Published:Updated:

"கூட்டணி நலன்; மக்கள் நலன்... ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக போட்டியிடும்" - ஜி.கே வாசன்

ஜி.கே. வாசன்

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள், த.மா.கா தலைவர் ஜி.கே.வாசனை நேற்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

"கூட்டணி நலன்; மக்கள் நலன்... ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக போட்டியிடும்" - ஜி.கே வாசன்

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள், த.மா.கா தலைவர் ஜி.கே.வாசனை நேற்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

Published:Updated:
ஜி.கே. வாசன்

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ-வும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈவெரா, ஜன. 4-ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, காலியாக இருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு பிப்ரவரி 27-ல் இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த நிலையில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள், த.மா.கா தலைவர் ஜி.கே.வாசனை நேற்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

ஜெயக்குமார் - ஜி.கே.வாசன்
ஜெயக்குமார் - ஜி.கே.வாசன்

அதைத் தொடர்ந்து, அவர் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், "கடந்த 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியின் சார்பாக தமிழ் மாநில காங்கிரஸ் இயக்கத்துக்கு ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்தத் தொகுதியில் தமாகா வேட்பாளராக எம்.யுவராஜ் அறிவிக்கப்பட்டு போட்டியிட்டார். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் அனைத்துத் தரப்பு மக்களும் வசிக்கிறார்கள். தி.மு.க., அதன் கூட்டணிக் கட்சிகள் அறிவித்த பொய்யான வாக்குறுதிகளையும் மீறி, எங்கள் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்களின் கடின உழைப்பால் வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெற்று 58,396 வாக்குகள் பெற்றோம்.

தொடர்ந்து அந்தத் தொகுதியில் கடந்த 20 மாதங்களாக மக்கள் நலப் பணிகளைச் செய்துவருகிறோம். தற்போது எதிர்பாராத சூழல் காரணமாக ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், நேற்று காலை அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர்கள் என்னை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் சந்தித்து, இடைத்தேர்தல் குறித்துப் பேசினார்கள். அப்போது இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க-வின் வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்ற கட்சியின் விருப்பத்தையும் தெரிவித்தார்கள்.

எடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன்
எடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன்

அதன் அடிப்படையில் தமாகா-வின் மூத்த தலைவர்களுடனும், நிர்வாகிகளுடனும் ஆலோசனை செய்தேன். மேலும், தற்போதைய அரசியல் சூழல், எதிர்கால நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு கூட்டணியின் முதன்மைக் கட்சியான அ.தி.மு.க-வின் வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்தை தமாகா ஏற்றுக்கொண்டது. தமிழக மக்கள் நலன், கூட்டணிக் கட்சிகளின் நலன் ஆகியவற்றை மிக முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

எனவே, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தமாகா-வின் நிர்வாகிகள், தொண்டர்கள், தேர்தல் களப்பணியாற்றி கூட்டணிக் கட்சியின் வேட்பாளரது வெற்றிக்கும், கூட்டணிக்கும் உறுதுணையாக இருப்பார்கள் என்பதை தமாகா சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.