Published:Updated:

`54 பேரும் பா.ஜ.க-வுக்குத்தான் ஆதரவளித்தார்களா?!' - உச்ச நீதிமன்றத்தில் நடந்த விறுவிறு வாதம்

மகாராஷ்டிராவில் பட்னாவிஸ் ஆட்சியமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்று கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா அரசியல்
மகாராஷ்டிரா அரசியல்

மகாராஷ்டிராவில் நடந்துவந்த குடியரசுத் தலைவர் ஆட்சி திடீரென வாபஸ் பெறப்பட்டு, பா.ஜ.க-வின் பட்னாவிஸ் யாருக்கும் தெரியாமல் கடந்த சனிக்கிழமை காலை முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார். மிகவும் அவசர அவசரமாக இந்தப் பதவியேற்பு நடைபெற்றதாகவும் பா.ஜ.க-வுக்கு ஆட்சியமைக்க போதுமான பெரும்பான்மை இல்லை என்றும் அம்மாநில எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

பட்னாவிஸின் பதவியேற்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா- காங்கிரஸ் - என்.சி.பி ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து நேற்று முன்தினம் இரவு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தன. அதை அவசர வழக்காக நேற்று விசாரிக்கப்பட்டது. அந்த வழக்கில், மகாராஷ்டிரா ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த கடிதம் மற்றும் பட்னாவிஸ் அளித்த எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதம் ஆகியவற்றை நாளை (இன்று) சமர்ப்பிக்குமாறு அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

`அந்த 2 கடிதங்கள் எங்கே?’ - மகாராஷ்டிரா வழக்கில் நடந்த காரசார விவாதம்!

அதன்படி வழக்கு இன்று காலை 10:30 மணிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரமணா, சஞ்சீவ் கண்ணா, அஷோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதில் சிவசேனா தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபலும் என்.சி.பி தரப்பில் அபிஷேக் சிங்வியும் மத்திய அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தாவும் பா.ஜ.க தரப்பில் முகில் ரோஹத்கியும் வாதாட ஆஜராகினர்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள்
உச்சநீதிமன்ற நீதிபதிகள்
Bar & bench

முதலில் நீதிபதிகள் கேட்ட இரண்டு கடிதங்களையும் சமர்ப்பித்த துஷார் மேத்தா தன் வாதத்தைத் தொடங்கினார், ``கடந்த 22-ம் தேதி அஜித் பவார்தான் ஆளுநரிடம் கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். அதில், `தன் கட்சியின் 54 எம்.எல்.ஏ-க்களும் தன்னை (அஜித் பவார்) என்.சி.பி-யின் சட்டமன்றத் தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளனர்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அதனுடன் 54 எம்.எல்.ஏ-க்களின் பட்டியலும் என்.சி.பி, பா.ஜ.க-வுக்கு அளித்த ஆதரவுக் கடிதமும் இருந்துள்ளது. அனைத்துக் கடிதங்களும் வழங்கப்பட்டதால் ஆளுநர் அதன் மீது விசாரணை நடத்தத் தேவையில்லை” என வாதாடினார்.

தொடர்ந்து தேவேந்திர பட்னாவிஸ் ஆளுநரிடம் அளித்த கடிதத்தை வாசித்துக் காட்டி, `அஜித் அளித்த ஆதரவினால்தான் பட்னாவிஸ் ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார். அதன் பின்னரே ஆளுநர் பா.ஜ.க-வை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்து, அவர்கள் பெரும்பான்மையை நிரூபிக்க நவம்பர் 30-ம் தேதி வரை காலஅவகாசமும் அளித்துள்ளார். ஆனால், தேர்தலுக்குப் பின்னர் கூட்டணி அமைத்த கட்சிகள், 24 மணி நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியே ஆக வேண்டும் எனக் கூறுகின்றனர். ஆளுநர் முடிவில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது” என்றார்.

இவரைத் தொடர்ந்து பேசிய பட்னாவிஸ் தரப்பு வழக்கறிஞர் முகுல், `அஜித் மற்றும் பட்னாவிஸுக்கு ஆதரவு அளித்த எம்.எல்.ஏ-க்கள் தற்போது சரத் பவார் பக்கம் சென்றுவிட்டனர். அஜித் பவார், பட்னாவிஸை சந்தித்து தன் ஆதரவுக் கடிதத்தைக் காண்பித்துள்ளார். அதில், அனைத்து எம்.எம்.ஏ-க்களும் பட்னாவிஸுக்கு ஆதரவு அளிப்பதாக இருந்துள்ளது. ஆளுநர் தன்னிடம் வழங்கப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் மிகவும் நியாயமாகச் செயல்பட்டுள்ளார். நாங்கள் நம்பிக்கை வாக்கெடுப்புக்குத் தயாராக உள்ளோம். ஆனால், அது 24 மணி நேரத்தில் நடத்த வேண்டுமா என்பதைத்தான் தீர்மானிக்க வேண்டும்” என வாதாடியுள்ளார்.

துஷார் மேத்தா
துஷார் மேத்தா

அடுத்ததாக அஜித் பவார் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் மணீந்தர் சிங், ``அஜித் பவார் 22-ம் தேதி என்.சி.பி-யின் சட்டமன்றத் தலைவராகச் செயல்பட்டுள்ளார். அதில், எந்த மாற்றமும் இல்லை. என்.சி.பி எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதம் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் திருப்தி அளிக்கும்விதமாக உள்ள நிலையிலும் இதன்மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்குமா. கடிதங்களுக்கு முரணாக எதுவும் காட்டப்படவில்லை, எதுவும் நடக்கவில்லை” எனப் பேசினார்.

``மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க நீண்டகால அவகாசம் உள்ளது. அப்படி இருக்கையில் சனிக்கிழமை அதிகாலை 5:47 மணிக்குக் குடியரசுத் தலைவர் ஆட்சி வாபஸ் பெறப்படும் அளவுக்கு இது எமர்ஜென்ஸி காலமா.. வெள்ளிக்கிழமை மாலை 7 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவிட்டன. பா.ஜ.க-வும் சிவசேனாவும் தேர்தலுக்கு முன்பு கூட்டணி வைத்தனர்.

ஆனால், வாக்குறுதி நிறைவேற்றப்படாததால் அந்தக் கூட்டணி முறிந்துவிட்டது. அதற்கும் என்.சி.பி - காங்கிரஸுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இன்று அஜித் பவார் தனக்கு 54 என்.சி.பி எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருப்பதாகக் கூறுகிறார், ஆனால், அவரே தற்போது என்.சி.பி-யின் சட்டமன்றத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர்களிடம் போதுமான ஆதரவு இருந்தால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஏன் தயங்குகிறார்கள்?” என்ற கேள்வியோடு தன் வாதத்தை நிறைவு செய்தார் சிவசேனா தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல்.

கபில் சிபல்
கபில் சிபல்

இவரைத் தொடர்ந்து பேசிய என்.சி.பி ஆதரவு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, ``இன்று நீதிபதிகள் முன்பு ஒரு விசித்திரமான வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. அதில் இருதரப்பினரும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கின்றனர். தற்போது கேள்வி மிகவும் எளிமையானதுதான், எப்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்? அவர்களிடம் 54 என்.சி.பி எம்.எல்.ஏ-க்களின் கையொப்பமிட்ட கடிதம் இருக்கலாம். ஆனால், அவர்கள் அனைவரும் பா.ஜ.க-வுக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறினார்களா..

இது ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் செயல். எனவே, தற்காலிகத் தலைவரை நியமித்து உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தியே ஆக வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பில் என்.சி.பி தோற்றாலும் மகிழ்ச்சியே. ஆனால், பா.ஜ.க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடத் தயாராக இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், `இறுதி உத்தரவு நாளை காலை 10:30 மணிக்கு வழங்கப்படும்' எனக் கூறி வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.