அலசல்
சமூகம்
Published:Updated:

பதவி ஆசையே இல்லை என்று சொல்லிவிட முடியாது!

ஜி.கே.வாசன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜி.கே.வாசன்

- ஒப்புக்கொள்கிறார் ஜி.கே.வாசன்

ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட அதீத ஆர்வம்காட்டிய தமிழ் மாநில காங்கிரஸ், கடைசியில் தொகுதியை அ.தி.மு.க-வுக்கு விட்டுக்கொடுத்திருக்கிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, “ஓ.பி.எஸ் நல்ல மனிதர். பண்பாளர். மக்கள் விரும்பும் தலைவர்” என்றெல்லாம் சொல்லி அவரது அணிக்கு ஆதரவளித்த ஜி.கே.வாசன், இந்த முறை ஓ.பி.எஸ் வீடு தேடி வந்து ஆதரவு கேட்டும், அவருக்கு ஆதரவு தரவில்லை. இதன் பின்னணி என்ன என்பது உள்ளிட்ட கேள்விகளுடன் ஜி.கே.வாசனை அவரது கட்சி அலுவலகத்தில் சந்தித்தேன். வாசலுக்கே வந்து வரவேற்று, அவர் அளித்த பேட்டி இங்கே...

“இடைத்தேர்தலில் த.மா.கா-வுக்குத்தான் சீட் என்றிருந்த நிலையில், ஒரே நாள் இரவில் எல்லாம் மாறிவிட்டனவே... அன்று என்ன நடந்தது?”

“ `த.மா.கா-வுக்குத்தான் முன்னுரிமை, முழு ஆதரவும் கொடுக்கிறோம்’ என்று முதலில் அ.தி.மு.க சொன்னாலும், பிறகு ‘பொதுத்தேர்தல் என்பது வேறு, இடைத்தேர்தல் என்பது வேறு என்கிற யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்கிற நிலையும் இருக்கிறது. அதற்குக் கூட்டு முயற்சி தேவை. அதன் அடிப்படையில் கூட்டணியில் முதன்மைக் கட்சியாக, பெரிய கட்சியாக இருக்கக்கூடிய நாங்கள் போட்டியிடத் தயார், யோசித்துச் சொல்லுங்கள்’ என்றார்கள். நானும், எங்கள் கட்சி, தொகுதி நிர்வாகிகளிடம் கள நிலவரம் குறித்து விசாரித்தேன். அடுத்து இது காங்கிரஸின் தேர்தல் கிடையாது. ஆட்சியிலிருக்கும் தி.மு.க-வின் தேர்தல். ஆள் பலம், அதிகார பலம், பண பலத்துடன் களமிறங்கும் தி.மு.க-வுக்கு, அதைவிடப் பெரிய கட்சியால்தான் சரியான பதிலடி கொடுக்க முடியும் என்பதால், அ.தி.மு.க-வின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டோம்.”

பதவி ஆசையே இல்லை என்று சொல்லிவிட முடியாது!

“அதாவது, ‘த.மா.கா நின்றால் தோற்றுவிடும்’ என்று சொல்லி இப்படியொரு முடிவை எடுக்கவைத்துவிட்டார்கள் என்று சொல்லலாமா?”

“வெற்றி தோல்வி என்பதைத் தாண்டி, தமிழ்நாட்டில் எது பெரிய கட்சி, எந்தெந்தப் பெரிய கட்சிகள் தொடர்ந்து இடைத்தேர்தலில் மோதியிருக்கின்றன, யார் யாருக்கு இடைத்தேர்தலில் நல்ல அனுபவம் இருக்கிறது... தேர்தல் ஃபார்முலா என எல்லாவற்றையும் யோசித்து முடிவெடுத்திருக்கிறோம். அதோடு இனிவரும் தேர்தல்களில் த.மா.கா-வின் மதிப்பை நிலைநாட்டுவதோடு, சீட் எண்ணிக்கையைக் கூட்ட வேண்டும் என்கிற தொலைநோக்குப் பார்வையில் எந்த நெருடலும் இல்லாமல், ஒத்த கருத்தோடு, சுமுகமாக எடுத்த முடிவு இது.”

“அ.தி.மு.க-வுக்கு ஆதரவு என்று பொதுவாகச் சொன்னால் எப்படி... இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் இருவரில் உங்கள் ஆதரவு யாருக்கு?”

“அவர்களின் கட்சிக்குள் இருக்கும் பிரச்னைக்குள் போக விரும்பவில்லை. எங்கள் கட்சி எடுத்த முடிவின் அடிப்படையில், எடப்பாடியார் தலைமையிலான கூட்டணியில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். அதுதான் எங்கள் நிலைப்பாடு.”

“அந்தக் கூட்டணியே இல்லை என்றாகி, பா.ஜ.க-வும் அ.தி.மு.க-வும் தனித்தனியே போட்டியிட்டால்..?”

“அப்படி நிற்க மாட்டார்கள் என்று ஆழமாக நம்புகிறேன்.”

“பா.ஜ.க தரப்பிலிருந்து பேசினார்களா?”

“தேர்தல் அறிவித்ததும், பா.ஜ.க சார்பில் கமிட்டி போட்டார்கள். அது குறித்து அண்ணாமலை என்னிடம் பேசினார். என் கருத்தை அவரிடம் தெரிவித்தேன். தேர்தல் தாண்டியும் அவரோடு அவ்வப்போது பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். எங்கள் கம்யூனிகேஷன் க்ளியராக இருக்கிறது.”

“அ.தி.மு.க கூட்டணியில் இருக்க விரும்புகிறீர்களா அல்லது பா.ஜ.க கூட்டணியிலா?”

“என்னைப் பொறுத்தவரை எல்லோரும் சேர்ந்திருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். சேர்ந்துதான் இருக்கிறோம். யாரும் இந்த நிமிஷம் வரை எந்த நிலைப்பாட்டையும் மாற்றவில்லையே?!”

“த.மா.கா., பா.ஜ.க-வுடன் இணையப்போகிறது என்று சொல்லப்படுவது பற்றி...”

“த.மா.கா-வின் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், பொறாமைப்படுகிறவர்கள் பரப்பும் செய்தி!”

“ஆனால், தேர்தல் வரும்போது மட்டும்தானே த.மா.கா என்றொரு கட்சி இருப்பதே தெரிகிறது?”

“மாநில அரசை எதிர்த்தும், மத்திய அரசை வலியுறுத்தியும் குரல் கொடுக்கிறோம். வெறும் அறிக்கையோடு நிற்காமல், தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களும் நடத்திக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், எங்களின் உண்மையான செயல்பாடுகள், நியாயமான செய்திகள் வெளியே வருவதில்லை. அடுத்து, அரசியல் என்பது மக்களோடு மக்களாக இருக்க வேண்டும் என்ற நிலை மாறி, பணம்... பணம்... என்றாகிவிட்டதும் ஒரு காரணம்.”

“த.மா.கா தலைவராக இருந்த உங்கள் தந்தை, முதல்வர் வேட்பாளராகவும், பிரதமர் வேட்பாளராகவும் முன்மொழியப்பட்டவர். உங்களுக்கும் அப்படியான கனவு ஏதும் இருக்கிறதா?”

“முதல்வர் என்கிற இலக்கே தவறானது. என்னுடைய கேடர்ஸ் யாரும் என்னை, ‘வருங்கால முதல்வர்’ என்று சொன்னாலே கண்டிப்பேன். எது யதார்த்தமோ அதைத்தான் பேச வேண்டும். முதலில் கட்சி வளர வேண்டும்... மக்களின் குரலாக இருக்க வேண்டும். அதேநேரத்தில் பதவி ஆசையே இல்லை என்றும் சொல்லிவிட முடியாது.”

“காங்கிரஸிடம் இருக்கும் ஈகோவால்தான் நீங்கள் வீம்புக்குக் கட்சி நடத்திக்கொண்டிருக்கிறீர்கள்’ என்று சொல்கிறார்களே?”

“எனக்கு யாருடனும் எந்த ஈகோவும் இல்லை. காங்கிரஸிலிருந்து வெளியேறுவதற்குப் பல காரணங்கள் இருந்தன. அது சரியாகவும்பட்டது. த.மா.கா., ஐயாவால் உருவாக்கப்பட்ட கட்சி. காங்கிரஸிலிருந்து வெளியேறினாலும் ஒரே குடும்பமாக இருக்கும் தொண்டர்கள், நிர்வாகிகளுடன் இணைந்து இன்று த.மா.கா-வை வழிநடத்திக்கொண்டிருக்கிறேன்.”

“ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளை ஆரோக்கியமான விஷயமாகப் பார்க்கிறதா த.மா.கா ?”

“ஆளுநருக்கான எல்லை என்ன என்பது தெரிந்து, அதற்கு உட்பட்டுத்தான் செயல்படுகிறார் அவர். கருத்துரிமையின் அடிப்படையில், தனிப்பட்ட முறையில் அவர் சில விஷயங்களை முன்வைக்கிறார். எதையும் அதிகாரபூர்வமாக வலியுறுத்தவில்லையே... அப்படி இருக்கும்போது அதை அரசியலாக்கவேண்டிய அவசியம் என்ன?”