Published:Updated:

"இடைத்தேர்தலில் வாய்ப்பு கிடைத்தால் போட்டி; மறுத்தால் கூட்டணி வெற்றிக்காக உழைப்போம்"- தமாகா யுவராஜா

யுவராஜா

``ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் வாய்ப்பு கிடைத்தால் போட்டியிடுவோம் மறுத்தால் கூட்டணியின் வெற்றிக்காகப் பாடுபடுவோம்.'' - யுவராஜா

"இடைத்தேர்தலில் வாய்ப்பு கிடைத்தால் போட்டி; மறுத்தால் கூட்டணி வெற்றிக்காக உழைப்போம்"- தமாகா யுவராஜா

``ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் வாய்ப்பு கிடைத்தால் போட்டியிடுவோம் மறுத்தால் கூட்டணியின் வெற்றிக்காகப் பாடுபடுவோம்.'' - யுவராஜா

Published:Updated:
யுவராஜா

தமிழ் மாநில காங்கிரஸின் இளைஞர் அணி சார்பில் ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 300 மாணவ, மாணவியர்கள் மருத்துவ கல்விக்கான நீட் தேர்வுக்குத் தயாராகும் வகையில் பயிற்சி கையேடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான விடியல் சேகர், மாநில துணைத் தலைவர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவியர்களுக்குக் கையெடுகளை வழங்கிய தமிழ் மாநில காங்கிரஸ் மாநில இளைஞரணித் தலைவர் யுவராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ``தமிழகம் முழுவதும் ஏழை, எளிய மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயாராகும் வகையில், பயிற்சி புத்தகங்களை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் இலவசமாக வழங்கிவருகிறோம். முதற்கட்டமாக 300 மாணவ, மாணவியர்களுக்கு நீட் தேர்வு பயிற்சிக்கான கையேடுகளை வழங்கியிருக்கிறோம். விரைவில் ஈரோடு கிழக்குத் தொகுதி முழுவதும் வழங்குவோம்.

மாணவிகளுக்கு நீட் கையேடுகள் வழங்கல்.
மாணவிகளுக்கு நீட் கையேடுகள் வழங்கல்.

நீட் தேர்வை ரத்துசெய்வோம் என்பது உள்ளிட்ட பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசியே தி.மு.க ஆட்சியைக் கைப்பற்றியது. தி.மு.க-வால் எந்தக் காலத்திலும் நீட் தேர்வை ரத்துசெய்யவே முடியாது. இவர்களது பொய் வாக்குறுதியால் மாணவர்கள்தான் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கடந்த ஆண்டு நீட் தேர்வெழுதிய 1.08 லட்சம் மாணவர்களில் 54 சதவிகிதம் பேரும், இந்த ஆண்டில் 1.34 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதி 51.30 சதவிகிதம் பேரும் தேர்ச்சி பெற்றனர்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியின்போது அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் மருத்துவக் கல்வியில் உள் இட ஒதுக்கீடு அளித்ததன் காரணமாக ஆண்டுக்கு ஏழை மாணவர்கள் 350 பேருக்கு மேல் மருத்துவக் கல்வி பயில வழிவகை ஏற்பட்டிருக்கிறது.

எனவே, இனியும் தி.மு.க நீட் தேர்வை வைத்து அரசியல் செய்ய முடியாது. தமிழகத்தில் சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு போன்ற காரணங்களால் விவசாயிகளும், அனைத்துத் தொழில் நிறுவனங்களும் கடும் பாதிப்பைச் சந்தித்துவருகின்றன. தற்போது தி.மு.க அரசு ஆளுநரைவைத்து அரசியல் செய்யத் தொடங்கிவிட்டது. தமிழ் மொழியை முன்னிலைப்படுத்தி மக்களைத் தூண்டிவிடும் பணியில் தி.மு.க அரசு ஈடுபடத் தொடங்கிவிட்டது. கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தான் த.மா.கா தோல்வியைத் தழுவியது.

தற்போதைய காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா காலமானதையடுத்து, இந்தத் தொகுதியின் இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட தமிழ் மாநில காங்கிரஸுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குமாறு கேட்டிருக்கிறோம்.

பொங்கலிட்டு கொண்டாடிய த.மா.கா.வினர்.
பொங்கலிட்டு கொண்டாடிய த.மா.கா.வினர்.

இந்த இடைத்தேர்தலில் த.மா.கா-வுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறோம். இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், எடப்பாடி பழனிசாமியுடன் பேசிவருகிறார். இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் யார் போட்டியிடுவது என்பதை தலைவர்கள் கூடிப் பேசி அறிவிப்பார்கள்'' என்றார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க போட்டியிடப் போவதாகப் பரவலாகப் பேச்சு எழுந்திருக்கிற நிலையில், த.மா.கா-வுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறீர்களா என்று கேட்டதற்கு, ``போட்டியிடும் உரிமையை வழங்குமாறு நாங்கள் கேட்கிறோம். வாய்ப்பு கொடுத்தால் போட்டியிடுவோம். இல்லையென்றால் கூட்டணியின் வெற்றிக்காகப் பாடுபடுவோம்'' என்றார்.

யுவராஜா
யுவராஜா


அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகி பா.ஜ.க தனித்துப் போட்டியிட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறதே என்று கேட்டபோது, ``இடைத்தேர்தலில் பா.ஜ.க., அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகி தனியே போட்டியிடாது என்று மாநிலத் தலைவர் அண்ணாமலை உறுதிபட தெரிவித்துவிட்டார். எனவே, அ.தி.மு.க-விலிருந்து பா.ஜ.க கூட்டணியை முறித்துக்கொள்ள வாய்ப்பில்லை'' என்றார்.

2021-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெராவை எதிர்த்து அ.தி.மு.க கூட்டணி சார்பில் த.மா.கா இளைஞரணித் தலைவர் யுவராஜா போட்டியிட்டு 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருந்தார். இந்த நிலையில், தற்போது இதே தொகுதியில் நடைபெற இருக்கிற இடைத்தேர்தலில் த.மா.கா சார்பில் யுவராஜா வாய்ப்பு கேட்கிறார் என்று கூறப்படுகிறது.