Published:Updated:

1,000 ரூபாய் அறிவிப்பும்... மத்திய அரசுக்கு 'செக்'கும்! - சட்டமன்றக் கூட்டத்தொடரில் தடாலடி!

சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு
சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு

மத்திய அரசின் சில சட்டங்களுக்கு எதிராக, மாநில அரசு கடுமையான சில முடிவுகளை எடுக்கவுள்ளது. அதையெல்லாம் பிரதமரிடம் அளித்த கோரிக்கைகளில் முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட மாதம், உரிமைத்தொகை 1,000 ரூபாய் முதல் கிழக்கு கடற்கரை சாலைக்கு புதிய பெயர் வரை எனப் பல அறிவிப்புகளோடு கவர்னர் உரையைத் தயார் செய்துவருகிறது ஆளும்கட்சியான தி.மு.க.

ஆளுநர் - சபாநாயகர் சந்திப்பு
ஆளுநர் - சபாநாயகர் சந்திப்பு

தி.மு.க அரசு பதிவியேற்ற பிறகு கவர்னர் உரையுடன் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் வரும் 21-ம் தேதி தொடங்கவிருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் உரையாற்ற ஆளுநரை இன்று நேரடியாகச் சென்று அழைப்புவிடுத்தார் சபாநாயகர் அப்பாவு. கூட்டத்தொடர் நடைபெறும் கலைவாணர் அரங்கை இரண்டு தினங்களுக்கு முன்பாகப் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். மற்றொருபுறம், அமைச்சர்கள் தங்கள் துறைவாரியாக சட்டமன்றக் கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டியவை குறித்த பட்டியலை தயார் ய்துவருகிறார்கள்.

இந்தநிலையில் கவர்னர் உரையில் இடம்பெறப்போகும் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன என்பது குறித்து தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தோம். “கவர்னர் உரை மக்களைக் கவரும் வகையிலும், பயனுள்ள அறிவுப்புகளாகவும் இருக்க வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். அதற்காக அனைத்துத் துறைகளின் செயலாளர்களிடமும் துறைவாரியாக மேற்கொள்ள வேண்டிய பணிகளையும் முதல்வர் அலுவலகம் பெற்றுள்ளது” என்கிறார்கள்.

முதலில் தேர்தல் அறிக்கையில் தி.மு.க அறிவித்த முக்கியத் திட்டங்கள் கவர்னர் உரையில் இடம்பெறும் என்பது தெரிகிறது. குறிப்பாக, குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 1,000 ரூபாய் உரிமைத்தொகை என்கிற அறிவிப்பு கண்டிப்பாக இடம்பெறவிருக்கிறதாம். சுகாதாரத்துறையில் சில முக்கிய அறிவிப்புகளும் கவர்னர் உரையில் இடம்பெற்றுள்ளன.

கலைவாணர் அரங்கம்- தற்காலிக சட்டமன்றம்
கலைவாணர் அரங்கம்- தற்காலிக சட்டமன்றம்

மத்திய அரசு எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளை இதுவரை தொடங்காமல் இருக்கிறது. ஆனால், தமிழக அரசு அறிவித்த கிங்ஸ் மருத்துமனையை உயர்தர மருத்துமனையாக மாற்றும் அறிவிப்பும் கவர்னர் உரையில் இடம்பெற்றுள்ளது. சென்னையிலிருந்து செல்லும் கிழக்கு கடற்கரை சாலைக்கு கருணாநிதியின் பெயரை வைக்க வேண்டும் என்கிற கோரிக்கை நீண்டகாலமாக தி.மு.க-வினர் மத்தியில் உள்ளது. முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே கருணாநிதிக்குச் சிறப்பு செய்யும் வகையில் இந்த அறிவிப்பையும் வெளியிடவிருக்கிறார்கள். அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்தால் மேற்கொள்ளும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர். அந்தத் திட்டத்தை செயல்படுத்த நிபுணர் ழுவை நியமிக்க, தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அது குறித்த அறிவிப்பும் இந்தக் கூட்டத்தொடரில் இடம்பெறவிருப்பதாகத் தெரிகிறது. அதேபோல், சென்னையில் கடலுக்கு அடியில் உலகத்தரம் வாய்ந்த கடல்சார் கண்காட்சியகம் அமைக்கப்படவிருக்கிறது.

கவர்னர் உரையும் அதன் மீதான விவாதங்களும் முடிந்த பிறகு மீண்டும் சட்டமன்றம் அடுத்த மாதம் ஒன்றாம் தேதி கூடவிருக்கிறது. பத்து நாள்களுக்கு மேல் நடக்கும் அந்தக் கூட்டத்தொடரில் இடைக்கால பட்ஜெட்டும், மானியக் கோரிக்கைளும் நிறைவேற்றப்படும் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது. குறிப்பாக, அனைத்து அமைச்சகத்திலும் சட்டமன்றத்துக்கு எனத் தனியாகப் புத்தகம் தயாரிக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன. நீட் தேர்வு விவகாரம் வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் முக்கியமாகப் பேசப்படும் என்று தெரிகிறது. அதேபோல், பிரதமரிடம் முதல்வர் அளித்த கோரிக்கைப் பட்டியலில் குடியுரிமைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். தமிழகச் சட்டமன்றத்தில் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான தீர்மானமும் நிறைவேற்றப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

“மத்திய அரசின் சில சட்டங்களுக்கு எதிராக மாநில அரசு கடுமையான சில முடிவுகளை எடுக்கவிருக்கிறது. அதையெல்லாம் பிரதமரிடம் அளித்த கோரிக்கைகளில் முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய அரசுக்கு தி.மு.க அரசு நெருக்கடியைக் கண்டிப்பாக ஏற்படுத்தும்” என்கிறார்கள் தி.மு.க தரப்பினர். ஆரம்பமே அமர்க்களமாக இருக்கும் என்பது மட்டும் புரிகிறது!

அடுத்த கட்டுரைக்கு