Published:Updated:

``அஜித் பவாரை மன்னித்துவிட்டீர்களா?'' - சுப்ரியா சுலே அளித்த சூப்பர் பதில்

``எனக்கு அமைச்சர் பதவி தருவதாக தந்தையிடம் பிரதமர் மோடி கூறியிருக்கிறார். அதற்கு என் தந்தை மறுப்பு தெரிவித்தது, உறுதியான தீர்க்கமான முடிவு'' என்கிறார் சுப்ரியா சுலே

சுப்ரியா சுலே
சுப்ரியா சுலே

மகாராஷ்டிரத்தில் அரசியல் குழப்பங்கள் தீர்ந்து சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியில் அமர்ந்துள்ளார். சிவசேனாவுடன் இணைந்து, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி அங்கே நடைபெறுகிறது. பாரதிய ஜனதா கட்சி எதிர்க்கட்சிகள் வரிசையில் அமர்ந்துள்ளது. மாநிலத்தில் உச்சக்கட்ட குழப்பம் நிகழ்ந்துகொண்டிருந்த போது, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே முதல்வரான பிறகு, தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த சரத் பவார், டெல்லியில் மோடியை சந்தித்தபோது, தன் மகளும் எம்.பி-யுமான சுப்ரியா சுலேவுக்கு மத்திய அமைச்சர் பதவி தருவதாகவும் மகாராஷ்டிரத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியமைக்க சரத் பவார் உதவ வேண்டுமென்று மோடி கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார். இதற்கு பதிலளிக்கையில், இரு கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட சாத்தியமில்லை என்று மோடிக்கு தான் மறுப்பு தெரிவித்ததாகவும் சரத் பவார் கூறியிருந்தார்.

சரத் பவார் மற்றும் அஜித் பவார்
சரத் பவார் மற்றும் அஜித் பவார்
ரூ.58,000 கோடி நஷ்டம்...12,000 ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயம்... என்ன நடக்கிறது ஏர் இந்தியாவில்?!

இந்த நிலையில், தனியார் சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்த சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே, தன் தந்தை எடுத்த முடிவு சரியானது, உறுதியானது என்று கூறியுள்ளார். மேலும், "கருத்துகள் வேறுவேறாக இருந்தாலும் தனிப்பட்ட உறவுகளை என் தந்தை பேணுவார். அப்படித்தான் பிரதமர் மோடியையும் சந்தித்தார். மோடி எனக்கு அமைச்சரவையில் இடம் கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார். இது பிரதமரின் தாராள குணத்தை இது காட்டுகிறது. இரு மூத்த தலைவர்கள் பேசிக் கொண்ட விஷயம் அது. நான் அந்த இடத்தில் இல்லை. எனினும், என் தந்தை எடுத்த முடிவு சரியானது. சரத் பவார் என் தந்தை மட்டுமல்ல தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆவார். பாஸ் எடுக்கும் முடிவுகள் எப்போதும் சரியானதாகவே இருக்கும்'' என சுப்ரியா பதிலளித்தார்.

சுப்ரியாவிடத்தில் மூத்த சகோதர் அஜித் பவார் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. "மகாராஷ்டிரத்தின் துணை முதல்வராக அஜித் பவார் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதா?'' என்ற கேள்விக்கு, "எனக்கு 5 மூத்த சகோதரர்கள் உள்ளனர். அஜித் அதில் இரண்டாமானவர். அவரின் நிலை குறித்து கட்சிதான் முடிவு செய்யும். கட்சிக்குள் நடந்த குழப்பங்கள் எல்லாம் தீர்ந்துவிட்டன. குடும்பம் மீண்டும் ஒன்று சேர்த்துவிட்டது. நாங்கள் கூட்டுக் குடும்பமாக வாழும் பழக்கம் கொண்டவர்கள். என் மகன் தவறு செய்தால் காதைப்பிடித்து திருகி தப்பை சுட்டிக் காட்டலாம். அஜித் என்னைவிட மூத்தவர். நான் தப்பு செய்தால் அவர்தான் என் காதைப் பிடித்து திருகி வழி நடத்த வேண்டும்'' என்றார் சுப்ரியா.

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகளுக்கிடையே தெளிவான புரிதல் உள்ளது!
சுப்ரியா சுலே

"அஜித் பவார் செய்த தவற்றை மன்னித்துவிட்டீர்களா?'' என்று கேட்டபோது, "அது ஒரு கெட்ட கனவு போன்றதுதான். உறங்கும்போதுதானே கனவு வரும். கண் விழித்துவிட்டால் கனவு கலைந்து விடுமல்லவா... அதேபோலத்தான் அந்தச் சம்பவமும்!'' என்று பதில் அளித்து சமாளித்தார் சுப்ரியா. "சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி கூட்டணி 5 ஆண்டுகள் முழுமையான ஆட்சியைத் தருமா?'' என்ற கேள்விக்குப் பதிலளித்த சுப்ரியா, "எங்களிடம் தெளிவான புரிதல் உள்ளது. பால் தாக்கரே மறைந்தபோது, இனிமேல் சிவசேனாவை வழிநடத்த யார் இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுந்தது. உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா கட்டுக்கோப்பாக இருந்தது. இப்போது, உத்தவ் தாக்கரே மாநில முதல்வரும் ஆகிவிட்டாரே!'' என்றார்.

கடந்த 2011-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் சுப்ரியா சுலே முதன் முதலாக பாரமதி தொகுதியில் போட்டியிட்டார். அப்போது சிவசேனா தலைவர் பால் தாக்கரே உயிருடன் இருந்தார்.

சுப்ரியா சுலே
சுப்ரியா சுலே
`சிவசேனா என்றால் `சிவன் படை’ அல்ல. மராட்டிய சிவாஜியின் படை!’- சிவசேனா கடந்துவந்த பாதை

அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும் சரத் பவாருக்கும் பால் தாக்கரேவுக்கும் நல்ல புரிதல் உண்டு. சரத் பவாரின் மகள் சுப்ரியா வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்ல வேண்டுமென்று பால் தாக்கரே ஆசைப்பட்டார். அதனால், சுப்ரியாவை எதிர்த்து சிவசேனா வேட்பாளர் யாரையும் நிறுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது 50 வயதான சுப்ரியாவின் கணவரின் பெயர் சதானந்த் சுலே. இந்தத் தம்பதிக்கு விஜய், ரேவதி என்று இரு குழந்தைகள் உள்ளனர்.