Published:Updated:

“மக்களுக்கு விருப்பம் இல்லாத எதையும் எந்த அரசாலும் திணிக்க முடியாது!”

சபாநாயகர் அப்பாவு
பிரீமியம் ஸ்டோரி
சபாநாயகர் அப்பாவு

- சபாநாயகர் அப்பாவு அதிரடி

“மக்களுக்கு விருப்பம் இல்லாத எதையும் எந்த அரசாலும் திணிக்க முடியாது!”

- சபாநாயகர் அப்பாவு அதிரடி

Published:Updated:
சபாநாயகர் அப்பாவு
பிரீமியம் ஸ்டோரி
சபாநாயகர் அப்பாவு

இமாச்சலப் பிரதேசம், சிம்லாவில் நடந்த சபாநாயகர்களின் 82-வது மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியிருக்கிறார் தமிழக சபாநாயகர் அப்பாவு. டெல்லியிலிருந்து சிம்லா வரை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுடன் ஹெலிகாப்டரில் பயணித்தது தொடங்கி, மாநாட்டில் பேசிய விஷயங்கள் வரை அப்பாவுவின் வெளிப்பாடு, தேசிய அளவில் கவனம் பெற்றிருக்கிறது. இந்த நிலையில், சென்னையிலுள்ள குறிஞ்சி இல்லத்தில் அவரைச் சந்தித்து உரையாடினோம்...

‘‘சிம்லா பயணம், சபாநாயகர்கள் மாநாட்டு அனுபவங்கள் எப்படியிருந்தன?’’

‘‘டெல்லியிலிருந்து சண்டிகர் சென்று, அங்கிருந்து காரில் சிம்லா செல்வதாகத்தான் திட்டம். ஆனால், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா என்னையும், வேறு சிலரையும் சண்டிகரிலிருந்து அவரின் ஹெலிகாப்டரிலேயே அழைத்துச் சென்றது நல்ல அனுபவமாக இருந்தது. மாநாட்டில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் சபாநாயகர்களும் கலந்துகொண்டார்கள். முதல் நாள் நடந்த நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தில், உரைகள் அனைத்தும் முழுமையாக இந்தியில் மட்டுமே இருந்தன. என்னையும் கேரள சபாநாயகர் எம்.பி.ராஜேஷையும் தவிர வேறு யாரும் ஆங்கிலத்தில்கூட பேசவில்லை. ‘ஆங்கிலத்தில் விளக்கமும் தரவில்லை. அப்படித் தந்திருந்தால், அதைப் படித்து எங்களது கருத்துகளைப் பகிர்ந்திருப்போம்’ எனச் சுட்டிக்காட்டினோம். எனவே, அடுத்த நாள் சபாநாயகர்கள் மாநாடு தொடங்குவதற்கு முன் அனைவருக்கும், முந்தைய நாள் பேச்சுகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வழங்கப்பட்டன.’’

‘‘சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் தீர்மானங்களை ஆளுநர்கள் காலதாமதம் செய்வது உட்பட, நீங்கள் பேசியவை ஆளுநரையும் மத்திய அரசையும் குற்றம்சாட்டுவதுபோலவே இருந்தனவே?”

‘‘அவற்றைக் குற்றச்சாட்டுகளாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மீறி யாரும் பேசிவிட முடியாது. அதேநேரம், இந்திய இறையாண்மைக்கு உட்பட்டு, நமது உரிமைகளைப் பேச அனைவருக்கும் உரிமை உண்டு. மக்களுக்காக, மக்கள் பிரதிநிதிகளின் பெரும்பான்மை பலத்தோடு சட்டமன்றத்தில் கொண்டுவரப்படும் தீர்மானம், ஆளுநரின் ஒப்புதலுக்காக மட்டுமே அனுப்பிவைக்கப்படுகிறது. ஆளுநரின் கருத்துகளுக்காக அவை அனுப்பப்படுவதில்லை. அதற்கு ஒப்புதல் அளிப்பது மட்டும்தான் ஆளுநரின் பணி. ஆனால், ஆளுநர்களோ ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துகிறார்கள். இதனால், அதை நிறைவேற்றிய நோக்கம் நீர்த்துப்போக அதிக வாய்ப்பு உருவாகிறது. அதைச் சுட்டிக்காட்டிப் பேசினேன்.’’

‘‘காலம் தாழ்த்துவதாக நீங்கள் குறிப்பிட்டுச் சொல்லும் முக்கியத் தீர்மானங்கள் எவை எவை?’’

‘‘கடந்த பத்து, இருபது ஆண்டுகளில் இப்படிக் காலம் தாழ்த்தப்பட்ட தீர்மானங்கள் தமிழ்நாட்டில்தான் அதிகம் இருக்கின்றன. நீட் தேர்வு விலக்கு, ஏழு பேர் விடுதலை, சிஏஏ-வுக்கு எதிரான தீர்மானம், போலிப் பத்திரப் பதிவுகளைச் சார்பதிவாளர்களே ரத்துசெய்யும் வகையில் மத்திய பதிவுச் சட்டத்தில் தமிழ்நாடு அளவில் கொண்டுவந்த திருத்தம் போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம். அந்தப் பட்டியல் மிகப்பெரியது. இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களிலும் இதே நிலைமைதான். அதைத்தான் நாம் பேசியிருக்கிறோம்.’’

‘‘காலதாமதம் செய்யப்படும் தீர்மானங்களுக்கான தீர்வுதான் என்ன... அவற்றின்மீது சட்டமன்றமே முடிவெடுக்க முடியாதா?’’

“எதையுமே முடியும் என்றோ, முடியாது என்றோ சொல்லிவிட முடியாது. ஜனநாயக நாட்டில் எதுவும், எப்போதும் நடக்கும்.’’

“மக்களுக்கு விருப்பம் இல்லாத எதையும் எந்த அரசாலும் திணிக்க முடியாது!”

‘‘ ‘ஒரே நாடு, ஒரே சட்டப்பேரவை’ கொண்டுவரப்பட வேண்டும் எனப் பிரதமர் மோடி பேசியிருக்கிறாரே?’’

‘‘அது அவரது விருப்பம். தொடக்கத்திலிருந்தே ‘ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே அட்டை’ என இதைத்தானே பேசிவருகிறார்கள். இதற்குச் சாத்தியமும் இல்லை; தேவையும் இல்லை. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் என்று தனித்தனி கலாசாரம் இருக்கிறது. அதை ஒட்டியே சட்டப்பேரவைகள் செயல்படுகின்றன. ‘ஒரே சட்டப்பேரவை வேண்டும்’ என்பது நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தில் தீர்மானமாகவே வந்தது. ஆனால், அதை அன்றைக்கே, அப்போதே எல்லோரும் நிராகரித்துவிட்டார்கள்.’’

‘‘தமிழ்நாட்டில் சட்ட மேலவை அமைவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?”

‘‘முதல்வரும் அமைச்சரவையும் கூடி முடிவெடுக்கவேண்டிய விவகாரம். அதில் நாம் தலையிட முடியாது. சட்ட மேலவை கொண்டுவரப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினால், பெரும்பான்மையின் ஆதரவோடு அதை நிறைவேற்றித் தருவதுதான் நமது வேலை.’’

‘‘வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெறுவதாக அறிவித்திருக்கிறது. இது யாருடைய வெற்றி?”

‘‘பெரும்பான்மை பலத்தோடு வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்தது. ஆனால், அவற்றை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு எதிராகத் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் தீர்மானம் நிறைவேற்றின. விவசாயிகள் மிகப்பெரிய அளவில் மிக நீண்ட போராட்டங்களை முன்னெடுத்தார்கள். இன்றைக்குச் சட்டம் கொண்டுவந்த பிரதமரே அந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துவிட்டார். இது விவசாயிகளுக்கு, வேளாண் சட்டங்களுக்கு எதிரான மாநில அரசுகளின் வெற்றி. மக்களுக்கு விருப்பம் இல்லாத எதையும் எந்த அரசாலும் அவர்கள்மீது திணிக்க முடியாது”

“மாநாட்டில் நீங்கள் பேசியது பல்வேறு தரப்பிலும் கவனிக்கப்பட்டிருக்கும் நிலையில், முதல்வர் இது குறித்து உங்களிடம் பேசினாரா?”

‘‘எதற்கு, எப்போது முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை அறிந்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் முதல்வர், இதைக் கவனிக்கவேண்டிய தேவையில்லை. கவனத்துக்குப் போகும்போது அவர் பாராட்டாமல் இருக்கவும் மாட்டார்.”

“தமிழ்நாடு சட்டப்பேரவை அடுத்து எப்போது கூடும்?”

‘‘இப்போதைக்கு அதற்கான வாய்ப்பும் தேவையும் இல்லை. எனவே, அடுத்த ஆண்டுதான் இனி சட்டப்பேரவை கூடும்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism