Published:Updated:

`கவனம் ஈர்த்த சுப்ரியா; அஜித்துக்கு உற்சாக வரவேற்பு!’- கலகலத்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைக் காட்சிகள்

இன்று மகாராஷ்டிரா சட்டமன்றத்துக்கு வந்த அஜித் பவாருக்கு, சுப்ரியாவும் என்.சி.பி நிர்வாகிகளும் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

மகாராஷ்டிரா
மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில், யாருக்கும் தெரியாமல் திடீரென பதவியேற்ற பட்னாவிஸுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா- காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தன. இதையடுத்து, `நவம்பர் 28-ம் தேதி மாலை 5 மணிக்குள் பா.ஜ.க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்' என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

இதையடுத்து, தங்களிடம் பெரும்பான்மையான எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இல்லாததால், முதல்வராகப் பதவியேற்ற பட்னாவிஸும் துணை முதல்வராகப் பதவியேற்ற அஜித் பவாரும் அடுத்தடுத்து தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் அதிகப் பெரும்பான்மையைக் கொண்ட சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார். ஆளுநரும் உத்தவ் தாக்கரேயின் கடிதத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.

தற்போது, சிவசேனா- காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் உத்தவ் தாக்கரே நாளை மாலை மகாராஷ்டிரா முதல்வராகப் பதவியேற்க உள்ளார். இந்நிலையில், இன்று மாநிலம் முழுவதும் பல்வேறு கட்சிகளில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் பதவியேற்கும் விழா, விதான் பவனில் நடைபெற்றது.

மகாராஷ்டிரா சட்டமன்றம்
மகாராஷ்டிரா சட்டமன்றம்

அப்போது, சரத் பவாரின் மகளும் எம்.பி-யுமான சுப்ரியா சுலே, விதான் பவனுக்கு வந்த அனைத்து எம்.எல்.ஏ-க்களையும் வாயிலில் நின்று உற்சாகமாக வரவேற்றார். அங்கு வந்த முன்னாள் முதல்வர் பட்னாவிஸுக்கும் பலத்த வரவேற்பு அளித்தார். அவரைத் தொடர்ந்து வந்த அஜித் பவாரைப் பார்த்ததும், கட்டியணைத்துக்கொண்டார் சுப்ரியா. அவரை இரு கை கூப்பி வரவேற்று, காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி உள்ளே வரவேற்றார். சுப்ரியாவின் இந்தச் செயல், அங்கிருந்தவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

`ட்ரோஜன் குதிரை’ அஜித் பவார்…அமித் ஷாவை உடைத்த சரத் பவாரின் அரசியல்!

பின்னர், சட்டமன்றத்துக்குள் சென்ற அஜித் பவாருக்கு, அங்கிருந்த தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் மேஜையைத் தட்டி கரவொலி எழுப்பி வரவேற்பு அளித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

`அஜித் பவார் மீண்டும் என்.சி.பி நிர்வாகியாகவே திரும்பி வந்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி. அவர் தன் தவற்றை உணர்ந்துவிட்டார். இதை எங்களுடைய குடும்ப விவகாரமாகக் கருதுகிறோம். அஜித் பவாரின் செயலை சரத் பவார் மன்னித்துவிட்டார். அஜித் இன்னும் கட்சியில்தான் உள்ளார். அவரது நிலைப்பாடு இன்னும் மாறவில்லை' என என்.சி.பி நிர்வாகி ஒருவர் நியூஸ் 18 ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளார்.

அஜித் பவார் - சுப்ரியா
அஜித் பவார் - சுப்ரியா

தொடர்ந்து சட்டமன்ற வாயிலில் செய்தியாளர்களைச் சந்தித்த அஜித் பவார், ``தற்போது பேசுவதற்கு எனக்கு எதுவும் இல்லை. நான் சரியான நேரத்தில் நிச்சயம் பேசுவேன். முன்பு கூறியது போல, நான் என்.சி.பி-யைச் சேர்ந்தவன்தான். இன்னும் என்.சி.பி -யிலேயே உள்ளேன். அதில் எந்தக் குழப்பமும் இல்லை” என்றார்.