Published:Updated:

புத்தம்புது சபை!

சட்டமன்றக் கூட்டத் தொடர்
பிரீமியம் ஸ்டோரி
News
சட்டமன்றக் கூட்டத் தொடர்

ஆளும்கட்சியின் ஆதிக்கமே இந்தச் சட்டமன்றக் கூட்டத் தொடரிலும் நீடித்தது.

கொரோனா அச்சம் காரணமாக தமிழக அரசின் 15-வது சட்டப்பேரவையின் ஒன்பதாவது கூட்டத்தொடர் கோட்டையில் நடக்கவில்லை. கலைவாணர் அரங்கின் மூன்றாவது தளத்தில் செப்டம்பர் 14-ம் தேதி தொடங்கி 16-ம் தேதி வரை மூன்று நாள்கள் நடந்து முடிந்திருக்கிறது. அதையொட்டி சில தகவல்கள்...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

* தி.மு.க சட்டமன்ற உறுப்பினராக இத்தனை காலம் இருந்த கு.க.செல்வம், இந்தக் கூட்டத்தொடரில் தனித்துவிடப்பட்டார். பேன்ட், சட்டையுடன் வந்தவரை “வாய்யா...” என்று வழக்கம்போல் தி.மு.க உறுப்பினர்கள் அழைக்க, “வந்துட்டேன்... வந்துட்டேன்...” என்று அவரும் நக்கலாக பதிலளித்தார். கேன்டீனில் டீ சாப்பிட்டுக்கொண்டிருந்த செல்வத்திடம் நலம் விசாரிப்பதில் மற்றவர்களைவிட அதிக ஆர்வம்காட்டியது அ.தி.மு.க உறுப்பினர்கள்தான்.

* கோட்டை சட்டசபை கேன்டீனில் நல்ல உணவு கிடைக்கும். ஆனால், இங்கு கிரீன் டீ மட்டுமே கிடைத்தது. இதனால், மதிய உணவு நேரத்தில் உறுப்பினர்கள் பலரும் பசியால் திண்டாடிவிட்டார்கள். “எதிர்க்கட்சியினருக்கு என்னப்பா வெளிநடப்பு செஞ்சுட்டாங்க... அவங்களுக்குச் சாப்பாடு பிரச்னை இல்லை” என்று அ.தி.மு.க உறுப்பினர்கள் பலரும் புலம்பினார்கள். இன்னொரு பக்கம், அமைச்சர்களுக்கு அவர்களின் உதவியாளர்கள் கொண்டுவந்து கொடுத்த தடபுடல் விருந்தை எம்.எல்.ஏ-க்கள் பலரும் பசியோடு வேடிக்கை பார்த்ததுதான் வேதனை!

* ஆளும்கட்சியின் ஆதிக்கமே இந்தச் சட்டமன்றக் கூட்டத் தொடரிலும் நீடித்தது. நீட் விவகாரம், கிசான் சம்மான் ஊழல், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு என்று தி.மு.க-வினர் கிளப்பிய விவகாரங்கள் ஒவ்வொன்றுக்கும் முன் தயாரிப்புடன் வந்து பதிலளித்தார்கள் அமைச்சர்கள். `தி.மு.க தரப்பில் வேகமெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட துரைமுருகன், எ.வ.வேலு ஆகியோர் பெரிதாக பதிலடி கொடுக்காமல் ‘புஸ்’ஸென்று அமைதியாகிப்போனது ஏன் என்று தெரியவில்லை...’ என்று புலம்பினார்கள் தி.மு.க உறுப்பினர்கள்!

* நுழைவாயிலிலேயே உறுப்பினர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, கொரோனா கிட் ஒன்றும் வழங்கப்பட்டது. மாஸ்க், சானிடைஸர், கையுறை உள்ளிட்ட பொருள்கள் அதில் இருந்தன. கூடவே, பச்சை நிற அடையாள அட்டை ஒன்றும் வழங்கப்பட்டது. முதல்வர் உட்பட அனைவருமே அந்த அட்டையை அணிந்தபடியே சட்டமன்ற நிகழ்வுகளில் பங்கெடுத்தனர்.

* தமிழக சட்டப்பேரவை சபாநாயகரின் இருக்கை, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அன்றைய சென்னை மாகாணத்துக்கு முதல் பொதுத்தேர்தல் நடந்தபோது சென்னை மாகாண ஆளுநராக இருந்தவர் வெல்லிங்டன் பிரபு. முதல் சட்டசபைக்கு வெல்லிங்டன் பிரபு சபாநாயகர் இருக்கையை பரிசாக வழங்கினார். அந்த இருக்கையைத்தான் இப்போதுவரை பயன்படுத்துகிறார்கள். இந்தக் கூட்டத்தொடரிலும் அதே இருக்கையைதான் கோட்டையிலிருந்து கொண்டுவந்து பயன்படுத்தினார்கள்.

புத்தம்புது சபை!

* ஒவ்வொரு சட்டமன்றக் கூட்டத்தொடரிலும் கருணாஸ் எந்தப் பக்கம் இருக்கிறார் என்று ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என இருதரப்பும் கமென்ட் அடித்துக்கொண்டிருக்கும். இந்தக் கூட்டத்தொடரின் கடைசி நாளில் கருணாஸ் பேசும்போது, ``10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்து, எந்தச் சாமியும் செய்யாததைச் செய்துவிட்டார் எடப்பாடி” என்றபடி ஏகத்துக்கும் புகழ... முதல்வரே சற்று நெளிந்துவிட்டார். இவருக்கு நேர்மாறாக, இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தமிமுன் அன்சாரி, நீட் எதிர்ப்பு பதாகையுடன் சட்டமன்றத்துக்கு வந்து அ.தி.மு.க-வினரை அப்செட் ஆக்கினார்.