அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

சட்டப்பேரவை பிட்ஸ்!

சட்டப்பேரவை
பிரீமியம் ஸ்டோரி
News
சட்டப்பேரவை

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லதாக இருக்கட்டும்” என்ற அவை முன்னவர் துரைமுருகனின் வேண்டுகோளால், அது திரும்பப் பெறப்பட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடர் அக்டோபர் 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தொடரில் நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்களின் தொகுப்பு இங்கே!

* சட்டப்பேரவையில் இந்தி திணிப்புக்கு எதிராக முதல்வர் கொண்டுவந்த தீர்மானம், பா.ஜ.க தவிர்த்த கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேறியது. பா.ஜ.க சார்பில் பேச எழுந்த நயினார் நாகேந்திரன், மைக் முன்பாக சில விநாடிகள் அமைதியாக இருந்தார். குறுக்கிட்டுப் பேசிய அப்பாவு, “தமிழிலேயே பேசுங்க” என்று சொன்னதும் அவையில் சிரிப்பலை எழுந்தது.

* நயினார் நாகேந்திரன் வெளிநடப்பு செய்வதாகச் சொன்ன நேரத்தில், “தொழில்துறை அமைச்சர் பேசுவதைக் கொஞ்சம் இருந்து கேட்டுட்டுப் போங்க” என்றார் சபாநாயகர். அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் இன்றே தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டுவர பாஜக தயாராக இருக்கிறதா... இங்கு தாய்மொழியைக் கொண்டுவருவதை விட்டுவிட்டு, தமிழ் மொழிக்குப் பாதகத்தை இழைத்துவிட்டு... ‘ஐ.நா-வில் திருக்குறளைச் சொல்கிறோம்; தமிழில் பேசுகிறோம்’ என்பது, `படிக்கிறது ராமாயணம்... இடிப்பது பெருமாள் கோயில்’ என்பதுபோல இருக்கிறது” என்றார்.

சட்டப்பேரவை பிட்ஸ்!

* ஜி.கே.மணி பேசும்போது, “ஒரு மனிதன் பத்து மொழிகளில் புலமை பெற்றவனாக இருந்தாலும்கூட, நடுநிசியில் அவனை அடித்தால் அல்லது கத்தியால் குத்தினால் திடீரென்று அவன் அலறுவதுகூட தாய்மொழியில்தான்” என்றார். குறுக்கிட்ட சபாநாயகர், “அந்தக் கத்திக் குத்துங்குறது வேண்டாமே” என்றார். உடனே, “ஊசியால் குத்துறான்” என்று ஜி.கே.மணி மாற்றிப் பேச அவையில் சிரிப்பலை.

* ஓ.பி.எஸ்-ஸுக்குப் பேச வாய்ப்பளித்தபோது, ‘எதிர்க்கட்சி துணைத் தலைவர்’ எனக் குறிப்பிட்டார் சபாநாயகர். அப்போது பேசிய ஓ.பி.எஸ்., “ஆதரவற்ற கால்நடைகளுக்குப் பாதுகாப்பு வழங்கும் முறையில் கோசாலை அமைக்கும் திட்டம் அரசிடம் இருக்கிறதா?” என்று கேள்வியெழுப்பினார். பா.ஜ.க நயினார் நாகேந்திரனும்கூட, “கடந்த வாரம், என்னுடைய மூன்று வயசு கன்றுக்குட்டிக்கு திடீரென காய்ச்சல் வந்துவிட்டது. மாடுகளை மருத்துவமனையில் வைத்து மருத்துவம் பார்க்கும் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

* காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி, “பள்ளிக்கூட்டம் பகுதியில் தடுப்பணை கட்டப்படுமா?” என்று கேள்வி எழுப்பினார். உடனே அமைச்சர் துரைமுருகன், “உங்களைவிட எனக்கு அந்த நெய்யாற்று சமாசாரமெல்லாம் தெரியும். தண்ணீர் வருதுன்னா ஏதாச்சும் பண்ணலாம். சும்மா இருக்கிற கால்வாயை ஏன் தூர்வாரணும்?” என்றார்.

* ரகளை காரணமாக இ.பி.எஸ் தரப்பினருக்கு அவை நடவடிக்கையில் பங்கேற்கத் தடைவிதித்திருந்தார் சபாநாயகர். “நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லதாக இருக்கட்டும்” என்ற அவை முன்னவர் துரைமுருகனின் வேண்டுகோளால், அது திரும்பப் பெறப்பட்டது. ஆனால், ஆறுமுகசாமி, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஆணைய அறிக்கையால் அடுத்தடுத்த நாள்களில் அ.தி.மு.க கடும் விமர்சனத்துக்குள்ளானது.