பிரீமியம் ஸ்டோரி

மும்மொழிக் கொள்கை குறித்த சர்ச்சையின் சூடு தணிவதற்குள், தபால் துறை பணிகளுக்கான போட்டித்தேர்வில் தமிழ் மொழி திடீரென நீக்கப்பட்ட விவகாரம் தமிழக அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தைத் தமிழக சட்டமன்றத்தில் தி.மு.க எழுப்பியதைத் தொடர்ந்து, ஆளும் கட்சிக்கும் எதிர்க் கட்சிக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

கடந்த ஆண்டு, தமிழ் உட்பட 15 பிராந்திய மொழிகளில் இந்தத் தேர்வு நடைபெற்றது. தற்போது, ஜூலை 14-ம் தேதி இந்தத் தேர்வு நடைபெறவிருந்த நிலையில், ‘தபால் துறைத் தேர்வுகள் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும்’ என்று ஜூலை 11-ம் தேதி அந்தத் துறை அறிவிப்பு வெளியிட்டது. இதுதான் பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது.

தபால் துறை தேர்வில் தமிழ் புறக்கணிப்பு!

தமிழகத்தில் ரயில்வே, தபால்துறை உள்ளிட்ட மத்திய அரசின் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பணியிடங்களில் வட மாநிலத்தவர்கள் அதிக அளவில் திணிக்கப்படுவ தாகவும் இதனால் தமிழக மக்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுவதாகவும் பல்வேறு சமூக அமைப்புகள் குற்றம் சாட்டிவருகின்றன. இந்தச் சூழலில், தபால்துறை பணிகளுக்கான தேர்வும் சர்ச்சையாகியிருக்கிறது.

இது குறித்து தன்னாட்சித் தமிழகம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆழி செந்தில்நாதனிடம் பேசினோம். ‘‘வட மாநிலங்களில் பெரிய அளவு பொருளாதார வளர்ச்சியை அந்த மாநில அரசுகள் ஏற்படுத்தவில்லை. வேலைவாய்ப்பு களைத் தரக்கூடிய தொழில்துறைகளோ, சேவைத் துறைகளோ அங்கு பெரிதாக உருவாக்கப் படவில்லை. தமிழ்நாடு வளர்ச்சிபெற்ற மாநிலமாகத் திகழ்கிறது.

இந்த நிலையில், மத்திய அரசுத் துறைகள் மற்றும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் வட மாநிலத்தவரை தமிழ்நாட்டில் கொண்டுவந்து திணிக்கும் போக்கு அதிகரித்துவருகிறது. மத்திய பி.ஜே.பி அரசு இதை ஒரு வியூகமாகச் செய்கிறது. இந்தப் பின்னணியில் தான், தபால் துறை பணியாளர்களுக்கான தேர்வில் தமிழ் மொழி திடீரென நீக்கப் பட்டிருக்கிறது.

இதன் மூலம், தமிழக மக்களின் வேலை வாய்ப்புகள் பறிக்கப்படுவதுடன், இந்தி பேசக்கூடிய மக்களை இங்கு கொண்டுவந்து திணிக்கும் போக்கு நடைபெறுகிறது. எனவே, தமிழகத்தில் மத்திய அரசுப் பணிகளில் 90 சதவிகிதம் தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டும் வழங்கும் வகையில் சட்ட ரீதியான ஏற்பாடு களைக் கட்டாயம் செய்ய வேண்டும்” என்றார்.

இது குறித்து நம்மிடம் பேசிய பி.ஜே.பி-யின் மாநில செய்தித் தொடர்பாளரான நாராயணன், “தபால் துறை தேர்வுகளில் தாள் ஒன்று என்பது இந்தி மற்றும் ஆங்கிலத்தில்தான் இருந்துவந்தது. மாநில மொழிகளிலும் இந்தத் தேர்வுகளை எழுதலாம் என்கிற முறையை 2016-ல் மத்திய பி.ஜே.பி அரசு கொண்டுவந்தது. ஆனால், 2016-ல் நடந்த தபால் துறைப் பணிகளுக்கான தேர்வின் போது ஹரியானா, மகாராஷ்டிரம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தமிழ் தெரியாதவர்களும்கூட தமிழ் மொழியைத் தேர்வுசெய்தனர். அதில் மிகப் பெரிய முறைகேடு நடைபெற்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், கடந்த முறை நடைபெற்ற தேர்வில், கணினி மூலமாக ஒரு மோசடி நடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. எனவேதான், வேறு மாநிலத்தவர் யாரும் தவறாகப் பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவும் தமிழக மக்கள் மட்டுமே வேலைவாய்ப்புகளில் பயன்பெற வேண்டும் என்பதற்காகவும் இந்த முறை கொண்டுவரப்பட்டது. துறை சார்ந்த கடிதத்தின் ஒரு பகுதியை வைத்துக் கொண்டு, இது தொடர்பான அறிவிக்கையின் இணைப்பைப் பார்க்காமல், தேவையற்ற குற்றச்சாட்டுகளை தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் எழுப்புகின்றன. அந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை” என்றார்.

ஆழி செந்தில்நாதன்,   நாராயணன்
ஆழி செந்தில்நாதன், நாராயணன்

இதுகுறித்து பி.ஜே.பி-யின் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் கேட்டோம். அவர், “மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடப்பதாகப் புகார்கள் எழுந்தன. அதைத் தொடர்ந்துதான், மத்திய அரசு தற்போது தேர்வு முறைகளில் சில மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. பிராந்திய மொழியை அழிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது என்கிற எதிர்க் கட்சியினரின் குற்றச்சாட்டு தவறானது” என்றார்.

தபால் துறை தேர்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டது குறித்துச் சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்து பேசினார், தி.மு.க உறுப்பினர் தங்கம் தென்னரசு. அப்போது, “மத்திய அரசுப் பணிகளில் தமிழர்கள் சேர்ந்துவிடக் கூடாது என்று திட்டமிட்டு மத்திய அரசு செயல்படுகிறது” என்று குற்றம்சாட்டினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘‘தபால் துறை தேர்வில் தாள் ஒன்றில் மட்டும் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தாள் இரண்டில் எந்தப் பிரச்னையும் இல்லை” என்றார். ஆனால், இது குறித்துத் தமிழக சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற தங்களின் கோரிக்கை ஏற்கப்படாததால் அவையிலிருந்து தி.மு.க வெளிநடப்பு செய்தது.

தமிழ் மொழி புறக்கணிப்பு, வேலைவாய்ப்பு பறிப்பு ஆகியவை தொடர் சர்ச்சைகளாகி வருவது ஆரோக்கியமான போக்கு அல்ல.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு