Published:Updated:

பேரறிவாளன்: `19 வயதில் `சிறு விசாரணை' தொடங்கி 31 ஆண்டுகால சிறைவாசம் வரை!' - விடுதலை ஒரு பார்வை

அற்புதம் அம்மாள் - பேரறிவாளன்

சிறையிலிருந்தபடியே பேரறிவாளன் பி.சி.ஏ., எம்.சி.ஏ படிப்புகளை முடித்தார். ஐந்துக்கும் மேற்பட்ட சான்றிதழ் படிப்புகளையும் முடித்துள்ளார். மேலும்...

பேரறிவாளன்: `19 வயதில் `சிறு விசாரணை' தொடங்கி 31 ஆண்டுகால சிறைவாசம் வரை!' - விடுதலை ஒரு பார்வை

சிறையிலிருந்தபடியே பேரறிவாளன் பி.சி.ஏ., எம்.சி.ஏ படிப்புகளை முடித்தார். ஐந்துக்கும் மேற்பட்ட சான்றிதழ் படிப்புகளையும் முடித்துள்ளார். மேலும்...

Published:Updated:
அற்புதம் அம்மாள் - பேரறிவாளன்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 31 ஆண்டுகளாகச் சிறைவாசம் அனுபவித்து வந்த ஏ.ஜி.பேரறிவாளனை விடுதலைசெய்து உச்ச நீதிமன்றம் இன்று (மே 18) தீர்ப்பளித்தது. ஆளுநர் முடிவெடுக்கத் தாமதப்படுத்தியதால் 142-வது சட்டப்பிரிவைப் பயன்படுத்தி இந்தத் தீர்ப்பை வழங்குவதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக பேரறிவாளன், நளினி, முருகன் உட்பட 25 பேர் கைதுசெய்யப்பட்டனர்; இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான சிவராசனுக்கு, மனிதவெடிகுண்டை வெடிக்கச் செய்வதற்காக 9 வோல்டேஜ் கொண்ட இரண்டு பேட்டரி செல் வாங்கிக் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் பேரறிவாளன் கைதுசெய்யப்பட்டார். ‘சிறு விசாரணைக்காக’ அழைத்துச் செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு இவ்வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. 2011-ம் ஆண்டு செப்டம்பர் 9-ல் பேரறிவாளனுக்குத் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படவிருந்த நிலையில், அது தள்ளிவைக்கப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பேரறிவாளனின் விடுதலைக்காக அவரது தாயார் அற்புதம்மாள், 30 ஆண்டுகளாகத் தொடர் போராட்டங்களை மேற்கொண்டுவந்தார். பேரறிவாளனின் விடுதலைக்காக தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள், அமைப்புகளும், தமிழ் ஆர்வலர்களும் ஆதரவு தெரிவித்துவந்தனர். 2014-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் ஏழு பேரையும் விடுவிக்க முடிவுசெய்து, மத்திய அரசிடம் கருத்து கேட்டார். அப்போதிருந்த மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் உடனடியாக உச்ச நீதிமன்றம் சென்றது. இந்த மனுவை விசாரித்த ஐந்து பேர் கொண்ட அமர்வு, ‘மத்திய அரசின் ஒப்புதல் வேண்டும்' என்று தீர்ப்பளித்தது. அதே நேரம், மாநில அரசுக்கு உள்ள அதிகாரம் மூலம், அரசமைப்புச் சட்டத்தின் இறையாண்மை அதிகாரம் 161-வது பிரிவின் கீழ் விடுதலை செய்தால் மத்திய அரசிடம் ஒப்புதல் வாங்கவேண்டிய அவசியமில்லை என வழிகாட்டியது.

இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு பேரறிவாளன் உள்ளிட்ட நால்வரின் கருணை மனு மீது எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம், அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. இதனைத் தொடர்ந்து, தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் சார்பில் 2016-ம் ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடும் செய்யப்பட்டது. இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி பேரறிவாளன் தனி மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

பேரறிவாளன்
பேரறிவாளன்

2016-ம் ஆண்டு அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது ஜெயலலிதாவை நேரில் சந்தித்து மகனை விடுவிக்கக் கோரிக்கை விடுத்தார் அற்புதம்மாள். ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு, 2018-ம் ஆண்டில் அரசமைப்புச் சட்டத்தின் இறையாண்மை அதிகாரத்தில் விடுதலை செய்ய முடிவெடுத்து தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு. பேரறிவாளனை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் ஆட்சேபம் தெரிவிக்காத நிலையில், அவரது விடுதலைக் கோப்பு தமிழக அரசு, தமிழக ஆளுநர், குடியரசுத் தலைவர், மத்திய அரசு என மாறி மாறிச் சென்றதே தவிர, முடிவெடுக்கப்படாமலேயே இருந்துவந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிறையிலிருந்தபடியே பேரறிவாளன் பி.சி.ஏ., எம்.சி.ஏ படிப்புகளை முடித்தார். ஐந்துக்கும் மேற்பட்ட சான்றிதழ் படிப்புகளையும் முடித்துள்ளார். மேலும், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் Desktop Publishing டிப்ளோமா படிப்பில் முதல் மாணவராகத் தேர்ச்சிபெற்று தங்கப் பதக்கம் வென்றார். தான் எழுதிய, ‘தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்' என்ற நூலில், தான் நிரபராதி என்பதற்கான ஆதாரங்களை தர்க்கங்களின் அடிப்படையில் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தன் இளமை முழுவதையும் சிறையில் கழிக்க நேர்ந்த பேரறிவாளன் பல்வேறு உடல்நலக் கோளாறுகளுக்கு உள்ளானார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் பேரறிவாளனின் சிறைவாசம் 31-ம் ஆண்டை எட்டியிருந்த நிலையில், தனது மகனை நிரந்தரமாக விடுதலை செய்யவதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு, முதல்வர் ஸ்டாலினுக்கு அற்புதம்மாள் கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கிலிருந்து தன்னை விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் தாக்கல் செய்திருந்த மனுவில், 2022-ம் ஆண்டு மார்ச் மாதம், பேரறிவாளனுக்கு முதல் முறையாக ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
பேரறிவாளன்
பேரறிவாளன்

இந்தப் பின்னணியில், பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரும் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்துவந்தது. மத்திய, மாநில அரசுகள் முன்வைத்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், “இந்த வழக்கில் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே முடிவு எடுக்கும் உரிமை உள்ளது என்ற மத்திய அரசின் வாதத்தை ஏற்க முடியாது. இந்த விவகாரம் மாநில அரசு தொடர்பானது. அதனால் மாநில அரசுக்கே இதில் முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது. ஆளுநர் தனக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை வைத்து அமைச்சரவை எடுக்கும் முடிவை மதிக்காமல் இருப்பது சரியல்ல” எனக் கடுமையாகச் சாடியிருந்தனர். மேலும், “மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு எப்படி அனுப்பலாம்?” என்று கேள்வி எழுப்பியிருந்த நீதிபதிகள், “பேரறிவாளன் ஆயுள் தண்டனைக் கைதி என்பதால் அவரின் விடுதலையில் ஆளுநர்தான் ஒப்புதல் அளிக்கவேண்டும். அதை அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது தவறு" என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக, “பேரறிவாளனை யார் விடுதலை செய்வது என்ற அதிகார மோதலுக்கு இடையில் பேரறிவாளன் ஏன் சிக்கித் தவிக்க வேண்டும்?” என கேள்வியெழுப்பிய நீதிபதிகள், “அவரை ஏன் நாங்களே விடுதலை செய்யக் கூடாது" என்றும் வினவியிருந்தனர். “அமைச்சரவை முடிவெடுத்த விவகாரத்தில், ஆளுநர் முடிவெடுக்க வேண்டிய அவசியமே இல்லை. இந்த விவகாரத்தில் ஆளுநரின் அதிகாரம் குறித்து முடிவெடுக்கப் போகிறோம்” என்று காட்டமாகக் கருத்து தெரிவித்திருந்த நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் மே 11-ம் தேதி ஒத்திவைத்தனர்.

இந்தப் பின்னணியில் தான், நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வு உச்ச நீதிமன்ற அமர்வு, உச்ச நீதிமன்றத்துக்கு இருக்கும் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுவிப்பதாகத் தீர்ப்பளித்தது. ஆளுநர் முடிவெடுக்கத் தாமதப்படுத்தியதால் 142-வது சட்டப்பிரிவைப் பயன்படுத்தி இந்தத் தீர்ப்பை வழங்குவதாக நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருக்கின்றனர்.
பேரறிவாளன் குடும்பம்
பேரறிவாளன் குடும்பம்
1991-ம் ஆண்டு, ஜூன் மாதம் 11-ம் தேதி பேரறிவாளன் என்கிற அறிவு கைதுசெய்யப்பட்டபோது அவருக்கு வயது 19. சுமார் 32 ஆண்டுகால சிறைவாசத்துக்குப் பிறகு வரலாற்றுச் சிறப்புமிக்க உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு பேரறிவாளனை சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கச் செய்திருக்கிறது. பேரறிவாளனின் தாய் அற்புதம்மாளின் தியாகப் போராட்டம் வரலாற்றில் இடம்பெற்றிருக்கிறது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism