Published:Updated:

`சிபிஐ, அமலாக்கத்துறையை ஏவும் பாஜக..!' - 14 எதிர்க்கட்சிகளின் மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம் - எதிர்க்கட்சிகள்

``சி.பி.ஐ., அமலாக்கத்துறையின் 95 சதவிகித வழக்குகள் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிரானவை. இது அரசியல் பழிவாங்கலின் தெளிவான அறிகுறி" - எதிர்க்கட்சிகளின் மனுதாரர்

Published:Updated:

`சிபிஐ, அமலாக்கத்துறையை ஏவும் பாஜக..!' - 14 எதிர்க்கட்சிகளின் மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்

``சி.பி.ஐ., அமலாக்கத்துறையின் 95 சதவிகித வழக்குகள் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிரானவை. இது அரசியல் பழிவாங்கலின் தெளிவான அறிகுறி" - எதிர்க்கட்சிகளின் மனுதாரர்

உச்ச நீதிமன்றம் - எதிர்க்கட்சிகள்

எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள்மீது திட்டமிட்டு சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற மத்திய ஏஜென்சிகளைப் பா.ஜ.க ஏவுவதாக, 14 எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.

எதிர்க்கட்சிகள் - சிபிஐ, அமலாக்கத்துறை, பாஜக
எதிர்க்கட்சிகள் - சிபிஐ, அமலாக்கத்துறை, பாஜக

முன்னதாக, காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்ட், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் சார்பாக வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, எதிர்க்கட்சித் தலைவர்களைச் செயல்பட விடாமல் தடுக்கவும், பல்வேறு வழக்குகளில் அவர்களைச் சிக்க வைக்கவும் சி.பி.ஐ., அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய ஏஜென்சிகளை பா.ஜ.க திட்டமிட்டு ஏவுவதாக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ``கடந்த ஏழு ஆண்டுகளில் முந்தைய தசாப்தத்தைவிடவும் ஆறு மடங்கு அதிகமான வழக்குகளை அமலாக்கத்துறை பதிவுசெய்திருக்கிறது. ஆனால், அதில் தண்டனை விகிதம் என்பது 23 சதவிகிதம் மட்டுமே.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

சி.பி.ஐ., அமலாக்கத்துறையின் 95 சதவிகித வழக்குகள் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிரானவை. இது அரசியல் பழிவாங்கலின் தெளிவான அறிகுறி" எனப் புள்ளிவிவரங்களுடன் வாதிட்டார். அவரின் வாதத்தைக் கேட்ட நீதிமன்ற அமர்வு, இந்த வழக்கை விசாரிக்க ஏற்க மறுத்துவிட்டது.

அதுமட்டுமல்லாமல் இதில் சரமாரியாகக் கேள்வியெழுப்பிய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ``இந்தப் புள்ளிவிவரங்களால், அரசியல் தலைவர்களுக்கு விசாரணையிலிருந்து விலக்கு இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா... குடிமக்கள் என்ற முறையில் அனைத்து அரசியல்வாதிகளும் சட்டத்துக்கு உட்பட்டவர்கள்தான். அரசியல் தலைவர்கள் தங்களுக்கென உயர்மட்ட பாதுகாப்பைக் கோர முடியாது. அரசியல்வாதிகளுக்கென தனி வழிகாட்டுதல்களை நாங்கள் கொண்டிருக்க முடியாது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்

அரசியல் தலைவர்களும் நாட்டின் குடிமக்களைப் போலத்தான். அப்படியிருக்க அவர்களுக்கு மட்டும் எப்படி வேறுவிதமான நடைமுறை இருக்க முடியும். எனவே, அரசியல் தலைவர்களைக் குறிவைத்து ஏஜென்சிகள் பயன்படுத்தப்பட்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வழக்குகளுடன் மீண்டும் வாருங்கள். சட்டத்தின் அடிப்படையில், வழக்கின் உண்மைகள் தொடர்பான பொதுவான கொள்கைகளை நாங்கள் உருவாக்க முடியும். ஆனால், இது போன்ற குறிப்பிட்ட உண்மை இல்லாத நிலையில், பொதுவான வழிகாட்டுதல்களை உருவாக்க முயல்வது ஆபத்தாகும்" என்று கூறினார்.