Published:Updated:

`பேருந்து இயக்கும்போது செல்போன் பேச்சு' - 754 ஓட்டுநர்கள்மீது நடவடிக்கை

மாநகரப் பேருந்து ( Representational Image )

கடந்த 10 ஆண்டுகளில் செல்போன் பேசிக்கொண்டே பேருந்தை இயக்கிய 754 ஓட்டுநர்களுக்கு ரூ.9,100 அபராதம் வசூலிக்கப்பட்டதாக ஆர்.டி.ஐ மூலம் தெரியவந்திருக்கிறது.

`பேருந்து இயக்கும்போது செல்போன் பேச்சு' - 754 ஓட்டுநர்கள்மீது நடவடிக்கை

கடந்த 10 ஆண்டுகளில் செல்போன் பேசிக்கொண்டே பேருந்தை இயக்கிய 754 ஓட்டுநர்களுக்கு ரூ.9,100 அபராதம் வசூலிக்கப்பட்டதாக ஆர்.டி.ஐ மூலம் தெரியவந்திருக்கிறது.

Published:Updated:
மாநகரப் பேருந்து ( Representational Image )

இந்திய போக்குவரத்துத்துறை வெளியிட்டிருக்கும் தகவலின் மூலம் நாடு முழுவதும் 30 கோடிக்கும் அதிகமான வாகனங்கள் பயன்பாட்டில் இருப்பது தெரியவருகிறது. இதனால் பெரும்பாலான சாலைகளின் கடுமையான போக்குவரத்து நெரிசலும், காற்று, ஒலி மாசும் ஏற்பட்டுவருகிறது. மறுபுறம் இந்த வாகனங்களை இயக்கும் பலரும் போக்குவரத்து விதிமுறைகளை  முறையாகக்  கடைப்பிடிக்காததால் உயிரிழப்பும் நிகழ்கிறது. அதாவது, தேசிய குற்ற ஆவணக் காப்பகத் தகவலின்படி கடந்த 2021-ம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 3,97,530 பேர் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழந்திருப்பது தெரியவருகிறது.

இதில், தமிழகத்தில் மட்டும் 28,286 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.  இதற்கு போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பிடிக்காதது, மோசமான வானிலை போன்றவை முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. எனவே, சாலை விபத்துகளைக் குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. குறிப்பாக, சமீபத்தில் சாலை விதிகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதம் உயர்த்தப்பட்டிருக்கிறது. 

போக்குவரத்து நெரிசல்
போக்குவரத்து நெரிசல்

இது குறித்து தமிழக அரசு பிறப்பித்திருக்கும் உத்தரவில், 'தீயணைப்பு, ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழிவிட மறுத்தால் ரூ.10,000, இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றாலோ அல்லது காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றாலோ ரூ.1,000, பைக் ரேஸில் ஈடுபட்டால் முதன்முறை ரூ.5,000, அடுத்த ஒவ்வொரு முறையும் ரூ.10,000, கையில் செல்போனைவைத்துக் கொண்டு ஓட்டினால் ரூ.1,000 அபராதம் வசூலிக்கப்படும். இதை மீண்டும் செய்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும்' என்று கூறப்பட்டிருக்கிறது. 

இவ்வாறு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டாலும் பலரும் தொடர்ந்து போக்குவரத்து விதிமுறைகளை  மீறிச்  செயல்பட்டுத்தான் வருகிறார்கள். இதில் அரசு பஸ் ஓட்டுநர்களும் அடங்குவர். கடந்த 10 ஆண்டுகளில் செல்போன் பேசிக்கொண்டே பேருந்தை இயக்கிய 754 ஓட்டுநர்களுக்கு ரூ.9,100 அபராதம் வசூலிக்கப்பட்டதாக ஆர்.டி.ஐ மூலம் தெரியவந்திருக்கிறது. 

108 ஆம்புலன்ஸ்
108 ஆம்புலன்ஸ்

செல்போன் பேசிக்கொண்டே பேருந்தை இயக்கிய ஓட்டுநர்கள்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான தகவலை சமூக ஆர்வலர் எம்.காசிமாயன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டுப் பெற்றிருக்கிறார். அதில், 'கடந்த 2012 முதல் 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை செல்போனில் பேசியபடி பேருந்தை இயக்கியதாக 754 பேர் கண்டறியப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.9,100 அபராதமாக வசூலிக்கப்பட்டிருக்கிறது. ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கிறது' என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

இது குறித்து நம்மிடம் பேசிய காசிமாயன், "பொதுமக்களின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம். பொதுமக்கள் நம்பிப் பயணிக்கும்போது, செல்போனில் பேசிக்கொண்டு பேருந்து இயக்குவதை ஓட்டுநர்கள் தவிர்க்க வேண்டும். மேலும் விதிமுறைகளை மீறியவர்களுக்குக் குறைவான தொகையே அபராதமாக வசூலிக்கப்பட்டிருக்கிறது. மோட்டார் வாகன சட்டத்தின்படி பொதுமக்களுக்கு ரூ.1,000 அபராதம் வசூலிக்கப்படுகிறது.

செல்போன்
செல்போன்
representational image

அதே தொகையைத்தான் ஓட்டுநர்களுக்கும் வசூலிக்க வேண்டும்.  நடவடிக்கைகளில் தொய்வு காட்டுவதன் மூலம் நாளைக்கு அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துவிடுவார்கள். அதன் பிறகு வருத்தம் தெரிவிப்பது, நிவாரணம் வழங்குவதால் எந்தப் பயனும் இல்லை. எனவே, அவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்க வேண்டும்" என்றார்.  

இது குறித்து நம்மிடம் பேசிய மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர், "செல்போன் பயன்படுத்தக் கூடாது என ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. குற்றச்சாட்டுக்குள்ளான பெரும்பாலானோர் மீது ஒழுங்கு நடவடிக்கை (பணியிடை நீக்கம், ஊதிய உயர்வு ரத்து) எடுத்திருக்கிறோம். சிலருக்கு அபராதம் விதித்திருக்கிறோம். தொடர்ந்து ஓட்டுநர்களின் நடவடிக்கையைக் கண்காணித்துவருகிறோம்" என்றார்.