Published:Updated:

சுவேந்து அதிகாரி விலகல்! பிகே-வால் மம்தா கட்சியில் வெடித்த கலகம்?! என்ன நடக்கிறது மேற்குவங்கத்தில்?

மம்தா - சுவேந்து அதிகாரி
மம்தா - சுவேந்து அதிகாரி

சட்டமன்ற உறுப்பினரான சுவேந்து, 34 ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியை அகற்ற காரணமான, நந்திகிராம் போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய நபர்களில் ஒருவர்!

2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை சந்திக்க, கேரளம், தமிழ்நாடு, மேற்குவங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் தேசியக் கட்சிகள் தொடங்கி மாநிலக் கட்சிகள் வரை தயாராகிவருகின்றன. அதேநேரத்தில் கட்சித் தாவல்களும் தொடங்கியிருக்கின்றன. குறிப்பாக, மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அமைச்சராக இருந்த சுவேந்து அதிகாரி, கடந்த நவம்பர் மாதம் மம்தாவின் அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்த நிலையில், நேற்று முன்தினம் (டிசம்பர் 16) தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்திருப்பது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, முழுமையாக நேற்று மம்தா கட்சியிலிருந்து விலகிவிட்டார். மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குக்குரிய நபராக இருந்த சுவேந்து அதிகாரியின் விலகல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குச் சிக்கலையும் உண்டாக்கியிருக்கிறது .

மம்தா
மம்தா

யார் இந்த சுவேந்து அதிகாரி?

``கட்சியில் ஒன்றாகச் சேர்ந்து பணியாற்றுவது கடினமாக இருக்கிறது, திரிணாமுல் காங்கிரஸ் 'ஒரு நபர் அமைப்பாக' இருக்கிறது” - அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் சுவேந்து அதிகாரி உதிர்த்த வார்த்தைகள் இவை.

மம்தாவின் அமைச்சரவையில் போக்குவரத்து மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்த இவர், 1998 -ம் ஆண்டு முதல் மம்தாவுடன் பயணித்தவர். காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்த இவரின் தந்தை சிசிர் அதிகாரி மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் - ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் அமைச்சராகவும் இருந்திருக்கிறார். சுவேந்து, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டு ஆட்சிக் காலத்திலும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். அதன் பின்னர் சட்டமன்ற உறுப்பினரான சுவேந்து, 34 ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியை அகற்ற காரணமான, நந்திகிராம் போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய நபர்களில் ஒருவர். 2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய நபராக இருந்த லஷ்மண் சேத்-ஐ 1.73 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தாம்லுக் தொகுதியில் தோற்கடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் வெற்றி பெற்று மம்தா அமைச்சரவையில் இடம்பிடித்தார் .

மேற்குவங்கத்தில் கிராமப்புறப் பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முகமாக வலம்வந்தார். கிழக்கு மிட்னாபூர், மேற்கு மிட்னாபூர், பாங்குரா, புருலியா, முர்ஷிதாபாத், மால்டா மாவட்டங்களில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற முக்கியப் பங்காற்றியிருக்கிறார். மேலும், கட்சியின் தேர்தல் கண்காணிப்பாளராக பல்வேறு தேர்தல்களில் மம்தாவால் நியமிக்கப்பட்டவர். 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க 18 தொகுதிகள் வெற்றி பெற்ற பின்னர் சுதாரித்துக்கொண்ட மம்தா, சுவேந்துவை 2021 சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளராக நியமித்தார். அதன் பின்னர் நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க-வின் மாநிலச் செயலாளரான திலீப் கோஷ்-ன் சொந்தத் தொகுதியில் திரிணாமுல் வெற்றி பெறக் காரணமாக சுவேந்து இருந்திருக்கிறார்.

சுவேந்து
சுவேந்து

மம்தாவின் நம்பிக்கைக்குரிய நபரான முகுல் ராய் 2017-ம் ஆண்டு பா.ஜ.க-வுக்குச் சென்ற பிறகு அந்த இடத்தைப் பிடிக்க சுவேந்து முயன்றார். ஆனால், மம்தாவின் மருமகனான அபிஷேக் பானர்ஜியுடன் உரசல்கள் ஏற்படத் தொடங்கியிருக்கிறது. மம்தாவுக்கு அடுத்தபடியாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முகமாக இருக்க விரும்பிய சுவேந்துவுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. அதேநேரத்தில் கடந்த நான்கு மாதங்களில் கட்சித் தலைவர்களே சுவேந்துவைக் கடுமையாகத் தாக்கிப் பேசி வந்திருக்கிறார்கள். இதன் காரணமாகத்தான் அமைச்சர் பதவி தொடங்கி சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்திருக்கிறார் சுவேந்து.

டெல்லி: `உங்கள் போராட்டம்... எனது போராட்டம்!’ - விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த மம்தா

இந்த விவகாரத்தில் ஒரு பக்கம் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜி மீது குற்றசாட்டுகள் வைக்கப்படும் அதே நேரத்தில், தேர்தல் வேலைகளை மேற்கொண்ட பிரசாந்த் கிஷோரின் மீதும் கடுமையான குற்றசாட்டுகள் வைக்கப்படுகின்றன. குறிப்பாக, `களநிலவரம் தெரியாமல் வேலை செய்கிறார்கள். குறிப்பிட்ட நிறத்தில் உடை உடுத்த வேண்டும் என்கிறார்கள். எங்களை இதைச் செய்யுங்கள் அதைச் செய்யுங்கள் என்று ஐ-பேக்கைச் சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள். நாங்கள் அரசியல்வாதிகள்... எங்களுக்கு எப்படிச் செயல்பட வேண்டும் என்று தெரியும்’ என்றெல்லாம் கொந்தளித்திருக்கிறார் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரான சுனில் மொண்டல்.

பிரஷாந்த் கிஷோர்
பிரஷாந்த் கிஷோர்

மேற்குவங்கத்துக்கு வரும் சனிக்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரவிருக்கும் நிலையில் சுவேந்து அதிகாரி, சுனில் மொண்டல் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் பா.ஜ.க-வில் இணையவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்தநிலையில் இன்று காலை மேலும் ஒரு எம்.எல்.ஏ தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இதன் மூலம் கடந்த இரு தினங்களில் மூன்று எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்திருக்கிறார்கள். அபிஷேக் பானர்ஜி, பிரசாந்த் கிஷோரின் செயல்பாடுகளால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் கட்சியைவிட்டு விலகுவது கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு