Published:Updated:

``உச்ச நீதிமன்றத்தால் நீக்கப்பட்ட பிரிவில் வழக்கா?''- மணியரசனின் குற்றச்சாட்டும் அதிமுக-வின் பதிலும்

அயோத்தி தீர்ப்பை எதிர்த்து முகநூலில் கருத்து வெளியிட்டதாகக் கூறி தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் பொதுச் செயலாளர் அரங்க குணசேகரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல், அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் செயல் எனத் தமிழ் அமைப்புகளிடையே கடும் கொந்தளிப்பை உண்டாக்கியிருக்கிறது.

பல ஆண்டுகளாக நடந்துவந்த, உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கடந்த நவம்பர் 9-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பில்,

* அயோத்தியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த மாற்று இடம் வழங்க வேண்டும்.

*வக்ஃபு போர்டு ஏற்கும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் தர மத்திய அரசு, உத்தரப் பிரதேச அரசுகளுக்கு உத்தரவு.

* சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை ராமர் கோயில் கட்டுவதற்காக ஒதுக்க வேண்டும். சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம். இதற்காகப் புதிய அறக்கட்டளை ஒன்றை 3 மாதத்தில் மத்திய அரசு அமைக்க வேண்டும். அந்த அறக்கட்டளை ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பவை குறிப்பிடப்பட்டன.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல குரல்கள் ஒலித்தன. பல அரசியல் கட்சிகள் தீர்ப்பை ஏற்று நடக்க வலியுறுத்தின. பல அமைப்புகள், இயக்கங்கள் தீர்ப்புக்கு எதிராகப் பொதுக்கூட்டங்கள் நடத்தின. சமூக வலைதளங்களிலும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன.

நீதிபதிகள்
நீதிபதிகள்

வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள பிரிவுகள்

தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் 66-ஏ (மின்னணு ஊடகம் மூலம் மக்களைத் தவறாக வழி நடத்துதல்), 72 (ரகசிய தன்மை மற்றும் தனியுரிமையை மீறியது), 72-ஏ (சட்டபூர்வமான ஒப்பந்தத்தை மீறி தகவல்களை வெளியிடுதல்), இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் 228 (நீதித்துறை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியருக்கு வேண்டுமென்றே அவமதிப்பு அல்லது குறுக்கீடு செய்தல்), 504 (அமைதியை மீறும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிப்பது), 505(2) (பல்வேறு சமூகத்தினரிடையே பகை, வெறுப்பு அல்லது தவறான அறிக்கையை உருவாக்குதல் அல்லது ஊக்குவித்தல்) 3 மற்றும் 12 (நீதிமன்ற அவமதிப்பு).

இந்தநிலையில், தீர்ப்பு வெளியானபோது முகநூலில் தெரிவித்த கருத்துக்கு, மூன்று மாதங்களுக்குப் பிறகு, தற்போது தஞ்சாவூர் கிழக்குக் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜீவகன் புகாரின் அடைப்படையில், பல்வேறு பிரிவுகளில் கிழக்கு காவல் நிலைய போலீஸார், கடந்த சனிக்கிழமை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்தநிலையில், இந்தச் சம்பவம் குறித்து இந்த வழக்கில், முதன்மைக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள, தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசனிடம் பேசினோம்,

``தீர்ப்பு வெளியானபோது எங்கள் அமைப்பின் முகநூல் பக்கத்தில் ஒரு கவிதை வெளியிட்டோம். அதற்காகவா என்று தெரியவில்லை. ஆனால், அந்தக் கவிதை பதியப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டன. அயோத்தி பிரச்னையே நடைமுறை விவாதத்தில் இல்லை. இந்தநிலையில், அந்த விஷயத்தைத் தற்போது கையில் எடுத்து. வழக்கு போட்டுள்ளார்கள். இவ்வளவு நாள் விட்டு தற்போது வழக்கு பதிவு செய்ததிலிருந்து, இதை மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாகவே நான் பார்க்கிறேன். முக்கியமாக, கோயில்களில் குடமுழுக்கு தமிழில் நடத்த வேண்டும் என நான் போராடி வருவதை அவர்களால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. அதனால்தான் என் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள் என்று நான் கருதுகிறேன்.

பெ.மணியரசன்
பெ.மணியரசன்

ஆனால், இவர்கள் வழக்கு பதிவு செய்திருக்கிற 66ஏ பிரிவை 2018-ம் ஆண்டிலேயே உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. அரசியலைமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் (19) உட்பிரிவு 2-க்கு எதிராக இருப்பதாகக் கூறி நீக்கியிருக்கிறது. பா.ஜ.க-வின் தமிழ் மொழி எதிர்ப்பு, தமிழ் இன மறுப்பு ஆகியவற்றை மக்களுக்கு அம்பலப்படுத்துவதாலும், அண்மையில் தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கில் தமிழிலும் நடத்த வேண்டும் என மக்களைத் திரட்டி போராடியதாலும்தான் ஆத்திரம் அடைந்து என்மீது வழக்கு போட்டிருப்பார்களோ என்கிற சந்தேகம் எழுகிறது. எதுவாக இருந்தாலும் நான் சந்திப்பதற்குத் தயாராகவே இருக்கிறேன்'' என்றார் அவர்.

நீதிமன்றத் தீர்ப்பை விமர்சிப்பது தவறல்ல. நீதிபதிக்கு உள்நோக்கம் இருப்பதாகத்தான் விமர்சிக்கக் கூடாது. இதற்குப் பல உதாரணங்கள் உள்ளன. ஓய்வுபெற்ற நீதிபதிகளே பல தீர்ப்புகளை விமர்சித்துள்ளார்கள். அயோத்தி தீர்ப்பு குறித்து நான் எழுதிய கவிதை பா.ஜ.க-வினரை கோபமடைய வைத்திருக்கும். ஆனால், தற்போதைய வழக்குக்கு அதுமட்டுமே காரணமல்ல.
பெ.மணியரசன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள மற்றொருவர், தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் பொதுச் செயலாளர் அரங்க குணசேகரனிடம் பேசினோம்,

``எதற்காக எங்களின் மீது வழக்குப் போட்டுள்ளார்கள் என்று தெரியவில்லை. அதேசமயம், எங்களின் அரசியல் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான முயற்சியாகவே இந்த வழக்கை நான் கருதுகிறேன். மத்திய அரசின் சி.ஏ.ஏ-வை எதிர்த்து நடக்கும் போராட்டங்களில் தொடர்ச்சியாகக் கலந்துகொண்டு வருகிறோம். அது மத்திய அரசுக்குப் பிடிக்கவில்லை.

மோடி அரசின் கைப்பாவையான தமிழக அரசு எங்களை அச்சுறுத்திப் பார்க்க நினைக்கிறது. மத்திய அரசின் அழுத்தத்தால்தான் இந்த வழக்கு போடப்பட்டிருக்கும். ஆனால், இதற்கு முன்பே நான் இதுபோன்ற பல வழக்குகளைச் சந்தித்திருக்கிறேன். அதனால், எதற்கும் அஞ்சப்போவதில்லை. நீதிமன்றத்தில் சந்திக்கத் தயாராகவே இருக்கிறேன்'' என்றார்.

அரங்க குணசேகரன்
அரங்க குணசேகரன்

இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள மற்றொரு நபரான பழ.நெடுமாறனைத் தொடர்புகொள்ள முயன்றோம். அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அவரின் கட்சியான, தமிழர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும் மருத்துவருமான பாரதிச்செல்வனிடம் பேசினோம்,

``அயோத்தி தீர்ப்புக்காகவெல்லாம் இல்லை. கடந்த வாரம், சி.ஏ.ஏ-வுக்கு எதிராக, தஞ்சாவூரில் இஸ்லாமியர்கள் நடத்திய காத்திருப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஐயா நெடுமாறன் பேசினார். அதற்காகத்தான் இந்த வழக்கைப் பதிவு செய்திருக்கிறார்கள்'' என்கிறார் பாரதிச்செல்வன்.

இந்தநிலையில், மத்திய அரசை எதிர்த்துப் போராடுவதால்தான் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்கிற குற்றச்சாட்டை பா.ஜ.க-வைச் சேர்ந்த நாராயணன் திருப்பதியிடம் முன்வைத்தோம்,

``உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்துப் பேசுவது, அதை விமர்சிப்பது, அது இந்திய நாட்டின் நீதித்துறையையே கேலிக்குரியதாக்குவது, கேள்விக்குரியதாக்குவது. நாம் அனைவரும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு கட்டுப்பட்டவர்கள் என்கிற அடிப்படையில், நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான் ஒவ்வொரு குடிமகனின் கடமை. நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிப்பது மட்டுமல்ல, அதை இந்த நாட்டு மக்களுக்கு எதிராகத் திருப்புவது அல்லது ஒருசாராருக்கு எதிராகத் தீர்ப்பு இருக்கிறது என்று சொல்வதெல்லாம் தவறுதான். மத்திய அரசை, மாநில அரசைக் குற்றம் சொல்வதையெல்லாம் ஏற்க முடியாது.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

அவர்கள் செய்த தவற்றுக்கு, மற்ற விஷயங்களைக் சுட்டிக்காட்டி தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறார்கள். அவர்கள் தாங்கள் செய்த தவற்றை உணர வேண்டும். தண்டனையை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கையானது வரவேற்கப்பட வேண்டியது. யாரும் இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்பதற்கு இது தொடக்கமாக இருக்கும். நவம்பரில் நடந்த சம்பவத்துக்கு இப்போது வழக்கா என்றால், வழக்கின் தன்மையை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க இவ்வளவு காலம் ஆகியிருக்கலாம். யாரின் மீது எப்போது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அரசுதான் முடிவு செய்ய வேண்டும். தீர்ப்பை விமர்சிப்பதும் நீதிபதியை விமர்சிப்பதும் ஒன்றுதான். அதில் ஒன்றும் பெரிய வேறுபாடு இல்லை'' என்கிறார் நாராயணன் திருப்பதி.

`முகநூல் கவிதைக்காக பெ.மணியரசன் மீது வழக்கு!' - பா.ஜ.க-வின் கோபத்துக்கு அது மட்டும்தான் காரணமா?

மத்திய அரசின் அழுத்தம் காரணமாகத்தான் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறதா?

உச்ச நீதிமன்றத்தால் நீக்கப்பட்ட ஒரு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறதா?

மேற்கண்ட குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேட்க, அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜைத் தொடர்பு கொண்டோம்,

``மத்திய அரசுக்கும் இந்த வழக்குக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நீதிமன்றத் தீர்ப்பை தனிப்பட்ட முறையில் விமர்சித்துப் பேசுவது தவறு என்பதுதான் அரசின் நிலைப்பாடு. தமிழர்களுக்காகப் பேசுவதாகக் கூறுகிறார்கள். தமிழர்களுக்கும் அயோத்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அயோத்தி தீர்ப்பை தமிழகத்தில் வாழும் இந்துக்களும் இஸ்லாமிய மக்களும் ஏற்றுக்கொண்டபோது இவர்கள் அப்படிப் பேசுவது தவறு. அதனால், அரசின் நடவடிக்கை சரிதான்.

கோவை செல்வராஜ்
கோவை செல்வராஜ்

ஒரு சட்டத்தில் குறிப்பிட்ட ஷரத் தேவையா, தேவையில்லையா என்பது குறித்துதான் நீதிமன்றம் பேசலாம், பரிந்துரைக்கலாமே தவிர, எந்தச் சட்டத்தையும் நீதிமன்றம் நீக்க முடியாது. அதை நீக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்குத்தான் இருக்கிறது. நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டத்தை நீக்கியதாகத் தெரியவில்லை'' என்றார் அவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு