Published:Updated:

``அச்சத்துடனே நாள்களைக் கழித்தோம்!" - தாலிபான்களால் கடத்தப்பட்ட 7 இந்தியர்களுள் மூவர் விடுவிப்பு!

ஆப்கானிஸ்தானில் பணியாற்றி வந்த இந்தியத் தொழிலாளிகளுள் 7 பேர், கடந்த 2018-ம் ஆண்டு, மே மாதம் தாலிபான்களால் கடத்தப்பட்டனர். அவர்களுள் ஒருவர், கடந்த மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டார். தற்போது 11 தாலிபான்களை விடுதலை செய்ததற்காக, கடத்தப்பட்டவர்களுள் மூவர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தாலிபான்களால் விடுவிக்கப்பட்ட மூவர்!
தாலிபான்களால் விடுவிக்கப்பட்ட மூவர்!

மே 06, 2018. வடக்கு ஆப்கானிஸ்தானின் பக்லான் மாகாணம்.

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ் மஹதோ, பிரசாதி மஹதோ, ஹுலாஸ் மஹதோ, காளி மஹதோ, கேரளாவைச் சேர்ந்த கௌஷிக், முரளிதரன், பீகாரைச் சேர்ந்த மண்டு சிங் ஆகியோர் வழக்கம்போல தங்கள் பணிகளுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தனர். ஆப்கன் பொதுத்துறை நிறுவனம் ஒன்றில், இந்தியத் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தப் பணியாளர்களாக ஆப்கானிஸ்தானில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள், இந்த ஏழு பேர்.

தாலிபான்
தாலிபான்

மினி பஸ் ஒன்றில் பணியிடம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, ஏழு பேரும் ஆப்கன் ஆயுதக் குழுக்களான தாலிபான்களால், துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் ஏறத்தாழ 150 இந்தியர்கள் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வந்ததால், இந்தியத் தொழிலாளர்கள் கடத்தப்பட்டது, இந்தியத் தூதரகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடத்தப்பட்டவர்களின் பாதுகாப்பு கருதி, அவர்களது பெயர்கள் ஊடகங்களுக்குச் சொல்லப்படவில்லை. அவர்களின் குடும்பத்தினருக்கும், கடத்தப்பட்ட முதல் சில நாள்கள் எந்தச் செய்தியும் சென்று சேரவில்லை. எனினும், இந்திய வெளியுறவுத்துறை, கடத்தப்பட்ட குடும்பங்களோடு தொடர்பிலேயே இருந்தது. அப்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர், மறைந்த சுஷ்மா ஸ்வராஜ். கடத்தல் செய்தி வெளிவந்தவுடன் ஆப்கன் வெளியுறவுத்துறை அமைச்சகத்தைத் தொடர்புகொண்ட சுஷ்மா, ஆப்கன் அமைச்சருக்குக் கடிதம் எழுதினார். மேலும், இந்தியாவின் தூதுவர் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனியைச் சந்தித்துப் பேசினார்.

சுஷ்மா ஸ்வராஜ்
சுஷ்மா ஸ்வராஜ்

கடத்தல் சம்பவம் நிகழ்ந்து ஒரு மாதம் ஆகியும், எந்தத் தகவலும் கிடைக்கப் பெறாததால், கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் டெல்லி வந்தடைந்தனர். அவர்களைச் சந்தித்த சுஷ்மா ஸ்வராஜ், அவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, கடத்தப்பட்டவர்களின் பாதுகாப்பு கருதி ஊடகங்களில் எதையும் தெரிவிக்க வேண்டாம் எனவும் அறிவுரை கூறி, அனுப்பினார்.

10 மாதங்கள் கழிந்தன. கடத்தப்பட்டவர்களுள் ஒருவரைத், தாலிபான்கள் விடுதலை செய்தனர். அவர், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ் மஹதோ. கடத்தப்பட்ட தொழிலாளிகளில் ஒருவர் விடுதலை செய்யப்பட்டதற்கு, இந்திய அரசு ஆப்கன் அரசுக்கு நன்றி தெரிவித்தது.

தற்போது 17 மாதங்கள் கழிந்த நிலையில், கடத்தப்பட்டவர்களுள் மூவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த முறை, ஜார்க்கண்டைச் சேர்ந்த காளி மஹதோவும், கேரளாவைச் சேர்ந்த கௌஷிக், முரளிதரன் ஆகியோரும் விடுவிக்கப்பட்டு, தற்போது வீடு திரும்பியுள்ளனர்.
தாலிபான்
தாலிபான்
"நாங்கள் எப்போது வேண்டுமானாலும் கொல்லப்படலாம் என்ற அச்சத்துடனேயே நாள்களைக் கழித்தோம்!"
காளி மஹதோ, கடத்தப்பட்டவர்களுள் ஒருவர்.

ஜார்க்கண்டைச் சேர்ந்த காளி மஹதோ விடுவிக்கப்பட்டபின், ஊடகங்களிடம் ஆப்கனில் நடந்தவற்றைக் குறித்துப் பேசியுள்ளார். கடத்தப்பட்ட எழுவருக்கும் இந்தியாவில் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. ஏழு பேரும் ஒரே இடத்தில் வைக்கப்பட்டு, எந்நேரமும் அவர்களைச் சுற்றி ஏறத்தாழ 10 தாலிபான் படையினர் இருந்ததாகவும், எப்போது வேண்டுமானாலும் கொல்லப்படலாம் என்ற அச்சத்துடனேயே நாள்களைக் கழித்ததாகவும் காளி மஹதோ கூறியுள்ளார்.

கடத்தப்பட்டவர்கள், தாங்கள் எத்தனை நாள்கள் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையே அறியவில்லை. இரண்டு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, அவர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டதாகவும், அந்த இடங்கள் கிராமங்களுக்கு நடுவில் இருந்ததாகவும் காளி மஹதோ கூறியுள்ளார். மேலும், அவர்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தின் அருகில், குழந்தைகள் விளையாடும் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்ததாம்.

"எங்களுக்குப் பணம் தேவையில்லை. எங்கள் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்தால், உங்களை விட்டுவிடுவோம்"
தாலிபான்கள்
வீடு திரும்பிய காளி மஹதோ (நடுவில் இருப்பவர்)
வீடு திரும்பிய காளி மஹதோ (நடுவில் இருப்பவர்)
The Wire

தங்களைக் கடத்திய தாலிபான்களிடம் பேச்சுக் கொடுத்தபோது, "எங்களுக்குப் பணம் தேவையில்லை. எங்கள் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்தால், உங்களை விட்டுவிடுவோம்" என்று கூறியுள்ளனர். ஒவ்வொரு மாதமும், பாதுகாப்புக்கு வைக்கப்பட்டிருக்கும் தாலிபான் படையினர் மாற்றப்பட்டனர் எனவும் காளி கூறியுள்ளார். கடத்தப்பட்டவர்களின் மத நம்பிக்கைகளில் தலையிட மாட்டோம் எனக் கூறிய தாலிபான்கள், கடத்தப்பட்டவர்கள் தாடியைச் சவரம் செய்வதற்கு மட்டும் அனுமதிக்கவில்லை. காளி மஹதோ, தங்களைக் கடத்தியவர்கள் நல்லபடியாகப் பார்த்துக் கொண்டனர் எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம், பிரகாஷ் மஹதோ விடுவிக்கப்பட்டபோது, ஆப்கன் அரசு சிறையில் இருந்த தாலிபான்கள் 10 பேரை விடுதலை செய்துள்ளது. தற்போது மூவர் விடுவிக்கப்படுவதற்கு, ஆப்கன் அரசு 11 தாலிபான்களைச் சிறையில் இருந்து விடுதலை செய்துள்ளது. இவர்களுள் தாலிபான் அமைப்பின் முக்கியத் தலைவர்களான ஷேக் அப்துல் ரஹீம், அப்துல் ரஷீத் பலோச் ஆகியோரும் அடக்கம். இவர்கள் இருவரும் ஆப்கனில் தாலிபான் கட்டுப்பாட்டில் இருந்த இரு மாகாணங்களுக்கு நிழல் ஆளுநர்களாக இருந்தவர்கள்.

தாலிபான்கள் பிடியில் இருந்து மூவரும் விடுவிக்கப்பட்டபோது, அவர்களது புகைப்படம் வெளியிடப்பட்டது. அவர்களது தோற்றத்தைக் கண்ட குடும்பத்தினராலேயே, அவர்களை அடையாளம் காண முடியவில்லை. அவர்கள் நீண்ட தாடியுடன், ஆப்கன் பாரம்பர்ய உடை அணிந்திருந்தனர்.

தாலிபான்
தாலிபான்

கடத்தப்பட்ட 7 பேரில், நால்வர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் 3 பேர், தாலிபான் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தானில் உள்ளனர். அமெரிக்கா தாலிபான் பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியில் தொடர்கிறது. ஆப்கானின் நிலையும் மோசமாகிக் கொண்டு வருகிறது. உலக வல்லாதிக்கங்களின் பிடியில் இருக்கிறது, 3 இந்தியத் தொழிலாளிகளின் உயிர்!