Published:Updated:

`தாயின் கடைசி ஆசை அது!’ - நெகிழ்ந்த சுஷ்மா ஸ்வராஜ் மகள்

இன்றைய தொழில்நுட்பத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திய அரசியல் தலைவர்களில் சுஷ்மா முக்கியமானவர். சமூக வலைதளமான ட்விட்டரை மக்களின் பிரச்னைகளை அறிந்துகொள்ளும் ஊடமாகப் பயன்படுத்திக்கொண்டவர்.

 Sushma Swaraj
Sushma Swaraj

மத்திய பா.ஜ.க அரசு, 2014-ம் ஆண்டு மத்தியில் ஆட்சிப்பொறுப்பேற்றதும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக சுஷ்மா ஸ்வராஜுக்குப் பதவி வழங்கப்பட்டது. வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்கள் பலரை மீட்டு தாயகம் திரும்ப வைத்த பெருமை அவருக்கு உண்டு. இன்றைய தொழில்நுட்பத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திய அரசியல் தலைவர்களில் சுஷ்மா முக்கியமானவர். சமூக வலைதளமான ட்விட்டரை மக்களின் பிரச்னைகளை அறிந்துகொள்ளும் ஊடமாகப் பயன்படுத்திக்கொண்டவர். ட்வீட் மூலமாகப் பிரச்னைகளைத் தெரிந்துகொண்டு, அதைச் சரிசெய்வதற்கான வேலைகளில் ஈடுபட்டவர்.

Bansuri Swaraj
Bansuri Swaraj

ஆட்சியில் மட்டுமல்லாது பா.ஜ.க-விலும் முக்கிய தலைவராக வலம் வந்தவர் சுஷ்மா. இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சைப் பலனின்றி கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி உயிரிழந்தார். இதற்கிடையில், சுஷ்மா ஸ்வராஜ் வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்த சமயத்தில், தங்கள் நாட்டில் உளவு பார்த்ததாகக் கூறி இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவை பாகிஸ்தான் கைது செய்து மரண தண்டனை விதித்தது. சர்வதேச நீதிமன்றத்தின் உதவியுடன் குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யப்பட்டு, இந்திய தூதர் குல்பூஷண் ஜாதவை சந்திக்கவும் அனுமதியும் கிடைத்தது.

அந்தச் சமயத்தில் சர்வதேச நீதிமன்றத்தில் குல்பூஷண் ஜாதவ்க்காக இந்தியா சார்பில் வாதாடியவர், வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே. அப்போது, அவர் கூறிய வார்த்தைகள் நெகிழவைத்தது. இந்த வழக்குக்காக தான் ஒரு ரூபாய் ஊதியமாகப் பெற்றுக்கொள்கிறேன் எனக் கூறியிருந்தார். சர்வதேச நீதிமன்றத்தில் குல்பூஷண் மீதான தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் உடன் (ஆகஸ்ட் 6) தொலைபேசியில் பேசியபோது, ``உங்கள் சம்பளமான ஒரு ரூபாயை நாளை மாலை 6 மணிக்கு சந்தித்துப் பெற்றுக்கொள்ளுங்கள்’’ எனக் கூறினார்.

 Sushma Swaraj
Sushma Swaraj

ஆனால், அடுத்த சில நிமிடங்களில் அவர் உயிரிழந்துவிட்டார் சென்ற செய்தியை என்னால் நம்ப முடியவில்லை என ஹரிஷ் சால்வே ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், வழக்கறிஞர் ஹரிஷ் சால்வேயை சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜ் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது தனது தாயின் கடைசி ஆசையான வழக்கறிஞர் ஹரிஷ் சால்வேவுக்கு வழங்க வேண்டிய ஒரு ரூபாய் ஊதியத்தை வழங்கினார். இந்தச் சம்பவம் குறித்து சுஷ்மா ஸ்வராஜின் கணவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இவ்வாறு பதிவிட்டுள்ளார். ''அன்புள்ள சுஷ்மா, பன்சூரி இன்று உனது கடைசி ஆசையான குல்பூஷண் ஜாதவ் வழக்கில் வாதாடிய வழக்கறிஞர் ஹரிஷ் சால்வேவுக்கு வழங்க வேண்டிய ஒரு ரூபாய் ஊதியத்தை வழங்கி கடைசி ஆசையை நிறைவேற்றிவிட்டார்” என்று குறிபிட்டுள்ளார்.