Published:Updated:

‘வாத்தியார்’ துரைமுருகன்... ‘சிவாஜி’ எ.வ.வேலு... ‘டஃப் ஃபைட்’ அ.தி.மு.க!

சட்டசபை
பிரீமியம் ஸ்டோரி
சட்டசபை

சட்டமன்ற உறுப்பினர்களிலேயே சீனியர், அவை முன்னவர் துரைமுருகன்தான். அதனாலேயே பிரம்பு எடுக்காத வாத்தியாராகவே வலம்வந்தார் துரைமுருகன்.

‘வாத்தியார்’ துரைமுருகன்... ‘சிவாஜி’ எ.வ.வேலு... ‘டஃப் ஃபைட்’ அ.தி.மு.க!

சட்டமன்ற உறுப்பினர்களிலேயே சீனியர், அவை முன்னவர் துரைமுருகன்தான். அதனாலேயே பிரம்பு எடுக்காத வாத்தியாராகவே வலம்வந்தார் துரைமுருகன்.

Published:Updated:
சட்டசபை
பிரீமியம் ஸ்டோரி
சட்டசபை
சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரின் பேச்சுகள் ‘ஆஹா’ என்று எதிரணியினரையும் ஆச்சர்யப்படவைக்கும். சிலரின் பேச்சுகளோ சொந்தக் கட்சியினரையை ‘ஐயய்யோ...’ என்று பதறவைத்துவிடும். அப்படித்தான் நடந்துவருகின்றன தமிழக சட்டமன்றத்தின் மானியக் கோரிக்கை விவாதங்கள். சில சுவாரஸ்யத் துளிகள் இங்கே...

“வயிறு ரொம்ப பசிச்சுதுண்ணே!”

ஒவ்வொரு துறையின் மானியக் கோரிக்கை விவாதங்கள் முடிந்த பிறகு அந்தத் துறையின் அமைச்சர் இறுதியாக பதிலுரை வழங்குவது வழக்கம். செப்டம்பர் 1-ம் தேதி சமூகநலத்துறையின் மானியக் கோரிக்கை விவாதங்கள் முடிந்தவுடன், துறை அமைச்சர் கீதா ஜீவனை பதிலுரை ஆற்ற அழைத்தார் சபாநாயகர். ஆனால், அமைச்சர் இருக்கையில் இல்லை. இரண்டு நிமிடங்கள் வரை சபை அமைச்சருக்காகக் காத்திருந்தது. அதன் பிறகும் அவர் வராததால், இறுதியாகப் பேசவிருந்த அமைச்சர் முத்துசாமியைப் பேசச் சொல்லிவிட்டார் சபாநாயகர். சிறிது நேரத்தில் அவைக்குள் வந்த கீதா ஜீவனிடம் சக அமைச்சர்கள் “எங்கே போனீங்க?” என்று கேட்க, “அண்ணே, வயிறு ரொம்ப பசிச்சுதுண்ணே... அதான் சாப்பிடப் போயிட்டேன்” என்று பரிதாபமாகச் சொல்லியிருக்கிறார்!

வாத்தியார் துரைமுருகன்!

சட்டமன்ற உறுப்பினர்களிலேயே சீனியர், அவை முன்னவர் துரைமுருகன்தான். அதனாலேயே பிரம்பு எடுக்காத வாத்தியாராகவே வலம்வந்தார் துரைமுருகன். சமீபத்தில் சபை நடந்துகொண்டிருந்தபோது பா.ம.க உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கைக்குக் குறுக்காகச் சென்றார்கள். அவர்களை அழைத்த துரைமுருகன், “சபாநாயகர் இருக்கைக்கு முன்பாக நடந்து செல்லக் கூடாது” என்றார். பதிலுக்கு அவர்கள், “ஏன் அமைச்சர்கள் மட்டும்தான் இந்த வழியில் போகணுமா?” என்று கேட்க... டென்ஷனான துரைமுருகன், “முதல்ல சட்டமன்ற ரூல்ஸ் புக்கைப் படிங்க.” என்று கடுகடுத்துவிட்டார். உறுப்பினர்கள் நிற்பது முதல் நடப்பது வரை எந்தத் தவறு நடந்தாலும் உடனே மைக்கைப் பிடித்து வகுப்பு எடுத்துவிடுகிறார் வாத்தியார்!

சாம்பார் சாதம், தயிர் சாதம்...

சட்டசபை நடக்கும் நாள்களில் முதல்வர் ஸ்டாலின் உணவு அருந்த வீட்டுக்குச் செல்வதில்லை. தனியார் ஹோட்டலிலிருந்தே மதிய உணவு வந்துவிடுகிறது. பெரும்பாலும் சாம்பார் சாதம், தயிர் சாதம் ஆகியவற்றையே விரும்பிச் சாப்பிடுபவர், ஓரிரு நாள்கள் புதினா சாதம், மல்லி சாதம் ஆகியவற்றைச் சாப்பிடுகிறார். இவை ஒவ்வொன்றுமே உணவு தரக்கட்டுப்பாடு அதிகாரிகள் சோதனைக்குப் பிறகே முதல்வரின் அறைக்குச் செல்கின்றன. பெரும்பாலும் மதியம் 1 மணிக்குள் சாப்பிட்டுவிட வேண்டும் என்பதே முதல்வரின் சாய்ஸாக இருக்கிறது.

“சொன்னாப் புரிஞ்சுக்குங்க!”

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “சட்டமன்றத்தில் முன்னாள் அமைச்சர்கள் யாரும் தங்கள் தொகுதிப் பிரச்னைகளைப் பேசாதீர்கள். கோரிக்கையாக எழுதி மட்டும் கொடுங்கள்” என்று ஏற்கெனவே பாடம் நடத்தியிருந்தார். ஆனால், அவையில் பேசும் முன்னாள் அமைச்சர்கள் பலரும் தங்கள் தொகுதிப் பிரச்னைகளைப் பேசிவிடுகிறார்கள். உடனே அதற்கு தி.மு.க தரப்பில், “பத்தாண்டுகளாக அமைச்சர்களாக இருந்தும், நீங்களே உங்கள் தொகுதிக்கு இதைச் செய்யவில்லையா?” என்று மடக்கிவிடுகிறார்கள். “இதுக்குத்தான் தொகுதிப் பிரச்னையைப் பேசாதீங்கனு சொன்னேன். சொன்னாப் புரிஞ்சுக்குங்க” என்று மாஜிக்களிடம் தலையில் அடித்துக்கொள்கிறார் எடப்பாடி!

‘வாத்தியார்’ துரைமுருகன்... ‘சிவாஜி’ எ.வ.வேலு... ‘டஃப் ஃபைட்’ அ.தி.மு.க!

“சிவாஜியே தோத்துடுவார்!”

சட்டமன்றக் கூட்டத்தொடரில் குணச்சித்திர நாயகனாக அசத்துகிறார் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு. முதல்வர் ஸ்டாலினையும், அவரின் மகன் உதயநிதியையும் ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளும்போதே அவரது குரல் தழுதழுத்தது... வேறு வழியில்லாமல் தி.மு.க உறுப்பினர்களும் அவரது பேச்சில் உணர்ச்சிவசப்பட்டதுபோல முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டிருந்தார்கள். பின்வரிசையில் அமர்ந்திருந்த அ.தி.மு.க சீனியர் உறுப்பினர்

கே.பி.முனுசாமி இதைப் பார்த்து, “யப்பா என்னமா நடிக்குறார்... சிவாஜியே தோத்துடுவார்போலிருக்கே!” என்று சக எம்.எல்.ஏ-க்களிடம் கமென்ட் அடித்துக்கொண்டிருந்தார்.

“நீங்கள் சபாநாயகர்... உறுப்பினர் இல்லை!”

சபாநாயகர் பதவி என்பது கட்சி சாராத பதவியாகக் கருதப்படுகிறது. ஆனால், சபாநாயகர் அப்பாவு சில நேரங்களில் தனது பேச்சில் சில கோரிக்கைகளையும் இணைத்துவிடுகிறார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு அறிவிப்பை முதல்வர் வெளியிட்டபோது குறுக்கிட்ட சபாநாயகர், “அப்படியே அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களுக்கும்...” என்று இழுத்தார். உடனே முதல்வர், “மாண்புமிகு சபாநாயகர் அவர்கள் இப்போது சபாநாயகர் என்பதை மறந்துவிட்டு. உறுப்பினர்கள்போல கோரிக்கையையும் முன்வைக்கிறார்” என்று சிரித்துக்கொண்டே சொல்ல, சுதாரித்துக்கொண்ட சபாநாயகர் அமைதியாகிவிட்டார்.

“டஃப் ஃபைட் கொடுக்கறாங்களே!”

அவைக்குள் முதல்வர் என்ட்ரி கொடுக்கும்போது தி.மு.க-வினர் எழுந்து நின்று வணக்கம் சொல்வார்கள். அதேபோல எதிர்க்கட்சித் தலைவர் உள்ளே வரும்போது அ.தி.மு.க உறுப்பினர்கள் எழுந்து நின்று வணக்கம் சொல்வார்கள். சமீப நாள்களாக அவைக்குள் முதல்வர் என்ட்ரி கொடுக்கும்போது அ.தி.மு.க உறுப்பினர்களும் எழுந்து நின்று முதல்வருக்கு வணக்கம் சொல்கிறார்கள். முதல்வர் ஸ்டாலினும் அவர்களுக்கு பதில் வணக்கம் வைக்கிறார். இதைப் பார்க்கும் ஆளுங்கட்சி உறுப்பினர்களோ, “போற போக்கைப் பார்த்தா நமக்கே டஃப் ஃபைட் குடுப்பாங்கபோலயே!” என்று நக்கல் அடிக்கிறார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism