Published:Updated:

``பாஜக-வுடனான உறவை முறித்துக்கொள்கிறேன்; ஆனால்…’ - சூர்யா சிவா அதிரடி முடிவு

சூர்யா சிவா ( DIXITH )

கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், பா.ஜ.க-விலிருந்து விலகுவதாக சூர்யா சிவா அறிவித்திருக்கிறார்.

``பாஜக-வுடனான உறவை முறித்துக்கொள்கிறேன்; ஆனால்…’ - சூர்யா சிவா அதிரடி முடிவு

கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், பா.ஜ.க-விலிருந்து விலகுவதாக சூர்யா சிவா அறிவித்திருக்கிறார்.

Published:Updated:
சூர்யா சிவா ( DIXITH )

தமிழக பா.ஜ.க சிறுபான்மையினர் அணித் தலைவரான டெய்சி என்பவரை, தமிழக பா.ஜ.க., ஓபிசி அணியின் மாநிலச் செயலாளராக இருந்த சூர்யா சிவா மிகவும் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் கொலை மிரட்டல் விடுத்துப் பேசிய ஆடியோ வெளியான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து இந்த விவகாரம்  தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கைக்குழுவை அமைத்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, விசாரணை செய்து அறிக்கையைச் சமர்ப்பிக்கும்படி கூறியிருந்தார். மேலும், அதுவரை சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்றும் கூறியிருந்தார். இதற்கிடையே சூர்யா சிவாவும், டெய்சியும் ‘எங்களுக்கிடையேயான பிரச்னையை, சுமுகமாகப் பேசி தீர்த்துக்கொண்டோம். அக்கா, தம்பியாக நாங்கள் தொடர்ந்து பயணிக்க முடிவெடுத்திருக்கிறோம்’ எனக் கூட்டாகப் பேட்டி கொடுத்தனர்.

சூர்யா சிவா ட்விட்
சூர்யா சிவா ட்விட்

இந்த நிலையில், கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருந்துவந்த சூர்யா சிவா, பா.ஜ.க-விலிருந்து விலகுவதாக தடாலடி அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், ``அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி. இதுவரை இந்தக் கட்சியில் பயணித்தது எனக்குக் கிடைத்த இனிய அனுபவம். நீங்கள் தமிழக பாஜக-வுக்குக் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும். அதை அடைய வேண்டுமென்றால் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் அவர்கள் மாற்றப்பட வேண்டும். இல்லையென்றால், கடந்தகால பாஜக-வைப்போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும். இத்துடன் என் பாஜக-வுடனான உறவை நான் முடித்துக்கொள்கிறேன். உங்கள் மேல் என்றும் அன்புள்ள அன்பு தம்பி’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சூர்யா சிவா
சூர்யா சிவா

பா.ஜ.க-வினுடைய கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாவிட்டாலும், நேற்றைய தினம் வரை பா.ஜ.க-வுக்கு ஆதரவாகவும், தி.மு.க-வைக் கடுமையாக விமர்சனம் செய்தும் சூர்யா சிவா கருத்துகளைத் தெரிவித்துவந்தார். இந்த நிலையில், உட்கட்சி அழுத்தம் காரணமாக சூர்யா சிவா பா.ஜ.க-விலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது. மேலும், டெய்சியுடன் பேசிய ஆடியோவிலேயே, தமிழக பா.ஜ.க மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகத்தைக் கடுமையாக விமர்சித்து சூர்யா சிவா பேசியிருந்தார். இந்நிலையில், இப்போது கட்சியிலிருந்து வெளியேறும்போதும்கூட, கேசவ விநாயகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சூர்யா சிவா காட்டமாகக் குறிப்பிட்டிருக்கிறார். தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளராக வலம்வந்த சூர்யா சிவா, பா.ஜ.க-வின் உட்கட்சிப் பிரச்னைகளால் கட்சியிலிருந்து வெளியேறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.