Published:Updated:

`நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு; நேரடி ஒளிபரப்பு!'- மகாராஷ்ட்ரா அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

மகாராஷ்ட்ரா சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நாளையே (27.11.2019) நிரூபிக்க வேண்டும் எனத் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

மகாராஷ்ட்ராவில் மொத்தமுள்ள 288 இடங்களில் பா.ஜ.க 105 இடங்களிலும் சிவசேனா 56 இடங்களிலும் வென்றிருக்கின்றன. சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும் வெற்றிபெற்றன. தேர்தலுக்குப் பின் பா.ஜ.க - சிவசேனா கூட்டணி முறிந்தது. இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைக்க சிவசேனா முயற்சி செய்தது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் மிகப்பெரும் திருப்பமாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக இருந்த அஜித் பவார், பா.ஜ.க-வுக்கு ஆதரவு தெரிவித்தார். தங்களுக்குப் பெரும்பான்மை இருப்பதாகக் கூறி பா.ஜ.க-வின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும் அஜித் பவார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

பட்னாவிஸ் - அஜித் பவார்
பட்னாவிஸ் - அஜித் பவார்

இதை எதிர்த்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மகாராஷ்ட்ராவில் பா.ஜ.க-வை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தது தவறு என்றும் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை உடனே நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தன. இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரமணா, அஷோக் பூஷன் மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அமர்வு, உரிய உத்தரவு இன்று (26.11.2019) வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது.

`இது ஒன்றும் கோவா அல்ல;   மகாராஷ்டிரா!’- கூட்டணி எம்.எல்.ஏ-க்கள் அணிவகுப்பில் சரத் பவார் #WeAre162

அதன்படி, இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. அதில், மகாராஷ்ட்ர சட்டப்பேரவையில் நாளை (27.11.2019) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டடுள்ளனர்.

உத்தவ் தாக்கரே - சரத் பவார்
உத்தவ் தாக்கரே - சரத் பவார்

மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். மேலும், ரகசிய வாக்கெடுப்பாக அல்லாமல் வெளிப்படையான வாக்கெடுப்பாக இருக்க வேண்டும் எனவும் நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்வை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். இன்று மாலைக்குள் இடைக்கால சபாநாயகரைத் தேர்வு செய்ய வேண்டும். எம்.எல்.ஏக்கள் நாளை பதவியேற்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.