைக்க அழைத்ததோடு மட்டுமல்லாமல், பெரும்பான்மையை நிரூபிக்க ஏழு நாள்கள் கேட்கப்பட்டதற்கு, மாறாக 15 நாள்கள் அளித்தார். இதை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தின் கதவுகள் தட்டப்பட அவசர வழக்காக நள்ளிரவே விசாரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் மறுநாள் மாலையே சட்டப்பேரவையைக் கூட்டி பா.ஜ.க பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

`அமித் ஷாவால்தான் எல்லாம் நடந்தது’- பா.ஜ.க ரகசியத்தைப் போட்டு உடைத்த எடியூரப்பா?

இடைக்கால சபாநாயகர் நியமிக்கப்பட வேண்டும், ரகசிய வாக்கெடுப்பு கூடாது, வாக்கெடுப்பை நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என தற்போதைய மகாராஷ்டிரா வழக்கின் ஃப்ளாஷ்பேக்காக இருந்தது கர்நாடக வழக்கு. நம்பிக்கை வாக்கெடுப்புக்காக சட்டமன்றம் கூடியபோது நீண்ட உரை நிகழ்த்திய முதல்வர் எடியூரப்பா பெரும்பான்மையை தன்னால் நிரூபிக்க இயலாது எனக்கூறி நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளாமல் பதவியை ராஜினாமா செய்யப்போவதாகக் கூறி சட்டப்பேரவையிலிருந்து வெளியேறினார். அதைத் தொடர்ந்து குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சி அமைத்தது.

கர்நாடக நம்பிக்கை வாக்கெடுப்பு
கர்நாடக நம்பிக்கை வாக்கெடுப்பு

தற்போது மகாராஷ்டிரமும் இதேபோன்றதொரு சூழ்நிலையை எதிர்நோக்கியுள்ளது. இரண்டு தரப்பும் தங்களுக்கு பெரும்பான்மை உள்ளதாகக் கூறிவருகிறது. பட்னாவிஸ் இன்னொரு எடியூரப்பா ஆவாரா? உத்தவ் தாக்கரே இன்னொரு குமாரசாமி ஆவாரா? நாளை மாலை தெரிந்துவிடும்.