அரசியல்
அலசல்
Published:Updated:

"பா.ஜ.க விமர்சிக்கும்போது கோபம் வரத்தான் செய்யும், ஆனால்..?" - த.மா.கா யுவராஜின் காங்கிரஸ் பாசம்!

த.மா.கா யுவராஜ்
பிரீமியம் ஸ்டோரி
News
த.மா.கா யுவராஜ்

அ.தி.மு.க அரசும் டாஸ்மாக் வருமானத்தை நம்பித்தான் இருந்தது. ஆனால், அவர்களது ஆட்சிக்காலத்தில் கிட்டத்தட்ட 1,000 மதுக் கடைகளை மூடினர்

கள்ளச்சாராயம் விவகாரம் தமிழக அரசியலை தடதடத்துவரும் நிலையில், ‘மதுவிலக்கு கோரிக்கை’யை முன்வைத்து கையெழுத்து இயக்கம் நடத்துவதாக அறிவித்திருக்கிறது தமிழ் மாநில காங்கிரஸ்! இந்த நிலையில், அந்தக் கட்சியின் மாநில இளைஞரணித் தலைவர் யுவராஜைச் சந்தித்தேன்...

“கள்ளச்சாராய விவகாரம் பூதாகரமாகியிருக்கும் சூழலில், தங்கள் இருப்பைக் காட்டுவதற்காகவே த.மா.கா மதுவுக்கு எதிராகக் கையெழுத்து இயக்கம் நடத்துவதாக விமர்சனம் எழுந்திருக்கிறதே?”

“பூரண மதுவிலக்குதான் தமிழ் மாநில காங்கிரஸின் கொள்கை. ஆனால், அதை ஒரே நாளில் அமல்படுத்திவிட முடியாது என்பதால், இயக்கமாக முன்னெடுக்க த.மா.கா முயல்கிறது. ஆனால், தற்போதைய தி.மு.க அரசு, முழுக்க முழுக்க மதுவை மட்டுமே நம்பி அரசை நடத்துகிறது. கடந்த 20 ஆண்டுக்கால தமிழக வரலாற்றில், இது போன்ற கள்ளச்சாராயச் சாவுகள் எங்கும் நடக்கவில்லை. கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் கொடுப்பதெல்லாம் அரசுக்கு அவமானமில்லையா?”

த.மா.கா யுவராஜ்
த.மா.கா யுவராஜ்

“உங்கள் கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க., டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்காகவே நெடுஞ்சாலைகளின் பெயரை மாற்றிய கடந்தகால வரலாறெல்லாம் இருக்கிறதே?”

“அ.தி.மு.க அரசும் டாஸ்மாக் வருமானத்தை நம்பித்தான் இருந்தது. ஆனால், அவர்களது ஆட்சிக்காலத்தில் கிட்டத்தட்ட 1,000 மதுக் கடைகளை மூடினர். தி.மு.க-வினரோ இந்த 25 மாத ஆட்சியில், ஒரு கடையைக்கூட மூடியதாகத் தெரியவில்லை. ஆக, மது விவகாரத்தில் அ.தி.மு.க - தி.மு.க-வை ஒப்பிடமுடியாது.”

“பிரதமர் மோடியை அடிக்கடி சந்திக்கிறார் ஜி.கே.வாசன். பா.ஜ.க-வின் தமிழ்நாட்டுக் கிளைபோலத்தான் த.மா.கா செயல்படுகிறது என்கிறார்களே?”

“(பலமாகச் சிரிக்கிறார்). தி.மு.க தலைவர்கள் டெல்லிக்குச் சென்று பிரதமர் மோடியைச் சந்திக்கிறார்கள்; கட்டியணைக்கிறார்கள். கேட்டால்... ‘ஆட்சியில் இருப்பதால், இணக்கமாக இருக்கிறோம்’ என்கிறார்கள். ஆனால், நாங்கள் சந்தித்தால் மட்டும் தவறு என்கிறார்கள். உண்மையில் பா.ஜ.க-வின் கிளைக் கழகம் தி.மு.க-தான்!”

“மம்தா உள்ளிட்ட தலைவர்கள்கூட காங்கிரஸை ஆதரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். நீங்களும் முடிவை மாற்றிக்கொள்ள வாய்ப்பிருக்கிறதா?”

“காங்கிரஸ் கட்சியின் கோஷ்டிப் பிரச்னை, உழைப்பவர்களை ஒதுக்கும் போக்கால்தான், அதன் தலைவராகப் பொறுப்பேற்க ராகுலே தயக்கம் காட்டுகிறார். இந்த நிலையில், அந்தக் கட்சிக்கு நாங்கள் எப்படி ஆதரவு கொடுப்பது... உண்மையான காங்கிரஸே நாங்கள்தான்!”

“பிறகு ஏன் காந்தி, நேரு, இந்திரா போன்ற காங்கிரஸ் தலைவர்களை பா.ஜ.க விமர்சிக்கும்போது உங்களுக்குக் கோபம் வருவதில்லை?”

“பா.ஜ.க விமர்சிக்கும்போது கோபம் வரத்தான் செய்யும். ஆனால், அவர்களை எங்கோ வடநாட்டில் விமர்சிக் கிறார்கள். எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் அண்ணாமலையோ, பிற பா.ஜ.க தலைவர்களோ அதுபோன்று விமர்சிக்கவில்லை. அப்படி விமர்சித்தால், நிச்சயம் எதிர்வினையாற்றுவோம்.”