அலசல்
Published:Updated:

கோட்டை டைரீஸ்

கோட்டை டைரீஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
கோட்டை டைரீஸ்

- ஒற்றக்கூத்தன்

கோட்டை டைரீஸ்
வருகின்ற ஜனவரி 5-ம் தேதி சட்டமன்றக் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்குகிறது. ஏற்கெனவே ஜார்ஜ் கோட்டையில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த இந்தக் கூட்டம், கொரோனா ஒமைக்ரான் பரவல் காரணமாக கலைவாணர் அரங்கத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான், கோட்டைக்குள் ஒரு ரவுண்ட் வந்தோம். கிடைத்த செய்திச் சிதறல்கள் இங்கே...
கோட்டை டைரீஸ்

தலையைச் சுற்றி மூக்கைத் தொட தனி அதிகாரிகள்!

அரசின்மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை, துறைவாரியாக ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க அதிகாரிகளை நியமித்திருக்கிறது முதல்வர் அலுவலகம். பத்திரிகைகள், சமூக வலைதளங்களில் வெளிவரும் குற்றச்சாட்டுகளை ஆய்வுசெய்து, அறிக்கை அளிப்பதுதான் இவர்களது பிரதான பணி. சமீபத்தில், இந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடிய முதல்வர் அலுவலக மூத்த அதிகாரி ஒருவர், ‘மத்த மீடியாவெல்லாம் வழக்கொழிஞ்சு போயிடுச்சு. சோஷியல் மீடியாவுல வர்ற குற்றச்சாட்டுகளுக்கு மட்டும் முன்னுரிமை கொடுங்க’ என்றிருக்கிறார். ‘இதற்குத்தான் துறைவாரியாகப் பி.ஆர்.ஓ-க்கள் இருக்கிறார்களே... எதற்குப் புதிதாக அதிகாரிகள்... புதிய வேலைச் சுமை?’ என்று புலம்பித் தீர்க்கும் கோட்டை வட்டாரம், ‘பருத்தி மூட்டை ஆல்ரெடி குடோன்லதான இருக்கு’ என்கிறது!

கோட்டை டைரீஸ்

கடுகடுக்கும் மணியானவர்... சாபம்விடும் பணியாளர்கள்!

முதல்வர் அலுவலகத்திலுள்ள அதிகாரிகளில், மணியானவர் சாந்த சொரூபி எனப் பெயரெடுத்தவர். ஆனால், சமீபகாலமாக முதல்வர் அலுவலகத்துக்கு வரும் தலைமைச் செயலகப் பணியாளர்கள்மீது எரிந்துவிழுகிறாராம். ‘அங்கே தள்ளிப்போய் நில்லுங்க. சி.எம் செகரட்டரியிடம் சொல்லி சஸ்பெண்ட் செய்யச் சொல்லவா?’ என்று ஏகத்துக்கும் கடுப்படிப்பதால், எரிச்சலில் இருக்கிறார்கள் பணியாளர்கள். ‘பரமசிவன் கழுத்திலிருக்கும் பாம்பு... ரொம்பத்தான் ஆடுது. ஒருநாள் கீழ இறங்கும்..!’ என்று சாபம்விட்டபடிச் செல்கிறார்களாம்.

கோட்டை டைரீஸ்

“தப்பிக்க ஏதாவது வழி சொல்லுங்க...” - கலக்கத்தில் முன்னாள் பி.ஏ-க்கள்!

முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைப் பிடிக்க போலீஸ் தீவிரமாகியிருக்கும் நிலையில், முன்னாள் அமைச்சர்களிடம் அரசுத் தரப்பு பி.ஏ-க்களாக வலம்வந்தவர்கள் பலரும் கலக்கத்திலிருக்கிறார்கள். ‘முன்னாள் அமைச்சர்களின் கறுப்புச் சங்கதிகளெல்லாம் உங்களுக்குத்தான் தெரியும். அவர்களின் சொத்துகள், பினாமிகள் பற்றிய தகவல்களைச் சொன்னால், உங்கள்மீது நடவடிக்கை இருக்காது’ என்று தூதுவிடுகிறதாம் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பு. ராஜேந்திர பாலாஜியிடம் சீனியர் பி.ஏ-வாக இருந்த ஒருவர், லஞ்ச ஒழிப்புத் துறையின் தூதை ஏற்காமல் இருந்திருக்கிறார். இப்போது, தான் டார்கெட் செய்யப்படுவதை உணர்ந்து முன்ஜாமீனுக்கு ரெடியாகி வருகிறாராம். தற்போது கோட்டையில் பணியிலிருக்கும் அவர், கண்மறைவாக இயல் இசை நாடக மன்றத்துக்கு டெபுடேஷனில் போகத் தீர்மானித்திருக் கிறாராம். அதேபோல, தங்கமணியிடம் பத்து ஆண்டுகள் ஸ்பெஷல் பி.ஏ-வாக இருந்தவர், விருப்ப ஓய்வில் செல்லவும் முடிவெடுத்துவிட்டாராம். முன்னாள் அமைச்சர் காமராஜிடம் பத்து வருடங்களாக ஸ்பெஷல் பி.ஏ-வாக இருந்தவரும் கண்ணில் சிக்குபவர்களிடமெல்லாம், ‘தப்பிக்குறதுக்கு ஏதாவது வழி சொல்லுங்க’ என்று புலம்பிக்கொண்டிருக்கிறாராம்!

கோட்டை டைரீஸ்

தனியார் ஹோட்டலில் ஜேஜே வியாபாரம்... குளறுபடியில் ஸ்டாஃப் கேன்டீன்!

தலைமைச் செயலகத்துக்குள் நடக்கும், ‘ஸ்டாஃப் கேன்டீனை’ கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமியே நேரில் வந்து ஆய்வுசெய்தும், அங்கு நடக்கும் குளறுபடிகளை மாற்ற முடியவில்லை. வழக்கம்போல ஒன்பதே முக்கால் மணிக்குத்தான் வடை, பூரி போடுகிறார்கள். ஆனால், செயலகத்துக்குள் உள்ள மூன்று தனியார் ஹோட்டல்களில் காலை எட்டு மணிக்கே ஜேஜே-வென கூட்டம் களைகட்டுகிறது. கடந்த ஆட்சியில் வாடகை உயர்வைக் காரணம் காட்டி, இரண்டு அசைவ உணவகங்கள் கோட்டையைவிட்டு காலி செய்துவிட்டன. நீதிமன்றத்துக்கு அடிக்கடி படியேறி வந்த இன்னொரு ஹோட்டலும் பூட்டப்பட்டுவிட்டது. விஷயம் கேள்விப்பட்ட சுற்றுலா அமைச்சர் மதிவேந்தன், நஷ்டத்தில் தள்ளாடும் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஹோட்டல் கிளையைக் கோட்டைக்குள் கொண்டுவர முயன்றார். தலைமைச் செயலாளர் தலையிட்டும் பொதுத்துறையிலுள்ள அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாததால், சுற்றுலா வளர்ச்சிக் கழக ஹோட்டலைக் கோட்டைக்குள் தொடங்க முடியாமல் திண்டாடு கிறார்கள்!

கோட்டை டைரீஸ்

எங்கும் கம்ப்யூட்டர்மயம்... திண்டாட்டத்தில் சீனியர்கள்!

விரைவில், தலைமைச் செயலகம் முழுவதையும் கம்யூட்டர்மயமாக்கத் தீவிரமாகப் பயிற்சி தரப்படுவதால், கலக்கத்திலிருக்கிறது மூத்த ஊழியர்கள் தரப்பு. `பேப்பர்லெஸ் ஆபீஸ் சிஸ்டம் அமைந்தால், பலரின் பணிகளும் காலியாகிவிடும்’ என்று வதந்தி உலா வருவதே கலக்கத்துக்குக் காரணம். கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்டால், தலைமைச் செயலக ஊழியர்கள் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்பது அரசின் திட்டமாக இருக்கிறதாம். ‘டைப்பிஸ்ட் இல்லை, எனக்கு டைப்பிங் தெரியாது’ எனச் சாக்கு சொல்லி வேலைகளைத் தள்ளிப்போடும் சில அதிகாரிகளுக்கு இதனால் திண்டாட்டம்தான்!