Published:Updated:

``என் அம்மாவின் உழைப்பை உறிஞ்சிவிட்டேன் என்ற வேதனை எனக்கு இருக்கிறது’’ - உருகிய பேரறிவாளன்

பேரறிவாளன்

‘‘நீதி அமைப்பு முறையில் திறம்பட சட்டப் போராட்டம் நடத்தினால், ஏதோ ஒரு வகையில் வெற்றிபெறலாம். எதிர்காலம் குறித்த எல்லா கேள்விகளுக்கும் பின்னர் விடையளிக்கிறேன். மரண தண்டனை வேண்டாம் என்பதில் நம்பிக்கை உள்ளவன் நான்’’ என்கிறார் பேரறிவாளன்.

``என் அம்மாவின் உழைப்பை உறிஞ்சிவிட்டேன் என்ற வேதனை எனக்கு இருக்கிறது’’ - உருகிய பேரறிவாளன்

‘‘நீதி அமைப்பு முறையில் திறம்பட சட்டப் போராட்டம் நடத்தினால், ஏதோ ஒரு வகையில் வெற்றிபெறலாம். எதிர்காலம் குறித்த எல்லா கேள்விகளுக்கும் பின்னர் விடையளிக்கிறேன். மரண தண்டனை வேண்டாம் என்பதில் நம்பிக்கை உள்ளவன் நான்’’ என்கிறார் பேரறிவாளன்.

Published:Updated:
பேரறிவாளன்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு சுமார் 31 ஆண்டுகளாகச் சிறைவாசம் அனுபவித்துவந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் இன்று காலை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது. ஏற்கெனவே, பரோலில் வெளி வந்து திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையிலுள்ள தனது வீட்டில் தங்கியிருந்த பேரறிவாளனுக்குக் கடந்த மார்ச் மாதம், உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றமே விடுதலை செய்ததால், பேரறிவாளனை கட்டிப்பிடித்து குடும்பத்தினர் ஆனந்தக் கண்ணீரில் மகிழ்ந்தனர். தாய், தந்தையர் மற்றும் குடும்பத்தினருக்கு இனிப்பு ஊட்டி பேரறிவாளன் விடுதலையைக் கொண்டாடினார். இதையடுத்து, நீதியரசர் கிருஷ்ணய்யர், செங்கொடி ஆகியோரின் படங்களுக்கு மரியாதை செலுத்தினார். அப்போது, பேரறிவாளன் வீட்டின் முன்பு பட்டாசு வெடித்து பலர் விடுதலையைக் கொண்டாடினர்.

பேரறிவாளன்
பேரறிவாளன்

இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள், ``நீண்ட நாள்களாக செய்தியாளர்களைச் சந்திக்காமல் புறக்கணித்ததற்காக மன்னிப்புக் கேட்டுகொள்கிறோம். என்ன சொல்வதென்று தெரியாத தடுமாற்றம்தான். வேறொன்றும் இல்லை. இன்று உச்ச நீதிமன்றம் முழுமையாக விடுதலை செய்துள்ளது. 31 ஆண்டுக்காலம் ஒரு மனிதனின் வாழ்க்கை சிறைக்குள் கழிந்தது என்பதை ஒரு நிமிடம் உட்கார்ந்து யோசித்தால்தான், எங்களின் வலி, வேதனை என்னவென்று எல்லோருக்கும் புரியும். அதைக் கடந்து வந்துவிட்டான் என் பையன். தொடர்ந்து, இந்த அரசு பரோல் கொடுத்தது. நீதிமன்றம் பெயில் வழங்கியது. இதனால் அவனை அருகிலிருந்து கவனித்துகொள்ள முடிந்தது. இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துகொள்கிறேன். அதேபோல, விடுதலைக்காகக் குரல் கொடுத்த தலைவர்களுக்காகவும், முகம் தெரியாத எத்தனையோ பேருக்கும் நன்றி தெரிவித்துகொள்கிறேன்’’ என்றார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த பேரறிவாளன், ‘‘அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப்படும்’ என்பது குறள். அவ்விய நெஞ்சத்தான் ஆக்கம் என்பது கெட்டவன் மகிழ்ச்சியாகவும், சிறப்பாகவும் வாழ்வது. செவ்வியன் கேடு என்பது நல்லவர்கள் வீழ்ந்துபோவது. துன்பத்தில் வீழ்ந்துபோவது. இந்த இரண்டையுமே இந்த உலகம் நினைத்துப் பார்க்குமாம். ஏனென்றால், அது இயற்கையின் நீதி கிடையாது. நல்லவன் வாழ வேண்டும். கெட்டவன் வீழ வேண்டும். அதுதான் நியதி. அப்படித்தான் என்னுடைய 31 ஆண்டுக்காலச் சிறை வாழ்க்கையை இந்தத் தமிழ்நாட்டு மக்களும், உலகத் தமிழர்கள் எல்லாரும் நினைத்து ஆதரித்து அன்பு செலுத்தினார்கள். தங்களுடைய வீட்டில் ஒரு பிள்ளையாக என்னை நினைத்தார்கள். அதற்கெல்லாம் மூலகாரணம் அம்மாதான். என் அம்மா ஆரம்பகாலத்தில் நிறைய அவமானங்களைச் சந்தித்துள்ளார். 31 ஆண்டுக்காலம் இடைவிடாமல் எனக்காகப் போராடியிருக்கிறார். எங்கள் பக்கமிருந்த உண்மை, நியாயம்தான் எனக்கும் என் அம்மாவுக்கும் வலிமையைக் கொடுத்தன.

பேரறிவாளன்
பேரறிவாளன்

மாக்சிம் கார்க்கியின் `தாய்’ நாவலை நான் நான்கு முறை படித்துள்ளேன். 18, 19 வயதில் படித்துள்ளேன். சிறையில் அகப்பட்ட பிறகு படித்தேன். தூக்குக் கிடைத்த பிறகுல் படித்தேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் அது எனக்கு ஓர் உணர்வைக் கொடுத்தது. ஒரு காலகட்டத்துக்குப் பிறகுல்தான் என் அம்மாவோடு ஒப்பிட ஆரம்பித்தேன். இதுவரை அம்மாவிடமே சொன்னதில்லை. இந்த நேரத்தில் என்னுடைய குடும்பத்தையும் சொல்ல வேண்டும். என்னுடைய அப்பா, என்னுடைய இரண்டு சகோதரிகள், அதைத் தாண்டி என்னுடைய அக்காள் கணவர் ஆகியோரின் பலம், அன்பு, பாசம்தான் என்னை உங்கள் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொய்வில்லாத இந்தச் சட்டப் போராட்டத்தில், என் அம்மாவுடைய உழைப்பை உறிஞ்சிவிட்டேன் என்ற எண்ணம், வேதனை எனக்கு இருக்கும். இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டார்கள். எனவே, நியாயம் வெல்ல வேண்டும் என்ற எண்ணம் எப்போதுமே உண்டு. ஏதோ ஒரு வகையில் எல்லாருமே ஒவ்வொரு காலகட்டத்தில் தங்களுடைய சக்திக்கு மீறி அளவில்லாமல் உழைத்திருக்கிறார்கள். அவர்களையெல்லாம் வாழ்க்கையின் ஒருகட்டத்தில் வாய்ப்பு கிடைக்கிற பட்சத்தில் நேரடியாகச் சென்று நன்றி சொல்ல வேண்டும். இந்த நீண்ட போராட்டத்தில் இது மிகப்பெரிய திருப்புமுனை. அரசின் ஆதரவு என்ற தளத்தையும், மக்கள் ஆதரவு என்ற பெருந்தளத்தையும் உருவாக்கியதில் மிகப்பெரிய காரணம் என்னுடைய தங்கை செங்கொடியின் தியாகம்.

பேரறிவாளன்
பேரறிவாளன்

‘பேரறிவாளன் ஒரு நிரபராதி. அவரது வாக்குமூலத்தைத் தவறாக பதிவு செய்துவிட்டேன்’ என்று 2013-ல் தியாகராஜன் ஐ.பி.எஸ் அவர்கள் வெளிப்படையாக வந்து பேட்டி கொடுக்கும்போதும், உச்ச நீதிமன்றத்தில் வாக்குமூலமாகப் பதிவு செய்யும்போதும் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது. அதன் பிறகு, உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு கொடுத்த கே.டி.தாமஸின் பேட்டி, கட்டுரைகளும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. இதெல்லாம் சேர்ந்துதான் என்னை இங்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. அதேபோல, நீதியரசர் கிருஷ்ணய்யரைப் பற்றியும் சொல்ல வேண்டும்.

நான் இன்று வெளியில் வந்ததற்கும் அவர்தான் காரணம். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குக்கும் அவர் கடிதம் எழுதினார். ‘மண்டியிட்டு கேட்டுக்கொள்கிறேன்’ என்று எனக்காக நீதியரசர் கிருஷ்ணய்யர் மன்மோகன்சிங்கிடம் கேட்டுக்கொண்டார். அதுமட்டுமல்லாமல், நான் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத வழக்கறிஞர்களை உச்ச நீதிமன்றத்தில் அமர்த்திக் கொடுத்திருந்தார். இந்த விடுதலை சாத்தியப்படுத்துவதற்கு ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக பொருளாதாரத்தையும் கட்டணத்தையும் எதிர்பார்க்காமல் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் வாதாடியிருக்கிறார்.

பேரறிவாளன்
பேரறிவாளன்

அதேபோல, தமிழக அரசு தங்களுக்குள்ள அதிகாரத்தை நிலைநாட்டும் வகையில் அஃபிடவிட் ஃபைல் செய்தார்கள். மூத்த வழக்கறிஞரை வைத்து திறம்பட வாதாடி தீர்ப்பை பெற்றுத் தந்துள்ளனர். மரண தண்டனைக் காலங்களில் எங்களோடு துணையாக இருந்த மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் இக்மோர் சௌத்ரியையும் இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன். அதேபோல, ஊடகங்கள் இல்லையெனில் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்காது. உண்மைகள் வெளியில் வந்திருக்கின்றன. சிறைத்துறை, காவல்துறையிலிருந்தும் எங்களுக்கு உதவி செய்திருக்கிறார்கள். 31 ஆண்டுக்கால சட்டப் போராட்டம்தான் என்னுடைய வாழ்க்கை. கொஞ்சம் காற்றை சுவாசிக்க வேண்டும். மூச்சுவிட வேண்டும். ஆசுவாசப்படுத்திக்கொள்கிறேன். சட்டப் போராட்டத்துக்காகவே என் வாழ்க்கையை செலவு பண்ணியிருக்கிறேன். நீதி அமைப்பு முறையில் திறம்பட சட்டப் போராட்டம் நடத்தினால், ஏதோ ஒரு வகையில் வெற்றிபெறலாம். எதிர்காலம் குறித்த எல்லாக் கேள்விகளுக்கும் பின்னர் விடையளிக்கிறேன். மரண தண்டனை வேண்டாம் என்பதில் நம்பிக்கை உள்ளவன் நான்’’ என்றார் புன்னகை மலர்ந்த முகத்தோடு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism