நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களம் தற்போது யார் அடுத்த மேயர், துணை மேயர், மண்டலத் தலைவர், துணைத் தலைவர் என்ற பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. இதில் மற்றெந்தப் பகுதிகளையும்விட புதிதாக உருவான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் யார் பொறுப்பேற்கப்போகிறார்கள் என்பதை அரசியல் விமர்சகர்கள் உன்னிப்பாக கவனித்துவருகிறார்கள். அந்தவகையில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஒரு மாநகராட்சியாக, தாம்பரம் மாறியிருக்கிறது.

ஐந்தாவது பெரிய மாநகராட்சி என்கிற அந்தஸ்திலுள்ள தாம்பரம் மாநகராட்சியில், பல்வேறு அரசியல் தலைவர்களின் உறவினர்கள், அவர்களுக்கு நெருக்கமானவர்கள் ரேஸில் இருப்பதால் போட்டி கடுமையாகியிருக்கிறது. தாம்பரம் மாநகராட்சி, பட்டியலினப் பெண் மேயருக்கு என ஒதுக்கப்பட்டுள்ளதால் இங்கு மேயர் பதவியைவிடத் துணை மேயர் பதவிக்குத்தான் போட்டி தூள் பறக்கிறது. அதோடு ஐந்து மண்டலத் தலைவர்களாக யார் பொறுப்பேற்கவிருக்கிறார்கள் என்பதும் தாம்பரம் மாநகராட்சியின் ஹாட் டாபிக்காக மாறியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்தச் சூழலில், தாம்பரம் மாநகராட்சியில் மேயர், துணை மேயர் பதவிக்கு யாரெல்லாம் போட்டியில் இருக்கிறார்கள், யாருக்கு வாய்ப்பு அதிகம் என்ற விசாரணையில் இறங்கினோம்...
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSதாம்பரம் மாநகராட்சியிலுள்ள 70 வார்டுகளில் தி.மு.க 48 இடங்களில் வென்றுள்ளது. உதயசூரியன் சின்னத்தில் நின்ற மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளர் யாக்கூப்பையும் சேர்த்துக்கொண்டால் இங்கு 49 இடங்களில் தி.மு.க வெற்றிபெற்றிருக்கிறது. காங்கிரஸ் இரு இடங்களிலும், வி.சி.க., ம.தி.மு.க., சி.பி.எம் ஆகிய கட்சிகள் தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளன. அ.தி.மு.க ஒன்பது இடங்களிலும், சுயேச்சைகள் எட்டு இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளனர். “பெரும்பான்மை பலத்தோடு இங்கே தி.மு.க வெற்றிபெற்றிருப்பதால் மேயர், துணை மேயர் ஆகிய இரண்டு பதவிகளும் தி.மு.க-வுக்கே என்பது உறுதியாகிவிட்டது. அதனால், இங்கே போட்டியே தி.மு.க-வினருக்குள்தான்” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
நம்மிடம் பேசிய தாம்பரம் தி.மு.க சீனியர்கள் சிலர், “தாம்பரம் மாநகராட்சி மேயர் ரேஸில் சித்ரா தேவி தமிழ்க்குமரன், மகேஸ்வரி கார்த்திக், கல்யாணி டில்லி, வசந்த குமாரி கமலக்கண்ணன், லிங்கேஸ்வரி ஸ்ரீதர் குமார் ஆகியோர் இருக்கிறார்கள் என்கிறார்கள்.
துணை மேயர் போட்டியில் எஸ்.ஆர்.ராஜாவின் மைத்துனர் டி.காமராஜ், ஜெகத்ரட்சகன் மைத்துனர் ஜி.காமராஜ், பல்லாவரம் எம்.எல்.ஏ இ.கருணாநிதி சகோதரர் ஜோசப் அண்ணாதுரை, தா.மோ.அன்பரசன் ஆதரவாளர் பெருங்களத்தூர் சேகர் ஆகியோர் இருக்கின்றனர்.

தாம்பரம் பகுதியில் இருப்பவருக்கு மேயர் பதவி கொடுத்தால், பல்லாவரம் பகுதியில் இருப்பவர்களுக்குத்தான் துணை மேயர் பதவி கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இப்போது வரை பேச்சுவார்த்தை சென்றுகொண்டிருக்கிறது என்கிறார்கள். அப்படிப் பார்த்தால் ஜெகத்ரட்சகனின் மைத்துனர் ஜி காமராஜ், இ.கருணாநிதியின் சகோதரர் ஜோசப் அண்ணாதுரை ஆகியோருக்கு வாய்ப்பு உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஒருவேளை, பல்லாவரம் பகுதியில் இருப்பவருக்கு மேயர் பதவி கொடுத்தால், தாம்பரம் பகுதியில் இருப்பவர்களுக்குத்தான் துணை மேயர் கொடுக்க வேண்டும். அந்த வகையில் எஸ்.ஆர்.ராஜாவின் மைத்துனர் டி.காமராஜுக்கு வாய்ப்பு இருக்கும். அமைச்சர் தா.மோ.அன்பரசனின் ஆதரவாளர் பெருங்களத்தூர் சேகர், ஜி.காமராஜ் அல்லது ஜோசப் அண்ணாதுரை ஆகியோரும் துணை மேயருக்கான ரேஸில் இருக்கிறார்கள்" என்றனர்.

இதற்கிடையே சமீபத்தில் நடந்த கவுன்சிலர்கள் கூட்டத்தில் வசந்தகுமாரியை மேயராகவும், பல்லாவரம் ஜி.காமராஜை துணை மேயராகவும் நியமிக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்தக் களேபரங்களுக்கு இடையே, தி.மு.க-வின் கூட்டணிக் கட்சிகளெல்லாம் மண்டலத் தலைவர் பதவியை எதிர்பார்த்து காய்நகர்த்துகின்றன. இவர்களின் கோரிக்கைமீது எடுக்கப்பட்ட நடவடிக்கையும், யார் மேயர், துணை மேயர் என்கிற முடிவும் மார்ச் 4-ம் தேதி நமக்குத் தெரிந்துவிடும்.