Published:Updated:

சட்டசபை பிட்ஸ்...

தமிழ்நாடு சட்டசபை
பிரீமியம் ஸ்டோரி
தமிழ்நாடு சட்டசபை

சட்டசபையில் உறுப்பினர்கள் அமரும் இருக்கையில் அவரவர் பெயர் எழுதப்பட்டிருக்கும். ஆனால், உதயநிதி ஸ்டாலின் மட்டும், அவருக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் அமருவதே கிடையாது.

சட்டசபை பிட்ஸ்...

சட்டசபையில் உறுப்பினர்கள் அமரும் இருக்கையில் அவரவர் பெயர் எழுதப்பட்டிருக்கும். ஆனால், உதயநிதி ஸ்டாலின் மட்டும், அவருக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் அமருவதே கிடையாது.

Published:Updated:
தமிழ்நாடு சட்டசபை
பிரீமியம் ஸ்டோரி
தமிழ்நாடு சட்டசபை
தமிழ்நாடு அரசின் 2022-2023-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 18-ம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்களின் தொகுப்பு!

குமரன் இருக்கும் இடமெல்லாம்....

கேள்வி பதில் நேரத்தின்போது திருத்தணி எம்.எல்.ஏ சந்திரன், பழநி எம்.எல்.ஏ செந்தில்குமார் இருவருமே தங்களது தொகுதியில் எப்போது தொழிற்பேட்டை அமையும் என்று கேள்வி எழுப்பினார்கள். அமைச்சர் தங்கம் தென்னரசு எழுந்து, ``திருத்தணி, பழநி என்று வரிசையாக முருகன் கோயிலுள்ள இடங்களிலிருந்து கோரிக்கை வருகிறது. அடுத்ததாக திருச்செந்தூர் எம்.எல்.ஏ-வும் கேட்பாரா...” என்று நகைச்சுவையாக பதிலளித்து கலகலப்பூட்டினார். குறுக்கிட்டுப் பேசிய சபாநாயகர் அப்பாவு, ``நீங்க தொழில்துறை அமைச்சரா இல்லை அறநிலையத்துறை அமைச்சரா...’’ என்று கேட்க கலகலத்துச் சிரித்தது சட்டமன்றம்!

அமைச்சரைக் கோத்துவிட்ட அ.தி.மு.க எம்.எல்.ஏ...

திருப்பூரில் அரசுப் பொறியியல் கல்லூரி வேண்டும் என்று மடத்துக்குளம் எம்.எல்.ஏ மகேந்திரன் கோரிக்கை எழுப்பியபோது, “மாணவர் சேர்க்கை இல்லாததால் இருக்கிற பொறியியல் கல்லூரிகளே மூடப்பட்டுவருகின்றன. முதலில் அங்கெல்லாம் மாணவர் சேர்க்கை நடைபெறட்டும்” என்று வேதனையோடு சொன்னார் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. அடுத்துப் பேசிய அ.தி.மு.க எம்.எல்.ஏ கே.சி.கருப்பணன் கூடுதலாக உணர்ச்சிவசப்பட்டார். ``அமைச்சர் பொன்முடியும் நானும் 10-15 வருடங்களாக பொறியியல் கல்லூரிகளை நடத்திவருகிறோம். அந்தக் கஷ்டம் எங்களுக்குத் தெரியும். வருடா வருடம் தேர்வுக் கட்டணம் உயர்ந்துவருகிறது. மாணவர் சேர்க்கையைவிட ஆசிரியர் பணியிடங்களை அதிகரிக்கவேண்டிய கட்டாயம் உள்ளது. ஆசிரியர் சம்பளமும் அதிகரித்துவிட்டது. இதையெல்லாம் அமைச்சர் சரிசெய்து கொடுத்தால் பொறியியல் கல்லூரிகள் திறம்பட நடக்கும்” என்றார். “நாம காலேஜ் நடத்தறதையெல்லாம் சபையில சொல்றாரே...” என்று நினைத்தாரோ என்னவோ... அமைச்சர் பொன்முடி நெளிந்தபடியே இருந்தார்.

29c-யும் முதல்வரின் ஃப்ளாஷ்பேக்கும்...

முதல்வர் ஸ்டாலினின் உரையின்போது, ``இன்று காலை சட்டமன்றம் வந்துகொண்டிருந்த நேரத்தில் ராதாகிருஷ்ணன் சாலையில் காரிலிருந்து இறங்கி 29C பேருந்தில் ஏறி சிறிது நேரம் பயணித்தேன். 29C பேருந்தை என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. அப்போது நான் கோபாலபுரத்திலிருந்து ஸ்டெல்லா மேரீஸ் பேருந்து நிலையம் வந்து, 29C பேருந்து மூலமாக ஸ்டெர்லிங் ரோட்டில் இறங்கி, அங்கிருந்து பள்ளிக்கு நடந்தே செல்வேன்” என்று தனது பள்ளிப் பருவ நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். பேச்சினூடே மலரும் நினைவுகளுக்குள் மூழ்கிய முதல்வரை தி.மு.க உறுப்பினர்கள் ஆச்சர்யத்தோடு பார்த்தவண்ணம் இருந்தனர்.

ஒரு தொகுதிக்கானவரா உதயநிதி?

“உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ-வாக இருப்பதால் ஒரு தொகுதி மட்டும்தான் பயன்பெறுகிறது. இந்த ஒரு தொகுதி பயன்பெறுவதோடு நிற்காமல் தமிழகம் முழுவதும் பயன்பெற வேண்டும். அதற்கு முதல்வர் ஸ்டாலின் மனம் கனிய வேண்டும்” என்றொரு கோரிக்கையை வைத்தார் பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன். “புகழவே கூடாதுன்னு அவங்க தலைவர் சொல்றாரு... இவரு என்னடான்னா உதய்யை அமைச்சருக்கும் மேல, துணை முதல்வர் ஆக்கச் சொல்லிக் கேட்பாருபோலயே” என்று நமுட்டுச் சிரிப்பு சிரித்தனர் எதிர்க்கட்சியினர்.

சட்டசபை பிட்ஸ்...

எங்க ஏரியா உள்ள வராதே..!

காங்கிரஸ் கட்சிக்கென்று ஓர் அறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. அந்த அறையில் எப்போதுமே சட்டமன்ற கட்சித் தலைவரான செல்வப்பெருந்தகையின் ஆதரவாளர்கள்தான் அமர்ந்திருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்கள் யாராவது உள்ளே வந்தாலும் இடம் இல்லாததைப் பார்த்துவிட்டு வெளியே வந்துவிடுகிறார்கள். “சட்டமன்றத்திலும் மற்ற உறுப்பினர்களைப் பேசவிடுவது இல்லை; அறையிலும் யாரையும் உட்காரவிடுவதில்லை” என்று புலம்புகிறார்கள் கதர் வேட்டிகள்.

மதுரையின் பொழுதுபோக்கே அண்ணன்தான்...

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ``மதுரையின் மெரினாவாக விளங்கும் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தைச் சுற்றுலாத்தலமாக அறிவித்து அடிப்படை வசதிகளைச் செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். இதற்கு பதில் கூறிய சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், ``ஆட்சியரின் தடையில்லாச் சான்று பெற்று வருங்காலத்தில் பரிசீலிக்கப்படும்” என்று கூறினார். மீண்டும் எழுந்த செல்லூர் ராஜூ, ``மதுரையில் இருபது லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். அவர்களுக்குப் பொழுதுபோக்குக்கென்று ஓர் இடமும் கிடையாது” என்றார். உடனே கை உயர்த்திப் பேச எழுந்த அமைச்சர் தங்கம் தென்னரசு, ``மதுரைக்கே சிறந்த பொழுதுபோக்கு அண்ணன் செல்லூர் ராஜூ என்பது நாட்டுக்கே தெரிந்த விஷயம்” என்று சொன்னதுமே கட்சி வேறுபாடின்றி பேரவையே சிரிப்பலையில் ஆழ்ந்தது. தங்கம் தென்னரசு பேச எழுந்ததுமே தன்னைக் கலாய்க்கப்போகிறார் என்று கண்டுபிடித்து, செல்லூர் ராஜூவே சிரித்ததுதான் இதில் ஹைலைட்.

ஒரு இடத்துல உட்கார மாட்டாங்க!

சட்டசபையில் உறுப்பினர்கள் அமரும் இருக்கையில் அவரவர் பெயர் எழுதப்பட்டிருக்கும். ஆனால், உதயநிதி ஸ்டாலின் மட்டும், அவருக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் அமருவதே கிடையாது. எங்கு உட்கார வேண்டும் என்று நினைக்கிறாரோ, அங்கு சென்று அமர்ந்துகொள்கிறார். அவருடன் அமைச்சர் அன்பில் மகேஸும் சேர்ந்துகொள்கிறார். இதனால், அந்த இடத்துக்கான உறுப்பினர்கள் வேறு இடம் தேடிச் செல்ல வேண்டியிருக்கிறது. அதேசமயம், உதயநிதி, அன்பில் மகேஸ் பெயர் இருக்கும் இருக்கையில் அமர்வதிலும் அவர்களுக்குச் சங்கடங்கள் இருப்பதால் அந்த இருக்கைகளும் காலியாகவே இருக்கின்றன. வேறு வழியின்றி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வரிசையில் போய் உட்காருகிறார்கள் அந்த தி.மு.க உறுப்பினர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism