Published:Updated:

"ஆக்ஸிஜன் பற்றாக்குறை; மும்பையிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்!"- மத்திய அரசை சாடிய நீதிபதிகள்!

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

தீக்கோழியை போல நீங்கள் உங்கள் தலையை மணலில் புதைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் எங்களால் அது முடியாது. வெள்ளம் தலைக்கு மேல் செல்கிறது. தேவையான அனைத்தையும் நீங்கள் தான்  ஏற்பாடு செய்ய வேண்டும். எங்களால் வெறுமனே கண்களை மூடிக்கொண்டிருக்க முடியாது - மத்திய அரசை சாடிய நீதிபதிகள்

இந்தியாவில் கொரோனா நோய் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வருகிறது. கொரோனா பரவலால் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன. அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையால் பல்வேறு மாநிலங்களில் உயிர் காக்கும் ஆக்ஸிஜன் மற்றும் படுக்கைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவிவருகிறது. அதிலும், குறிப்பாகத் தலைநகர் டெல்லியில் நிலவும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் மூச்சு திணறிக் கொத்துக் கொத்தாக செத்து மடிந்து கொண்டிருக்கின்றனர். மாநிலத்தில் நோயாளிகளின் ஆக்ஸிஜன் தேவையைப் பூர்த்தி செய்ய மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் மத்திய அரசு பிற மாநிலங்களிலிருந்து டெல்லிக்கு ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஆக்ஸிஜன் விநியோகம் செய்து வருகிறது . ஆனாலும், மாநிலத்தின் ஆக்ஸிஜன் தேவையை மத்திய,மாநில அரசுகள் பூர்த்தி செய்யத் தவறி விட்டதாக மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஆக்சிஜன் காஸ் தட்டுப்பாடு
ஆக்சிஜன் காஸ் தட்டுப்பாடு

நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் உயிரிழப்புகளைக் கருத்தில்கொண்டு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் தாமாக முன்வந்து அவசர வழக்காக ஆக்ஸிஜன் தட்டுப்பாடு விவகாரத்தை விசாரித்து வருகின்றனர். கொரோனா நோய்த்தொற்றைச் சமாளித்துக்கொள்வது மாநில அரசுகளின் பொறுப்பு என்று கடந்த மாதம் மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில் உயர்நீதிமன்றம் அதைச் சுட்டிக்காட்டி மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்து வருகிறது. முன்னதாக, டெல்லியில் நிலவும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை இம்மாதம் 3-ம் தேதி இரவுக்குள் முழுமையாகத் தீர்க்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 30-ம் தேதி உத்தரவிட்டிருந்தது. ஆனால், டெல்லியில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு விவகாரம் தீர்வு கண்ட பாடில்லை. இந்நிலையில், நேற்றைய தினம் ஆக்சிஜன் நெருக்கடி தொடர்பான வழக்கு மீண்டும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் விபின் சாங்கி, ரேகா பாலி ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், "டெல்லி மாநிலத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஆக்ஸிஜன் அளவு முழுமையாக வந்து சேருவதில்லை என்ற விஷயம் நீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்திருக்கிறது. டெல்லிக்கு 700 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால, 490 மெட்ரிக் டன் மட்டுமே வந்துகொண்டிருக்கிறது. டெல்லிக்கு வழங்கப்பட வேண்டிய ஆக்ஸிஜன் முழுமையாக மத்திய அரசு வழங்கவேண்டும். மேலும், நீதிமன்ற உத்தரவை மீறிய மத்திய அரசின் மீது ஏன் நீதிமன்றம் அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாது என்பதற்கான விளக்கத்தையும் அளிக்க வேண்டும்.

டெல்லி உயர்நீதிமன்றம்
டெல்லி உயர்நீதிமன்றம்

தீக்கோழியை போல நீங்கள் உங்கள் தலையை மணலில் புதைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் எங்களால் அது முடியாது. வெள்ளம் தலைக்கு மேல் செல்கிறது. தேவையான அனைத்தையும் நீங்கள் தான்  ஏற்பாடு செய்ய வேண்டும். எங்களால் வெறுமனே கண்களை மூடிக்கொண்டிருக்க முடியாது. உச்சநீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்துவதைத் தவிர வேறு எந்த விளக்கத்தையும் நாங்கள் கேட்கத் தயாராக இல்லை" என்று மத்திய அரசை நீதிபதிகள் கடுமையாகச் சாடியிருந்தனர்.

இந்நிலையில் மத்திய அரசு இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று முறையிட்டிருந்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர் துஷார் மெஹ்ரா மத்திய அரசின் சார்பாக வாதாடினார். அப்போது நீதிபதி சந்திரசூட், நோயாளிகளின் படுக்கைகளை வைத்து மத்திய அரசு டெல்லியில் ஆக்சிஜன் தேவையை அளவிடக்கூடாது. மத்திய அரசு மும்பை மாநகராட்சியை முன்மாதிரியாகக் கொண்டு எப்படி நிலைமையைக் கையாளவேண்டும் என்பதனை பார்க்க வேண்டும். டெல்லியின் சூழலைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு கூடுதல் முனைப்புடன் செயல்பட வேண்டும். டெல்லிக்கு வழங்கப்பட்டு ஆக்சிஜன் தேவைக்குக் குறைவாகவே இருக்கிறது. எனவே 700 மெட்ரிக் டன்'னாக எப்படி அதிகரிப்பது என்பது குறித்து அரசு யோசிக்க வேண்டும் . இன்று இரவுக்குள் டெல்லிக்கு எவ்வளவு ஆக்சிஜன் வழங்க வேண்டும் என்பதனை மத்திய அரசு தெரிவிக்கவேண்டும்.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

டெல்லியில் அடுத்த சில நாள்களுக்கு ஆக்ஸிஜன் தேவையை எப்படி மத்திய அரசு சமாளிக்கப் போகின்றது என்பது குறித்தும் விளக்கமளிக்க வேண்டும். மத்திய அரசு இந்த விவகாரத்தில் மும்பையை மாடலாக கொண்டு செயல்பட வேண்டும் என்று நீதிமன்றம் கேட்டுக்கொள்கிறது. ஆக்ஸிஜன் வழங்கல் விவகாரம் தொடர்பான டெல்லி உயர்நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் உச்சநீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. டெல்லிக்கு வழங்கப்பட வேண்டிய ஆக்ஸிஜன் அளவு குறித்த விவரங்களை நாளை காலை 10.30-க்குள் மத்திய அரசு எங்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்" என்று நீதிபதிகள் காட்டமாகத் தெரிவித்தனர்

அடுத்த கட்டுரைக்கு