அலசல்
Published:Updated:

சட்டப்பேரவை காரசாரம்

சட்டப்பேரவை
பிரீமியம் ஸ்டோரி
News
சட்டப்பேரவை

‘மக்கள் பிரச்னையை நாங்கள் பேசும்போதெல்லாம், நேரடி ஒளிபரப்பு துண்டிக்கப்படுகிறது. இது ஜனநாயகத்தின் குரலை நெரிக்கும் செயல்’ என்று கறுப்பு மாஸ்க் அணிந்து வந்திருந்ததும் கவனிக்கச் செய்தது.

கடந்த மார்ச் மாதம் 21-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 21-ம் தேதி வரை நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரின் முக்கியமான, சுவாரஸ்யமான சம்பவங்கள் சில இங்கே...

போர்க்களமான அ.தி.மு.க... ஆரம்பமே அமர்க்களம்!

கூட்டத்தொடர் தொடங்கிய சில நாள்களிலேயே சட்டப்பேரவையைச் சூடாக்கியது அ.தி.மு.க-வின் உட்கட்சிப்பூசல்தான். இதுவரை வெளியே மல்லுக்கட்டிக்கொண்டிருந்த ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் தரப்பு சட்டப்பேரவைக்குள்ளும் வேட்டியை வரிந்துகட்டியது. குறிப்பாக, ஆன்லைன் தடைச்சட்ட மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து, அ.தி.மு.க தரப்பில் தளவாய் சுந்தரம் பேசிவிட்டு அமர்ந்த பிறகு, ஓ.பி.எஸ் பேச வாய்ப்பு கொடுத்தார் சபாநாயகர் அப்பாவு. உடனே, “ஒரு கட்சிக்கு ஒருத்தர்தானே பேச வேண்டும்...” என்று சீறியது பழனிசாமி & கோ. பதிலுக்கு `அவர்தான் துணைத் தலைவர்’ என்று ஓ.பி.எஸ்-ஸின் ஆதரவாளர்களும் வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டு பாய, பேரவை போர்க்களமானது. எதிர் வரிசையில் அமர்ந்திருந்த தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்குக் கையில் பாப்கார்ன் இல்லாத குறைதான்!

‘கறுப்பு’ கலகலப்பு!

ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதைக் கண்டித்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் கறுப்பு உடையில் சட்டமன்றத்துக்குள் நுழைந்த அதே நாளில், பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசனும் யதேச்சையாக அதே கறுப்பு நிற ஆடையில் வந்தது இரண்டு தரப்புக்குமே கடும் அதிர்ச்சி. `என்ன நீங்களும் கறுப்பு உடையா?’ என காங். விஜயதரணி கலாய்த்த புகைப்படம் சோஷியல் மீடியாவிலும் வைரலானது. அதேபோல எதிர்க்கட்சித் தரப்பினர், ‘மக்கள் பிரச்னையை நாங்கள் பேசும்போதெல்லாம், நேரடி ஒளிபரப்பு துண்டிக்கப்படுகிறது. இது ஜனநாயகத்தின் குரலை நெரிக்கும் செயல்’ என்று கறுப்பு மாஸ்க் அணிந்து வந்திருந்ததும் கவனிக்கச் செய்தது.

சட்டப்பேரவை காரசாரம்

பாசப் பந்தி வைத்த பா.ம.க!

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் காரசார விவாதங்களுக்கிடையே, மேட்டூர் தொகுதி பா.ம.க எம்.எல்.ஏ சதாசிவம், தனது தொகுதியிலுள்ள மேட்டூர் டேமிலிருந்து 1,000 கிலோ மீன்களை சென்னைக்கே கொண்டுவந்து சமைத்து, சுடச்சுட மீன்குழம்பு, மீன் வறுவல், மீன் ரசம் என அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், அவர்களின் உதவியாளர்கள் என 500-க்கும் மேற்பட்டோருக்குச் சிறப்பு விருந்து வைத்தார். அதேபோல, சேலம் மேற்குத் தொகுதியைச் சேர்ந்த பா.ம.க எம்.எல்.ஏ அருள், கட்சிப் பாகுபாடின்றி அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும், உலகப் புகழ்பெற்ற சேலத்து மாம்பழங்களை (5 டன்) அட்டைப்பெட்டியில் போட்டு அன்பளிப்பாகக் கொடுத்தார்.

சீண்டிய ஸ்டாலின்... சீறிய எடப்பாடி!

விருதாச்சலத்தில் ஒன்றாம் வகுப்பு மாணவிக்குப் பள்ளித் தாளாளரும், தி.மு.க பிரமுகருமான பக்கிரிசாமி பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாக, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. அப்போது, “இந்தச் செய்தியை நான் தொலைக்காட்சியிலோ, செய்தித்தாளிலோ பார்த்தேன் எனச் சொல்ல மாட்டேன். இது குறித்து நேரடியாக விசாரித்தேன்” என்று தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின்போது இ.பி.எஸ் கொடுத்த ஸ்டேட்மென்ட்டை வைத்துச் சீண்டினார் ஸ்டாலின். அதேபோல பொள்ளாச்சி பாலியல் விவகாரம், கொடநாடு கொலை, கொள்ளை வழக்குகளும் சட்டமன்றத்தில் பேசுபொருளாகின. இதனால் பொறுமையிழந்த எடப்பாடி பழனிசாமி, ‘கொடநாடு வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்தது அ.தி.மு.க அரசுதான்” என்று முதலில் சீறினார். ஆனால் அமைச்சர்கள் ரகுபதி, எ.வ.வேலு, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் அடுத்தடுத்து பதில் கொடுக்க, சட்டமன்றத்தில் விவாதம் அனல் பறந்தது. இதில் ‘யாருடைய ஆட்சியில் அதிக துப்பாக்கிச்சூடு நடந்தது?’ என்பது ‘ஹாட் டாபிக்’ ஆனதுதான் ஹைலைட்.

ஜி.எஸ்.டி-யை எதிர்த்த பா.ஜ.க!

வழக்கம்போல இந்தக் கூட்டத்தொடரிலும் பா.ஜ.க எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், அவைநாயகர் அப்பாவு இருவருக்கிடையிலான ‘தக் லைஃப்’ மொமன்ட்டுகளுக்குப் பஞ்சமிருக்கவில்லை. வேளாண்மை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது பேசிய நயினார், “சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் பாதி ஜி.எஸ்.டி-க்குப் போய்விடுகிறது” என்றார். உடனே குறுக்கே புகுந்த சபாநாயகர், ‘அதுக்கு நீங்கதானே பதில் சொல்லணும்?” என்றதும் அவையே சிரிப்பலையில் மூழ்கியது. “இவரே அடிக்கடி சேம் சைடு கோல் போட்டுடுறார்...” என்பது சக பா.ஜ.க எல்.எல்.ஏ-க்களின் முணுமுணுப்பாகக் கேட்டது.

கொளுத்திப்போட்ட துரைமுருகன்!

புதிய சட்டமன்றக் கட்டடம் குறித்த விவாதம் இந்தக் கூட்டத்தொடரில் எழுந்தது. அதற்கு பதிலளித்த அவை முன்னவர் துரைமுருகன், ‘முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ஆட்சிக்காலத்தில் ஒரு புதிய சட்டமன்றத்தைக் கட்டுவார். கிண்டி ரேஸ் கோர்ஸை எடுத்துக்கொள்ளுங்கள். 700 ஏக்கர் கொண்ட இடம். அவர்கள் பணம் கட்ட முடியாத நிலையில் இருக்கிறார்கள். சென்னையில் ராஜ் பவனை எடுத்துக் கொள்ளுங்கள். அதுவும் நம்முடைய இடம்தான். முதல்வர் நினைத்தால் எங்கு வேண்டுமானாலும் கட்டலாம்’ என்று ஆளுநர் மாளிகையில் புதிய சட்டமன்றம் கட்டலாம் என்ற பேச்சைக் கொளுத்திப்போட்டார்.

கடைசி வாரத்தில் வைத்துக்கொண்ட ஆப்பு!

இந்தக் கூட்டத்தொடரின் கடைசி வாரத்தில், தி.மு.க அரசு பல்வேறு துறைகளைச் சார்ந்த 15-க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களைத் தாக்கல் செய்தது. அவற்றில் தனக்குத் தானே வைத்துக்கொண்ட ஆப்பாக, ‘12 மணி நேர வேலை மசோதா, தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சிறப்புச் சட்டங்கள் மசோதா ஆகியவற்றைக் கொண்டுவந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வி.சி.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தி.மு.க கூட்டணிக் கட்சிகளும், பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் அவையிலிருந்து வெளியேறின!