Election bannerElection banner
Published:Updated:

SCANIA நிறுவன சர்ச்சை: சொகுசு பஸ் லஞ்சம்; பா.ஜ.க அமைச்சர் பெயரோடு செய்தி! - என்ன பிரச்னை?

SCANIA
SCANIA

ஸ்வீடன் நாட்டு நிறுவனமான ஸ்கேனியா, மத்திய அமைச்சருக்கு சொகுசுப் பேருந்தை லஞ்சமாக வழங்கியிருப்பதாக, ஸ்வீடன் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தி சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

இந்தியாவிலுள்ள மாநிலங்களுக்கு 2013 முதல் 2016 வரை பேருந்து தயாரித்துக் கொடுத்துவந்தது ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்கேனியா நிறுவனம். இந்த நிறுவனம் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மத்திய அமைச்சர் ஒருவருக்கு சொகுசு பேருந்து ஒன்றை லஞ்சமாக வழங்கியிருப்பதாக, செய்தி வெளியிட்டிருக்கிறது ஸ்வீடன் நாட்டு ஊடகம். இந்தச் செய்தி, தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

Scania
Scania
Twitter/Scania Groups
``டெல்லிக்குச் சென்று பதிலைப் பெற்றுக்கொள்ளுங்கள்'' - உத்தரகாண்ட் முதல்வர் ராஜினாமா பின்னணி என்ன?

ஸ்கேன்யா நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து, அந்நிறுவனம் நடத்திய உள் விசாரணையில், 2013 முதல் 2016 வரை இந்தியாவிலுள்ள மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட லஞ்சம் குறித்த ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகத் தகவல்கள் சொல்லப்படுகின்றன. இதையடுத்து ஸ்வீடன் நாட்டுச் செய்தி ஊடகமான எஸ்.வி.டி, ஜெர்மனி நாட்டு ஊடகமான ZDF ஆகிய ஊடகங்கள் இது குறித்து புலனாய்வு செய்து செய்திகளை வெளியிட்டிருக்கின்றன.

ஸ்வீடன் நாட்டு எஸ்.வி.டி செய்தி நிறுவனம் இது குறித்து வெளியிட்டிருக்கும் செய்தியில், மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நிதின் கட்கரியின் மகள் திருமணத்துக்கு ஸ்கேனியா நிறுவனம் சொகுசுப் பேருந்து ஒன்றைப் பரிசளித்ததாக அந்தச் செய்தியில் சொல்லப்பட்டிருக்கிறது. ``இது ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு. இதில் எவ்வித முகாந்திரமும் இல்லை. அமைச்சரின் பெயருக்குக் களங்கம் விளைவிக்க வேண்டுமென நினைத்துப் புனையப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுதான் இது'' என்று நிதின் கட்கரி தரப்பு இந்தக் குற்றச்சாட்டை மறுத்திருக்கிறது.

நிதின் கட்கரி
நிதின் கட்கரி

ஜெர்மன் நாட்டின் ZDF செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்தியில், இந்தியாவின் ஏழு மாநிலங்களில் தங்களது பேருந்துகளை விற்பனை செய்வதற்காக மாநில போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு, ஸ்கேனியா நிறுவன அதிகாரிகள், 65,000 யூரோ லஞ்சம் வழங்கியிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

இது குறித்து ராய்ட்டர்ஸ் நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருந்த ஸ்கேனியா நிறுவன அதிகாரி, ``இந்த விவகாரத்தில் லஞ்சம் வழங்கப்பட்டிருப்பது உண்மைதான். இந்த முறைகேடு நடைபெற்ற சமயத்தில் பணியாற்றிய சீனியர் மேனஜர்கள் உட்பட, யாருமே இப்போது பணியில் இல்லை. இந்த விவகாரம் தெரிய வந்த பிறகு இந்தியாவில் பேருந்து உற்பத்தி செய்வதை நிறுத்திவிட்டோம். அங்கிருக்கும் தொழிற்சாலைகளையும் மூடிவிட்டோம்'' எனத் தெரிவித்திருக்கிறார்.

ஸ்கேனியா பேருந்து
ஸ்கேனியா பேருந்து
Twitter/Scania Groups
முதல்வர் மம்தா பானர்ஜி மீது தாக்குதல்; மருத்துவமனையில் அனுமதி!-தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்க முடிவு

இதையடுத்து ஸ்கேனியா நிறுவன விவகாரம் குறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. ``பேருந்து ஒப்பந்த ஊழல் விவகாரம் மிகவும் கவலையளிக்கிறது. பேருந்து ஊழல் விவகாரத்தில் மத்திய அரசு மீதும், சில மாநில அரசுகள் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தீவிர நீதி விசாரணை வேண்டும்'' என்று காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஶ்ரீநாத் கூறியிருக்கிறார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு