Published:Updated:

வருடத்தில் 70 நாள்கள்... பாதி பேர் ஆப்சன்ட்... சட்டமன்ற ஏ.சியைப் புதுப்பிக்க 1.28 கோடி ஒதுக்கீடு!

சட்டசபை நடக்கும்போது, இதுவரை ஏ.சி பிரச்னை ஏற்பட்டதே இல்லை. முதல்வர், அமைச்சர்கள் அமர்ந்திருக்கும் இடம்... சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்புவார்கள் என்கிற அச்சத்தால், அந்த அளவுக்கு ஏ.சியைப் பராமரித்துவருகிறது அரசின் பொதுப்பணித்துறை. ஆனால், விகடனுக்குக் கிடைத்த ஓர் ஆவணம்...

சட்டப் பேரவை
சட்டப் பேரவை ( விகடன் )

நம் மக்கள் பிரதிநிதிகள் 234 பேர் அமர்ந்து விவாதம் நடத்தும் தமிழக சட்டசபை முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக்கிறது. கவர்னர் உரை, பட்ஜெட் கூட்டத் தொடர், குளிர்கால கூட்டத் தொடர் என ஆண்டுக்கு 70 நாள்கள் வரைதான் தமிழக சட்டசபை நடைபெறும். பட்ஜெட் கூட்டத் தொடரின் போதுதான் தொடர்ச்சியாக சட்டசபை நடைபெறும்.

சட்டசபை ஏசி
சட்டசபை ஏசி
விகடன்

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த சட்டசபையில், ஆரம்பக் காலத்தில் மின்விசிறிகள்தான் பொருத்தப்பட்டிருந்தன. அதன்பின் ஏ.சி பொருத்தப்பட்டன. அவற்றின் திறனும் குறைந்த அளவிலேயே இருந்தன. அது, படிப்படியாக உயர்த்தப்பட்டது. சட்டமன்றத் தேர்தல் முடிந்து புதிய ஆட்சி பதவியேற்கும்போது, சட்டசபையைப் புதுப்பிக்கும் பணியை மேற்கொள்வார்கள். அப்படிப் புதுப்பிக்கும் பணி நடைபெறும்போது, குளிர்சாதன வசதிகளையும் மேம்படுத்துவார்கள். இதுதவிர, சட்டசபை கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பு ஏ.சி பராமரிப்புப் பணிகளை முடித்துவிடுவார்கள்.

'ஏ.சி வசதி போதவில்லை' என ஆளும்கட்சி தரப்பு முணுமுணுத்ததால், ஏ.சியை மேம்படுத்த முடிவுசெய்தது எடப்பாடி அரசு.

சட்டசபை நடக்கும்போது, இதுவரை ஏ.சி பிரச்னை ஏற்பட்டதே இல்லை. முதல்வர், அமைச்சர்கள் அமர்ந்திருக்கும் இடம்... சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்புவார்கள் என்கிற அச்சத்தால், அந்த அளவுக்கு ஏ.சியைப் பராமரித்துவருகிறது அரசின் பொதுப்பணித்துறை.

சட்டசபை ஏசி
சட்டசபை ஏசி
விகடன்
ஸ்கெட்ச் தேர்தலுக்கு இல்ல... ஸ்டாலினுக்குத்தான்... எடப்பாடி பழனிசாமியின் உள்ளாட்சி வியூகம்!

'ஏ.சி வசதி போதவில்லை' என ஆளும்கட்சி தரப்பு முணுமுணுத்ததால், ஏ.சியை மேம்படுத்த முடிவுசெய்தது எடப்பாடி அரசு. சட்டமன்றப் பேரவையில் குளிர்சாதன வசதியைப் புதுப்பிக்க, அரசு கூடுதலாக 1 கோடியே 28 லட்சத்து 43 ஆயிரம் ரூபாயை இந்த நிதியாண்டில் ஒதுக்கியிருக்கிறது. இந்த விவரம் தொடர்பான ஆவணம் விகடனுக்குக் கிடைத்தது. வழக்கமாக, பட்ஜெட்டில்தான் இந்த ஆண்டு நிறைவேற்ற வேண்டிய பணிகளைப் பட்டியலிட்டு, அவை ஒவ்வொன்றுக்கும் நிதியை ஆரம்பத்திலேயே ஒதுக்குவார்கள். ஆனால், சட்டசபையில் ஏ.சி வசதி செய்வது தொடர்பாக இடையில்தான் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் பட்ஜெட்டில் நிதியை ஒதுக்காமல் கூடுதல் செலவாகப் பிறகு இந்தத் தொகை சேர்க்கப்பட்டிருக்கிறது.

இந்த 1 கோடியே 28 லட்சத்து 43 ஆயிரம் ரூபாயை 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பிரித்துப் போட்டால், ஒவ்வொரு எம்.எல்.ஏ-வுக்கும் 54,884 ஆயிரம் ரூபாய் வருகிறது. அதாவது, ஒவ்வொரு எம்.எல்.ஏ-வுக்கும் 54,884 ஆயிரம் ரூபாயை அரசு செலவழித்திருக்கிறது. ஏற்கெனவே தமிழக அரசு கடனில் தத்தளித்துக்கொண்டிருக்கும்போது, சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை ஏற்றினார்கள். இப்போது, சட்டசபையில் குளிர்சாதன வசதியைப் புதுப்பிப்பதற்காக அரசு இந்தளவு செலவு செய்திருக்கிறது. ஆண்டுக்கு 70 நாள்கள்கூட நடக்காத சட்டசபைக்கு, இப்படி அரசின் பணம் வாரி இரைக்கப்படுகிறது. தமிழக முன்னாள் முதல்வர்களான அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் சமாதிகள் இரவு நேரத்தில் அலங்கார மின்விளக்குகளால் ஜொலிக்கின்றன. ஆனால், அதற்கான மின் கட்டணம் பல ஆண்டுகளாக செலுத்தப்படவில்லை என்பதையும் ஏற்கெனவே பதிவுசெய்திருந்தோம்.

Vikatan Lens
Vikatan Lens
``பூங்காவே ஒழுங்காக இல்லை... தமிழகம் அமைதிப் பூங்காவா?”- தி.மு.க., அ.தி.மு.க. சட்டசபை 'தெறி'ப்புகள்!

சட்டசபை கூட்டத் தொடரில்கூட பல எம்.எல்.ஏ-க்கள் முழுமையாகக் கலந்துகொள்வதில்லை. அமைச்சர்கள், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள்தான் தொடர்ந்து எல்லா நாள்களும் வருவார்கள். சட்டசபைக்கு வரும் சட்டமன்ற உறுப்பினர்களின் வருகைப்பதிவை ஆராய்ந்தாலே இது தெரியும். ஆனால், சட்டமன்ற உறுப்பினர்களின் வருகைப்பதிவு விவரத்தை ரகசியமாக வைத்திருக்கிறார்கள். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்களின் வருகைப்பதிவு விவரத்தைக் கேட்டால், சபாநாயகரின் ஆணைக்கிணங்க அந்தத் தகவல்களைத் தர முடியாது என்கிறது சட்டசபைச் செயலகம்.