Published:Updated:

ஸ்டார் தொகுதிகள்: கோவில்பட்டியில் திணறடிப்பாரா தினகரன்?

தினகரன்
தினகரன்

அமைச்சர் கடம்பூர் ராஜூ மீது மக்கள் அதிருப்தியில இருக்காங்க. அவர் போன தேர்தல்ல 428 ஓட்டு வித்தியாசத்துலதான் இங்கே ஜெயிச்சார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அ.ம.மு.க-வில் தினகரன், அ.தி.மு.க-வில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, தி.மு.க கூட்டணியில் சி.பி.எம் வேட்பாளர் சீனிவாசன் என மும்முனைப் போட்டியில் பற்றி எரிகிறது கோவில்பட்டி தொகுதி!

2019-ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், கோவில்பட்டி தொகுதிக்குட்பட்ட கயத்தாறு யூனியனில், 10 வார்டுகளில் வெற்றிபெற்று யூனியன் சேர்மன் பதவியைக் கைப்பற்றியது அ.ம.மு.க. அமைச்சர் கடம்பூர் ராஜூவின் சொந்த ஊரான சிதம்பராபுரம் அடங்கிய வார்டிலும் அ.ம.மு.க-வே வெற்றிபெற்றது. கயத்தாறு யூனியன் சேர்மனாக அ.ம.மு.க தென் மண்டல அமைப்புச் செயலாளர் மாணிக்கராஜா பொறுப்பேற்றார். கடம்பூர் ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்தவரான இவர், ஆரம்பகாலத்திலிருந்தே சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமானவர். கட்சியில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலரும் இவரது கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள்.

தினகரன்
தினகரன்

முதலில் உசிலம்பட்டியில் போட்டியிடலாம் என்று தினகரன் நினைத்த போது, “அமைச்சர் கடம்பூர் ராஜூ மீது மக்கள் அதிருப்தியில இருக்காங்க. அவர் போன தேர்தல்ல 428 ஓட்டு வித்தியாசத்துலதான் இங்கே ஜெயிச்சார். தவிர, முக்குலத்தோர் 23 சதவிகிதம் இங்கே இருக்காங்க. இந்தத் தொகுதியில நீங்க நின்னா ஈசியா ஜெயிச்சிடலாம்” என்று சொல்லி தினகரனைச் சம்மதிக்கவைத்ததே மாணிக்கராஜாதான் என்கிறார்கள். கயத்தாறு யூனியனில் மட்டுமுள்ள 65,000 வாக்குகளில் 50,000 வாக்குகளும், தொகுதியிலிருக்கும் முக்குலத்தோர் சமுதாயத்தினரின் வாக்குகளும் தன் சொல்லுக்குக் கட்டுப்பட்டு சிதறாமல் கிடைக்கும் என்று நம்புகிறார் மாணிக்கராஜா. வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டில் அ.தி.மு.க மீதான பிற சமுதாய மக்களின் அதிருப்தி, தேவந்திர குல வேளாளர் சமூகத்தினரின் பட்டியலின வெளியேற்றம் நிறைவேறாததால் அவர்களின் அதிருப்தி ஆகியவை தங்களுக்குக் கைகொடுக்கும் என்று நம்புகிறது அ.ம.மு.க. அதேசமயம், முக்குலத்தோர் சமுதாயத்தின் பிரதிநிதியாக மட்டுமே தினகரனை மற்ற சமுதாயத்தினர் பார்ப்பது அவருக்கு மைனஸ். ‘‘அ.தி.மு.க சார்பில் மூன்றாம் முறையாகப் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜூவை எளிதாக அணுக முடியும். ஆனால், தினகரன் வெற்றிபெற்ற பிறகு தொகுதிக்குள் வருவாரா, அவரை எளிதாகச் சந்திக்க முடியுமா?” என்பதும் மக்களின் கேள்வியாக இருக்கிறது. கடம்பூர் ராஜூவும், தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் சி.பி.எம் வேட்பாளர் சீனிவாசனும் நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.

கடம்பூர் ராஜூ
கடம்பூர் ராஜூ
சீனிவாசன்
சீனிவாசன்

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவுக்கு செல்வாக்கு நிறைந்த இந்தத் தொகுதியில் நாயக்கர் சமுதாயத்தினரின் கணிசமான வாக்குகள் சீனிவாசனுக்குக் கிடைக்கும் பட்சத்தில் கடம்பூர் ராஜூவுக்கு சற்று சறுக்கல்தான். முக்குலத்தோர் வாக்குவங்கி ஒருபுறம் இருந்தாலும், பிற சமுதாயத்தினரின் வாக்குகள் கை கொடுத்தால் மட்டுமே தினகரனுக்கு வெற்றிக்கான வாய்ப்பு இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு