Published:Updated:

`தகுதிநீக்கம் செல்லும்; ஆனால், போட்டியிடலாம்!'- கர்நாடக எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம்

`கர்நாடகாவில் தங்கள் பதவியை ராஜினாமா செய்த 17 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் செல்லும்' என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள்
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள்

கர்நாடகாவில் 2018-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க 105 இடங்களிலும் காங்கிரஸ் 78 இடங்களிலும் மதச்சார்பற்ற ஜனதாதளம் 37 இடங்களிலும் வெற்றிபெற்றன. அங்கு ஆட்சியமைக்க எந்தக் கட்சிக்கும் போதுமான பெரும்பான்மை இல்லாததால் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸும் மதச்சார்பற்ற ஜனதாதளமும் இணைந்து கர்நாடகாவில் ஆட்சியமைத்தன. ஜே.டி.எஸ்-ஸின் குமாரசாமி முதல்வராகப் பதவியேற்றார்.

காங்கிரஸ் - ஜே.டி.எஸ்
காங்கிரஸ் - ஜே.டி.எஸ்

குமாரசாமி பதவியேற்ற 10 மாதத்திலேயே காங்கிரஸைச் சேர்ந்த 14 எம்.எல்.ஏ-க்கள் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ-க்கள் என மொத்தம் 17 பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜ.க-வுக்கு ஆதரவு அளித்தனர். இது அம்மாநில அரசியலில் திடீர் திருப்பமாக அமைந்தது. எவ்வளவோ முயன்றும் குமாரசாமியால் தன் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனது.

எடியூரப்பா அடித்தது சிக்ஸரா... கேட்சா? தகிக்கும் கர்நாடக அரசியல்

எம்.எல்.ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க-வுக்கு ஆதரவு அளிப்பது கட்சித் தாவலுக்குச் சமம் என்றும் அவர்கள் கொறடாவின் உத்தரவை மீறிவிட்டனர் எனக் கூறி ராஜினாமா செய்த அனைத்து எம்.எல்.ஏ-க்களையும் தகுதிநீக்கம் செய்து அறிவித்தார் கர்நாடகாவின் அப்போதைய சபாநாயகர் ரமேஷ் குமார்.

மேலும், தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்கள் அனைவரும் 2023-ம் ஆண்டு வரை எந்தத் தேர்தலிலும் போட்டியிடக் கூடாது என்றும் அறிவித்தார். தற்போது அங்கு பா.ஜ.க-வின் எடியூரப்பா ஆட்சி நடைபெற்றுவருகிறது.

கர்நாடகா எம்.எல்.ஏக்கள் ராஜினாமா
கர்நாடகா எம்.எல்.ஏக்கள் ராஜினாமா

இதையடுத்து, சபாநாயகரின் தகுதிநீக்க அறிவிப்புக்குத் தடை விதிக்க வேண்டும் என 17 பேரும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வந்தது. அதற்குள், கர்நாடகாவில் 17 தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவித்து அங்கு டிசம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

 `ஆபரேஷன் கமலா 2.0’ -  மும்பையில் முகாமிட்டுள்ள  `அதிருப்தி’ எம்.எல்.ஏ-க்களால் அதிரும் கர்நாடகா

இந்தநிலையில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்த வழக்கில் இன்று இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரமணா, சஞ்சீவ் கண்ணா, கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் முன்னதாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் உயர்நீதிமன்றத்தைத்தான் அணுகியிருக்க வேண்டும் என அறிவுரை கூறிய நீதிபதிகள் தொடர்ந்து, கர்நாடகாவில் 17 அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை தகுதிநீக்கம் செய்த சபாநாயகரின் அறிவிப்பு செல்லும் என உத்தரவிட்டனர்.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

மேலும், அவர்கள் 2023-ம் ஆண்டு வரை தேர்தலில் போட்டியிடக் கூடாது என்ற சபாநாயகரின் முடிவுக்குத் தடை விதித்து, வரும் இடைத்தேர்தலில் தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்கள் போட்டியிடலாம் எனவும் தீர்ப்பளித்தனர்.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் கர்நாடகாவில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் எந்தவித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், `தகுதிநீக்கம் செய்யப்பட்ட அனைத்து எம்.எல்.ஏ-க்களும் இடைத்தேர்தல் மூலம் மீண்டும் களம் காண்பார்கள்' எனவும் கூறப்படுகிறது.