Published:Updated:

பாஜக-வில் இணைந்த திருச்சி சிவாவின் மகன் சூர்யா... பின்னணி என்ன?

பா.ஜ.க-வில் இணைந்த சூர்யா சிவா ( ட்விட்டர் )

திமுக கொள்கை பரப்புச் செயலாளரும், எம்.பி-யுமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா பாஜக-வில் இணைந்ததுதான் தற்போதைய தமிழ்நாட்டு அரசியலில் ஹாட் டாபிக்.

பாஜக-வில் இணைந்த திருச்சி சிவாவின் மகன் சூர்யா... பின்னணி என்ன?

திமுக கொள்கை பரப்புச் செயலாளரும், எம்.பி-யுமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா பாஜக-வில் இணைந்ததுதான் தற்போதைய தமிழ்நாட்டு அரசியலில் ஹாட் டாபிக்.

Published:Updated:
பா.ஜ.க-வில் இணைந்த சூர்யா சிவா ( ட்விட்டர் )

``சாதி மறுப்பு குறித்து மேடைகளில் பேசும் என் தந்தை என்னுடைய சாதி, மத மறுப்பு திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. எங்களைப் பிரிக்கும் முயற்சியில் மர்ம நபர்களால் மிரட்டல் விடுக்கிறார்" என்று திமுக-வின் போர்வாளாகக் கருதப்படும் எம்.பி திருச்சி சிவா குறித்து அவரின் மகன் மணிவண்ணன் (எ) சூர்யா சிவா கடந்த 2017-ம் ஆண்டு அளித்த புகார் பேட்டிதான் இது.

திருச்சி சிவா
திருச்சி சிவா

திமுக-வின் டெல்லி முகமாகக் கருதப்படும் திருச்சி சிவா, கருணாநிதி தலைமையிலும், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலும் கட்சியில் பல முக்கியப் பொறுப்புகளில் இருந்துவருகிறார். 1996, 2002, 2007, 2014 மற்றும் 2020 ஆகிய ஐந்து முறை திமுக-வின் ராஜ்ய சபா உறுப்பினராகத் திருச்சி சிவா தேர்வு செய்யப்பட்டுள்ளார். முழுக்க முழுக்க திராவிடக் கொள்கைப் பிடிப்புள்ள ஒருசில திமுக-வினரில் திருச்சி சிவா முக்கியமானவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சிறந்த பேச்சாளரான திருச்சி சிவா, அரசியல் களத்தில் பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாதவர். இதற்கிடையேதான் திருச்சி சிவா குறித்து அவருடைய மகனும் மருமகளும் புகார் அளித்தனர்.

பாஜக-வில் இணைந்த திருச்சி சிவா-வின் மகன் சூர்யா சிவா
பாஜக-வில் இணைந்த திருச்சி சிவா-வின் மகன் சூர்யா சிவா
ட்விட்டர்

`கொள்கையெல்லாம் மேடையில்தான். வீட்டில் இல்லை’ என்று திருச்சி சிவா மீது விமர்சனங்கள் எழுந்தன. ஆனாலும், கட்சிக்குள் இருக்கும் அவரின் செல்வாக்கு குறையவில்லை. கடந்த 2020-ம் ஆண்டு, நவம்பர் மாதம் சென்னையிலுள்ள ஸ்டார் ஹோட்டலில் மதுபோதையில் சூர்யா அவரின் நண்பரிடம் தகராறு செய்ததாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

தந்தை மகனுக்கிடையே சுமுக உறவு இல்லாததால், சூர்யா தன் மனைவியுடன் தனியாக வசித்துவந்தார். இந்நிலையில்தான் திமுக-விலிருந்து விலகி, பாஜக-வில் இணைந்திருக்கிறார் சூர்யா சிவா. சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் இணைந்த சூர்யாவுக்கு உறுப்பினர் அட்டை மற்றும் 'வீர சாவர்க்கர் வரலாறு' புத்தகமும் வழங்கப்பட்டன. தமிழக பாஜக சூர்யாவைத் தூக்கியது எப்படி என்பது குறித்து அரசியல் களத்தில் விசாரித்தோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருச்சியைப் பொறுத்தவரையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸைத் தாண்டி, எம்.பி சிவா-வே இரண்டாம் கட்ட தலைவர்தான். அவரின் வாரிசுக்குப் பதவி, பரிவட்டம் கிடைப்பது சுலபமில்லை. தந்தையுடன் சுமுக உறவு இல்லாததால் அவரின் செல்வாக்கைப் பயன்படுத்தி கட்சிப் பதவியைப் பெறுவதும் முடியாது என்பதை அவர் புரிந்துகொண்டார். இதை அறிந்துகொண்ட திமுக-விலிருந்து தாவிய பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன் தரப்பு சூர்யாவிடம் பேசியதாகக் கூறப்படுகிறது.

கே.என்.நேரு, அன்பில் மகேஸ்
கே.என்.நேரு, அன்பில் மகேஸ்

பா.ஜ.க-வில் இணைந்த கையுடன், `தொலைநோக்குப் பார்வையில் இணைந்துள்ளேன்’ என்றும், `பதவிக்காக இல்லை’ என்றும் காரணம் சொல்லியிருக்கிறார். அதேபோல, `15 ஆண்டுகளாகக் கட்சிக்காக பணியாற்றியுள்ளேன். கனிமொழி ஆதரவாளர் என்பதாலேயே தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறேன். எனக்கெதிரான என் தந்தையின் நடவடிக்கைகள் குறித்து தலைமைக்குத் தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை’ என்று புகாரையும் கூறியுள்ளார்.

திமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, ``கட்சி மற்றும் தனிப்பட்ட முறையில் சூர்யாவின் நடவடிக்கைகள் திருச்சி சிவாவுக்கு முன்பிருந்தே பிடிக்கவில்லை. அவரின் பெயரைப் பயன்படுத்தி சூர்யா சில தவறான வழிகளில் நடந்துகொண்டிருந்தார். அதைப் பலமுறை கண்டித்தும் சூர்யா மாறவில்லை. அதேபோல, திருச்சி சிவாவின் நடவடிக்கைகள் அவருக்குப் பிடிக்கவில்லை. இதனால், இரண்டு பேருக்குள்ளும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது. தற்போது சூர்யா பாஜக-வில் இணைந்ததைக்கூட, `அவனுக்கு ஏற்ற இடம்தான்’ என கிண்டலாகவே கூறினார். அதேபோல, `கட்சிப் பதவி கொடுக்கிறோம், டெல்லி தலைமையிடம் பேச வைக்கிறோம்’ என்பது உள்ளிட்ட பல்வேறு ஆசைவார்த்தைகள் சூர்யாவிடம் கூறப்பட்டுள்ளன. அதை நம்பித்தான் அவர் அங்கு சென்றுள்ளார்" என்றனர்.

கரு.நாகராஜனுடன் சூர்யா
கரு.நாகராஜனுடன் சூர்யா
ட்விட்டர்

பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜனிடம் கேட்டபோது, ``திமுக-வில் சூர்யா எந்தப் பதவியும் வகிக்கவில்லை. ஆனால், திமுக-வின் டெல்லி முகமாக இருக்கும் திருச்சி சிவாவின் மகனே, பாஜக-வுக்கு வந்திருக்கிறார் என்பது நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். திமுக-வின் குடும்ப அரசியல், அதிகார மையங்கள், உழைப்பு வீணாக்கப்படுதல் குறித்து நாங்கள் தெரிவிப்பதைக் காட்டிலும், திமுக-வின் மூத்த தலைவரின் மகனும், கட்சிக்காக 15 ஆண்டுகள் உழைத்த சூர்யாவே கூறுவது மக்கள் மத்தியிலும், அதிருப்தியில் உள்ள திமுக தொண்டர்களுக்கும் புரியும்.

நாங்கள் யாரையும் வற்புறுத்தி கட்சியில் இணைக்கவில்லை. கட்சியின் கொள்கையில் பிடிப்பு ஏற்பட்டு சூர்யாவாகத்தான் எங்களுடன் இணைந்துள்ளார். தமிழக பாஜக-வைப் பொறுத்தவரை உழைப்புக்கு எப்போதும் நல்ல பலன் கிடைக்கும். இளைஞரான சூர்யாவின் உழைப்புக்கும் நல்ல பலன் கிடைக்கும்" என்றார் சூசகமாக.

திமுக-வின் கொள்கைக்கு நேர் எதிராக இருக்கும் பாஜக-வில் சூர்யா ஐக்கியமானது, பொதுமக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும், தலைமை மீது அதிருப்தியிலுள்ள நிர்வாகிகள் மத்தியில் சின்ன தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என்றே அரசியல் வட்டாரத்தில் கருதப்படுகிறது. அதேபோல, சூர்யாவுக்கு பாஜக இளைஞர் அணி அல்லது வழக்கறிஞர் அணியில் நிர்வாகிப் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism