கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டப்பட்டுவரும் பன்னடுக்கு மருத்துவமனை கட்டடத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் இன்று ஆய்வுசெய்தனர். அதன் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, ``திட்டமிட்டபடி பணிகள் வேகமாக நடந்துவருகின்றன. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும். அரசாங்கத்தைப் பொறுத்தவரை பல்வேறு திட்டங்களை நிறைவேற்றத்தான் அறிவிப்புகளை வெளியிடுகிறோம். புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்த நிலங்களைக் கையகப்படுத்துவது அவசியமானதுதான். புதிய நலத்திட்டங்கள், புதிய சாலைகள், கட்டமைப்புகளால் அரசு பயனடைவது கிடையாது. மக்கள்தான் பயனடைகின்றனர்.

நகரப்புறங்களில் நெரிசல்களைக் குறைப்பதற்காகத்தான் புறவழிச் சாலைகளை உருவாக்குகிறோம். இப்படி அரசு நலத்திட்டங்களை நிறைவேற்ற நிலங்களைக் கையகப்படுத்தித்தான் ஆக வேண்டும். ஒருகாலத்தில் நிலங்களைக் கையகப்படுத்தித்தான் பல்வேறு சாலைகளை அமைக்க முடிந்தது.
ஆனால் சில சமயங்களில் பிரச்னைகளைத் தெரிவிக்கும் விவசாயிகளைச் சமாதானப்படுத்தி, பேச்சுவார்த்தை நடத்தி சாலைப் பணிகளை முடிக்க முயல்வோம். பூங்கா நிலங்கள் ஆக்கிரமிப்புகள் அமைச்சர் தங்கம் தென்னரசு கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அவற்றுக்குத் தீர்வு காணப்படும்” என்றார்.