Published:Updated:

`700 வருடம் இளைய மொழி; மறைமுக கள்ளத்தனம்'- நாடாளுமன்றத்தில் கொதித்த தமிழக எம்.பி-க்கள்!

எம்.பி ஆ.ராசா
எம்.பி ஆ.ராசா

`சம்ஸ்கிருதத்தை வளர்க்க வேண்டும் என்று இந்த அரசு எடுக்கும் நடவடிக்கையில் எங்களுக்கு விரோதம் இல்லை. அதேநேரத்தில் இந்த அவையில் பேசப்படும் கருத்துகள் இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய வரலாற்றுப் பிழையை ஏற்படுத்திவிடக் கூடாது.'

மக்களவையில் நேற்று சம்ஸ்கிருத பல்கலைக்கழகங்கள் அமைப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதங்கள் நடைபெற்றன. இந்த விவாதத்தில் தி.மு.க சார்பில் ஆ.ராசா கலந்துகொண்டு பேசினார். அதில், ``ஐந்து முறை எம்.பி-யாகவும், மூன்று முறை மத்திய அமைச்சராகவும் பணியாற்றி இருந்தாலும் முதல்முறையாக என்னுடைய தாய் மொழியில் பேசுகிறேன். இந்த சட்டத்தின் நோக்கம் சம்ஸ்கிருதத்தில் பட்ட மேற்படிப்பு, முனைவர் பட்டம், சாஸ்தர கல்வியைக் கற்றுத்தரும் நோக்கத்தோடு கொண்டுவரப்பட்டுள்ளது. எந்த மொழிக்கும் நானும், தி.மு.கவும் எதிரானவர்கள் அல்ல. ஆனால், எந்த ஒரு மொழியும், இன்னொரு மொழிமீது ஆதிக்கம் செலுத்தும் என்றால், எந்த மொழியும் இன்னொரு மொழியை அழிக்க நேர்ந்தால் அதை எங்கள் கட்சி ஒருபோதும் ஒப்புக்கொள்ளாது.

ஆ.ராசா
ஆ.ராசா

சம்ஸ்கிருதத்தை வளர்க்க வேண்டும் என்று இந்த அரசு எடுக்கும் நடவடிக்கையில் எங்களுக்கு விரோதம் இல்லை. அதேநேரத்தில் இந்த அவையில் பேசப்படும் கருத்துகள் இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய வரலாற்றுப் பிழையை ஏற்படுத்திவிடக் கூடாது. இந்தியாவில் இரண்டு சிந்தனை மரபுகள் இருந்தது என்பதை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். ஒன்று சம்ஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்ட ஆரிய பண்பாடு, இன்னொன்று தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட திராவிட மொழிகளை அடிப்படையாக கொண்டுள்ள திராவிட பண்பாடு. சம்ஸ்கிருதத்தில் இருந்துதான் தமிழ் வந்தது என்பதை ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டோம்.

`தேசப் பக்தரை இங்கே குறிப்பிடக் கூடாது!’- ஆ.ராசா பேச்சும் பிரக்யாவின் சர்ச்சைக் கருத்தும்

நான் இன்றைக்கு மரியாதையுடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். சம்ஸ்கிருதம் தான் தேவபாஷை என்று சொன்னால், இந்த மொழிதான் கடவுளுக்குத் தெரியும் மற்ற மொழிகள் கடவுளுக்குத் தெரியாது என்றால் தந்தை பெரியார் சொன்னதுபோல் இப்படி ஒரு கடவுளை நாங்கள் தூக்கியெறிய தயங்க மாட்டோம். எங்களை நாத்திகராகவோ, ஆத்திகராகவோ ஆக்குவது எங்கள் கொள்கை அல்ல. நீங்கள் எடுத்துவைக்கும் வாதம் எங்களை எப்படி ஆக்குவது என்ற நெருக்கடியைத் தருகிறது. சம்ஸ்கிருத மொழி இந்தோ ஐரோப்பா குடும்பத்தின் மொழிகளில் தலையாய மொழியாக இருக்கிறது. தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகள் திராவிட குடும்பத்தின் அடிப்படை மொழிகள் ஆகும். இரண்டுக்குமே சிறப்புகள் உள்ளன. ஆனால், இதில் குறைபாடு இருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஆ.ராசா
ஆ.ராசா

சம்ஸ்கிருத மொழி ஒரு செவியியல் மொழி. இதற்கென வேதங்கள், கீதை இருந்தாலும் சம்ஸ்கிருதத்துக்கு வயது 2,500 ஆண்டுகளுக்கு மேல் சொல்ல முடியவில்லை. தமிழுக்கு வாருங்கள். 4,500 ஆண்டுகளுக்கு முன்பே முதல்சங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதை அமைத்தவர் மன்னர் காய்தினவழுதி. அப்போதே 450 புலவர்கள் நூல்கள் எழுதினர். இதில் முதுநாரை போன்ற இரண்டு நூல்களைத் தவிர எல்லாம் கடலில் போய்விட்டது. இது வரலாறு. இவையெல்லாம் இன்றைக்கும் கல்வெட்டில் இருக்கிறது. நான் எதோ தேவபாஷை என்றோ, நம்பிக்கை அடிப்படையிலோ பேசவில்லை. ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். எப்போதும் நம்பிக்கை அடிப்படையில் பேசுவது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழகல்ல. நம்பிக்கை என்பது வேறு.

சுருக்கமாக பேசுங்கள்; அமைச்சர் பதில் அளிக்கட்டும்!'- நாடாளுமன்ற அவையை நடத்திய ஆ.ராசா

உதாரணத்துக்கு இங்கு ஒரு சம்பவத்தை குறிப்பிடுகிறேன். நான் சிறுவயதில் இருக்கும்போது என் தாய், தந்தையர் சிவன் படத்தை வீட்டில் மாட்டிவைத்திருந்தனர். அதில் சிவன் தலையில் நிலா இருந்தது. நான் அப்போது சிவன் தலையில் நிலா இருக்கும் என்று நம்பினேன். ஆனால், என்றைக்கு ஆம்ஸ்ட்ராங் நிலாவில் காலடி எடுத்துவைத்தார் என்று சொன்னார்களோ அப்போதுதான் உண்மை தெரிந்தது. அப்போதும் என்னால் அதை நம்ப முடியவில்லை. எனவே, நம்பிக்கை என்பது அறிவியல் வரும்போது நகர்ந்து வழிவிட்டால்தான் ஆரோக்கியமான மனிதப்பண்பு. 4,000 ஆண்டுகள் முன்பே தமிழில் தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு இப்படி எத்தனையோ நூல்கள் இருக்கின்றன. இன்னும் பெருமையாகச் சொல்ல வேண்டும் என்று சொன்னால் பிரதமர் மோடி வெளிநாட்டில் பேசிய `யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற வாக்கியம் முதல் நூற்றாண்டில் வந்த எட்டுத்தொகை பத்துப்பாட்டில் இருக்கிறது.

ஆ.ராசா
ஆ.ராசா

சம்ஸ்கிருதம் சிறந்தது என்று சொல்கிறீர்கள். சதுர்வர்ணம், நான்கு வர்ணத்தையும் நானே படைத்தேன் என்கிறது சம்ஸ்கிருதம். ஆனால், `பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' எனச் சொல்வது எங்கள் திருக்குறள். பெண்ணாகப் பிறப்பது பாவம் எனச் சொல்வது சம்ஸ்கிருதம், `பெண்ணின் பெருந்தக்க யாவுள' எனச் சொல்வது திருக்குறள். எனவே, இந்தியாவில் இரண்டு விதமான சிந்தனை மரபுகள் உள்ளன. இந்திய சிந்தனை மரபு சம்ஸ்கிருதத்துக்கு மட்டும்தான் சொந்தம் என்று மறைமுகமான கள்ளத்தனத்தை இந்த மசோதா மூலம் கொண்டுவருவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டத்தின் 5வது பிரிவு சம்ஸ்கிருதத்தின் மூலமாக அறிவியலை பரப்பப் போகிறோம் என்று கூறுகிறீர்கள்.


போரிஸ் ஜான்சன் வெற்றி! இந்திய வம்சாவளியினர் 15 பேர் எம்.பிக்களாகத் தேர்வு #GE2019 polls #NowAtVikatan

சம்ஸ்கிருதம் தேவபாஷையாக இந்தியாவுக்குச் சொந்தமானதாக இருக்குமானால், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் ஒருவர் சம்ஸ்கிருதப் பேராசிரியராக வந்ததற்கு ஏன் மறுத்தீர்கள்? அதற்கு என்ன காரணம். அப்படியென்றால் நீங்கள் சம்ஸ்கிருதம் என்பது இந்துக்களுக்குச் சொந்தமானது எனச் சொல்ல வருகிறீர்களா. அப்படிச் சொல்வதாக இருந்தால் ஒருகாலமும் இந்த மொழியை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறேன். சம்ஸ்கிருத மொழி இறந்துவிட்டதா என்று ஒருபட்டிமன்றமே நடந்துகொண்டிருக்கிறது. ஒருமொழியை தூக்கிப்பிடிக்க 150 கோடி செலவழித்துள்ளீர்கள். ஆனால் தமிழ், தெலுங்கு போன்ற மொழிக்கு 12 கோடி மட்டும்தான் செலவழித்துள்ளீர்கள். மொத்தம் 6 மொழி பல்கலைக்கழகங்கள் உள்ளன. மூன்று சம்ஸ்கிருதத்துக்கு மட்டும். இதில், ஒன்றுகூட தமிழுக்கு இல்லை" என்று ஆவேசமாகப் பேசினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன் பேசுகையில், ``இந்த மசோதாவை தாக்கல் செய்து அமைச்சர் பேசும்போது, உலகில் உள்ள மொழிகளுக்கு எல்லாம் தாய் மொழியாகவும், உலக அறிவின் ஆதாரமாகவும் சம்ஸ்கிருதத்தை முன்வைத்தார். இதற்கு என்ன அறிவியல் ஆதாரம் இருக்கிறது என்ற கேள்வியை நான் இங்கு எழுப்பை ஆசைப்படுகிறேன். நாடாளுமன்றத்தில் அறிவியல்பூர்வமான கருத்தை அமைச்சர் முன்வைக்க வேண்டும் என மக்கள் விரும்புவார்கள்.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

ஆனால், அமைச்சர் சொன்னது அடிப்படை ஆதாரமற்றது. நான் இங்கு சில ஆதாரங்களை எடுத்து வைக்க வேண்டும் என நினைக்கிறேன். சம்ஸ்கிருதத்தின் முதல் கல்வெட்டு ராஜஸ்தானிலும், குஜராத்திலும் கிடைத்துள்ளது. அந்த கல்வெட்டின் காலம் கி.பி 1-ம் நூற்றாண்டு. ஆனால், தமிழ் மொழியில் கிடைத்தமுதல் கல்வெட்டு மதுரையின் மாங்குளத்திலும் தேனியிலும் கிடைத்திருக்கிறது. இந்தக் கல்வெட்டின் காலம் கி.மு 6-ம் நூற்றாண்டு. அதாவது சம்ஸ்கிருத கல்வெட்டு கிடைத்ததற்கு 700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் கல்வெட்டு கிடைத்திருக்கிறது. இப்போது சொல்லுங்கள் எது மூத்த மொழி. உங்களைவிட 700 வயது மூத்தவர்கள் நாங்கள்.

எது மூத்த மொழி என்பதை அறிவியல் கண்டுபிடிப்புகளில் இருந்து கேட்கிறோம். இதுவரை இந்தியாவிலே கி.மு 6-ம் நூற்றாண்டு தொடங்கி 18 -ம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் 60,000 தமிழ் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. ஆனால் 4,000 சம்ஸ்கிருத கல்வெட்டுகள்தான் கிடைத்துள்ளன.

இங்கு பேசும்போது பலர் சம்ஸ்கிருதத்தை தேவபாஷை என்று குறிப்பிட்டார்கள். அது அவர்களில் நம்பிக்கை. அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. ஆனால், தமிழ் தேவ பாஷை கிடையாது. தமிழ் மக்களின் பாஷை என்பதே எங்களின் நம்பிக்கை. இதை ஏன் சொல்கிறேன் என்றால், சம்ஸ்கிருதத்தில் இத்தனை இலக்கியம் இருக்கிறதே... இதில் ஒரு பெண் எழுத்தாளராவது உள்ளார்களா..? கிடையாது. ஆனால், 2,000 ஆண்டுகளுக்கு முன்னரே ஒன்றல்ல இரண்டல்ல 40-க்கும் மேற்பட்ட பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே உலக மொழி தமிழ். எனவேதான் அதை மக்களின் மொழி என்று சொல்கிறோம்.

`700 வருடம் இளைய மொழி; மறைமுக கள்ளத்தனம்'- நாடாளுமன்றத்தில் கொதித்த தமிழக எம்.பி-க்கள்!

எந்தக் காலத்திலும் சம்ஸ்கிருதம் மக்களின் புழங்கு மொழியாக இருந்தது கிடையாது. அது ஒரு சடங்கு மொழி. ஆனால், தமிழ் அப்படி கிடையாது. 2,000 ஆண்டுகளுக்கு முன்பே பேசும் மொழியாக இருந்துள்ளது. இலங்கை, மலேசியா என 10 கோடி மக்களின் மொழி தமிழ். தமிழ் சமயசார்பற்ற மொழி. கீழடி ஆய்வே அதற்குச் சான்று. அங்கு ஆயிரக்கணக்கான பொருள்கள் கிடைத்துள்ளன. அதில் ஒரு பொருள் கூட மதம் சார்ந்த பொருள் கிடையாது. ஆனால், நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் எழுத்துகள் கிடைத்துள்ளன.

அதேபோன்று அமைச்சர் குறிக்கிட்டு இந்த விவாதத்தை சம்ஸ்கிருதத்துக்கும் தமிழுக்குமான போட்டியாக மாற்றாதீர்கள் என்று சொன்னார். நிச்சயமாக அப்படி நாங்கள் செய்யவில்லை. எங்களைவிட 700 ஆண்டுகள் இளைய மொழிக்கு எதிராக நாங்கள் ஏன் சண்டை போடப்போகிறோம். ஆனால், சம்ஸ்கிருதம்தான் இந்திய பண்பாட்டின் அடையாளமாக, இந்தியாவின் குரலாக நீங்கள் முன்வைத்தால் அதை எதிர்க்கும் முதல் குரல் தமிழகத்தின் குரலாக இருக்கும்.

மத்திய அரசானது நாட்டில் இருக்கும் அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதை விடுத்து ஒரு மொழியை மட்டும் தூக்கிப் பிடிப்பது என்பதும் அது தேவபாஷை என புனிதத்துவம் அளிப்பதும் ஒரு மதச்சார்பற்ற அரசுக்கு நல்லதல்ல. இந்திய அடையாளம் அனைத்து மொழிகளிலும் இருக்கிறது. அதை உயர்த்திப் பிடிப்போம்" எனக் கூறினார்.

`இந்திய வரலாற்றுக்கே வெளிச்சம் பாய்ச்சும்!’ - கீழடி அகழாய்வு முடிவுகளால் நெகிழும் சு. வெங்கடேசன்
அடுத்த கட்டுரைக்கு