Published:Updated:

“பா.ஜ.க-தான் எதிர்க்கட்சி என்பதை பா.ஜ.க-வினரே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்!"

ஜி.கே.வாசன்
பிரீமியம் ஸ்டோரி
ஜி.கே.வாசன்

- சொல்கிறார் ஜி.கே.வாசன்

“பா.ஜ.க-தான் எதிர்க்கட்சி என்பதை பா.ஜ.க-வினரே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்!"

- சொல்கிறார் ஜி.கே.வாசன்

Published:Updated:
ஜி.கே.வாசன்
பிரீமியம் ஸ்டோரி
ஜி.கே.வாசன்

பரபரப்பான தமிழக அரசியல் சூழலில், ஆழ்கடல் அமைதியோடு அரசியல் செய்துவருபவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன். அண்மையில், திடீரென வீறுகொண்டெழுந்து ‘தி.மு.க அரசின் சொத்து வரி உயர்வைக் கண்டித்து, சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பாக ‘மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை’ நடத்தி முடித்திருக்கிறார். இந்தச் சூழலில், ஜி.கே. வாசனைச் சந்தித்தோம்...

‘‘மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தி.மு.க அரசின் சொத்து வரி உயர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியிருக்கிறீர்களே?’’

‘‘தி.மு.க ஆட்சிக்கு வந்த 100-வது நாளிலேயே, ‘தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும்’ எனக் கோரி, மற்றக் கட்சிகளுக்கு முன்னுதாரணமாக முதலில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது த.மா.கா-தான். அதன் பிறகு களப் போராட்டத்துக்கான சரியான காரணம், மக்கள் உணர்வுகளைப் பிரதிபலிக்க சரியான தருணம், இந்தச் சொத்து வரி உயர்வு. வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், சுகாதார நிலையங்கள் என அனைத்தையும், ஏழை, நடுத்தர, பணக்காரர்கள் என அனைத்துத் தரப்பினரையும் கடுமையாக பாதித்திருக்கிறது.’’

“பா.ஜ.க-தான் எதிர்க்கட்சி என்பதை பா.ஜ.க-வினரே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்!"

‘‘ஆனால், `மத்திய அரசின் நிபந்தனையால்தான் சொத்து வரி உயர்த்தப்பட்டது; கடந்த அ.தி.மு.க ஆட்சியில் உயர்த்தப்பட்டதைவிட நாங்கள் குறைவாகத்தான் உயர்த்தியிருக்கிறோம்’ என அமைச்சர் நேரு சொல்கிறாரே..?’’

‘‘மத்திய அரசுதான் காரணம் எனத் தவறான செய்தியைப் பரப்புகிறார்கள். தி.மு.க தேர்தல் அறிக்கையின் 487-வது வாக்குறுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் இயல்புநிலைக்குத் திரும்பும்வரை, சொத்து வரி உயர்த்தப்படாது என உறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் இன்னும் மீண்டெழாத சூழ்நிலையில், சொத்து வரியை 150% வரைக்கும் உயர்த்தியிருக்கிறார்கள். ஆக, இவர்களுக்கு மக்களின் பணத்தை எடுத்துக்கொள்வதில்தான் ஆசை இருக்கிறதே தவிர, மக்கள்மீது உண்மையான அக்கறை இல்லை!’’

‘‘அதே கொரோனா சூழலில்தான், பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்த்தப்பட்டு, மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்காக, மத்திய அரசை எதிர்த்து த.மா.கா போராடவில்லையே?’’

‘‘பெட்ரோல், டீசல் விலை உயர்வு இந்தியாவில் மட்டும் நடக்கக்கூடிய பிரச்னை இல்லை. ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கிடையேயான போரால் நடந்த சர்வதேசப் பிரச்னை. உலகின் பெரும்பாலான நாடுகள் இதை எதிர்கொண்டு வருகின்றன. அந்த நாடுகளோடு ஒப்பிடும்போது, இந்தியாவின் பெட்ரோல் விலை பரவாயில்லைதான். மத்திய அரசாவது மக்களின் நிலையைப் புரிந்துகொண்டு, ‘விலையேற்றத்தைக் குறைப்போம்’ என்கிறது, ஆனால் தி.மு.க ‘சொத்து வரியை உயர்த்தியது உயர்த்தியதுதான்” என்கிறது!’’

‘‘அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பின்னடைவுக்கு என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?’’

‘‘காங்கிரஸ் கட்சிக்குள்ளே இருக்கும் சர்ச்சைகள், குழப்பங்கள் பற்றியெல்லாம் என்னால் கருத்து கூற முடியாது. நான் இப்போது அந்தக் கட்சியிலும் இல்லை. அந்தக் கட்சியோடு கூட்டணியிலும் இல்லை. ஐ ஹேவ் லிமிட்ஸ்!’’

‘‘ `நாட்டின் ஜனநாயகத்துக்கு வலுவான எதிர்க்கட்சி அவசியம். காங்கிரஸ் வலிமை பெற வேண்டும்’ என நிதின் கட்கரியே பேசியிருக்கிறார். தேசிய அளவில் காங்கிரஸை வலுப்படுத்த, த.மா.கா-வை மீண்டும் காங்கிரஸுடன் இணைப்பீர்களா?’’

‘‘தமிழ் மாநில காங்கிரஸ், இனி எப்போதும் தமிழ் மாநில காங்கிரஸாகவே செயல்படும். இதில் கேள்விக்கே இடமில்லை!’’

‘‘தமிழ்நாட்டில், எதிர்க்கட்சி இடத்துக்கு அ.தி.மு.க - பா.ஜ.க இடையே கடும் போட்டி நிலவுகிறதே?’’

‘‘இது முற்றிலும் தவறு... பா.ஜ.க-தான் எதிர்க்கட்சி என்பதை முதலில் பா.ஜ.க-வினரே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மத்தியில் வேண்டு மானால் பா.ஜ.க தலைமையில் இருக்கலாம், மாநிலத்தில் அ.தி.மு.க-வின் கீழ்தான் பா.ஜ.க., த.மா.கா கூட்டணி அமைத்திருக்கிறோம். ஆக, வாக்கு சதவிகிதம், சட்டமன்ற பலம் என அனைத்துவகையிலும் அ.தி.மு.க-தான் எதிர்க் கட்சி. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி என்ற ஸ்தானத்தில் அமர்ந்து அ.தி.மு.க செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. பா.ஜ.க எதிர்க்கட்சிகளின் வரிசையிலிருந்து சிறப்பாகச் செயல்படுகிறது.’’

“பா.ஜ.க-தான் எதிர்க்கட்சி என்பதை பா.ஜ.க-வினரே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்!"

‘‘ `தமிழ்நாட்டை திராவிட இயக்கங்கள்தான் ஆளும். வேறு எவராலும் தமிழ்நாட்டை ஆள முடியாது’ என அ.தி.மு.க எம்.எல்.ஏ சொல்லியிருக்கிறாரே..?

‘‘கடந்த 55 ஆண்டுக்காலமாக ஆளுங்கட்சியாக, எதிர்க்கட்சியாக தி.மு.க - அ.தி.மு.க ஆகிய திராவிட இயக்கங்கள்தான் தமிழ்நாட்டை ஆண்டுகொண்டிருக்கின்றன. இந்தக் கட்சிகளுக்கு மாற்றாகவோ, போட்டியாகவோ யாராலும் வர முடியவில்லை. மூன்றாவது அணிக்கும் இன்றுவரை தமிழக மக்கள் அங்கீகாரம் கொடுக்கவில்லை. இன்றைய சூழலில், இந்தக் கட்சிகளுக்கு மாற்றாக, புதிதாக ஒரு கட்சி வருவதற்கான சூழ்நிலையும் இப்போது இல்லை.’’

‘‘ `ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை ஏற்க வேண்டும்’ என அமித் ஷாவும், `தமிழ்தான் இணைப்பு மொழி’ என ஏ.ஆர்.ரஹ்மானும் கூறியிருக்கிறார்கள். உங்கள் கருத்து..?’’

‘‘தமிழ், நம்முடைய தாய்மொழி, அதற்குத்தான் முதல்நிலை. அதேபோல, எந்த மாநிலத்தில், யாருக்கு, எந்த மொழி தாய்மொழியோ அந்த மொழிக்குத்தான் முதல்நிலை கொடுக்க வேண்டும். உலகின் பெரும்பாலான நாடுகளில் இணைப்பு மொழியாக இருக்கக்கூடிய மொழி ஆங்கிலம். தாய்மொழிக்குப் பிறகு, ஆங்கிலம் கற்பது பிரதானமானது. அதேபோல, மூன்றாவதாக இந்தியாவிலுள்ள எந்தப் பிராந்திய மொழியையும், யார் வேண்டுமானாலும், விருப்பப்பட்டுப் படிக்கலாம். மேலும், நாட்டில் எத்தனையோ பிரச்னைகள் இருக்க, இந்தி மொழியைப் பிரச்னையாக்கி அதை அரசியல் செய்வதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism