கட்டுரைகள்
Published:Updated:

அட்வைஸ் செய்த சீனியர்கள்... சொன்னதைக் கேட்ட அண்ணாமலை!

பா.ஜ.க.வினர்
பிரீமியம் ஸ்டோரி
News
பா.ஜ.க.வினர்

மோடி கபடிப் போட்டி நடத்த 28 கோடி ரூபாய் வசூலாகியிருப்பதாகச் சொல்கிறார்கள். அதில் பத்து கோடிதான் செலவு செய்யப்பட்டதாகக் கூறுகிறார்கள். மீதிப் பணம் என்ன ஆனது என்பது தெரியவில்லை.

ஆடியோ லீக், உட்கட்சிப்பூசல் என்று கடந்த சில தினங்களாகவே தமிழக பா.ஜ.க., அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் இந்த விவகாரம் குறித்து, கட்சியின் சீனியர்கள் சிலரின் கருத்துகள் டெல்லிவரை அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பா.ஜ.க மாநில மையக்குழுக் கூட்டம், அக்கட்சியின் தலைமையகமான கமலாலயத்தில் டிசம்பர் 14-ம் தேதி நடைபெற்றது. முதன்முறையாக, இந்தக் கூட்டத்தில் அண்ணாமலைக்குக் கட்சி சீனியர்கள் சிலர், அட்வைஸ் செய்ததாகச் சொல்கிறார்கள் கமலாலயத்தினர்.

மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்த இந்த மையக்குழுக் கூட்டத்தில், தேசியப் பொதுச்செயலாளர் சி.டி.ரவி, முன்னாள் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மேலிட இணைப் பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி, தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, சட்டமன்றக்குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், மற்ற நிர்வாகிகளான கனகசபாபதி, இராம ஸ்ரீனிவாசன், வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன், ஏ.பி.முருகானந்தம், கார்த்தியாயினி ஆகியோர் கலந்துகொண்டனர்.

அட்வைஸ் செய்த சீனியர்கள்... சொன்னதைக் கேட்ட அண்ணாமலை!

கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்கள் குறித்து பா.ஜ.க மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம். ‘‘ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் குழந்தைகளில் ஒன்று பா.ஜ.க. சமீபநாள்களாக தந்தைக்கும் குழந்தைக்குமான மோதல் போக்கால் உறவில் சில உரசல்கள் ஏற்பட்டிருக்கின்றன. எனவே, அந்தக் குழந்தையிடம் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பக்குவமாகச் சில விஷயங்களை எடுத்துக் கூறியிருக்கிறார்கள். ஆடியோ, வீடியோ, புகைப்படங்கள் லீக் எனக் கட்சிக்கு அவப்பெயர்கள் தொடர் கதையாக இருக்கின்றன. இதற்கெல்லாம் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று சீனியர்கள் சிலர் அண்ணாமலையிடம் விளக்கம் கேட்டனர். அதோடு, ‘கட்சியில் இருக்கும் சீனியர்களின் அனுபவங்களையும் கருத்தில் கொண்டு கலந்தாலோசித்து சில முடிவுகளை எடுங்கள்’ என்றும் அறிவுரை வழங்கியிருக்கிறார்கள். இந்த விஷயங்களையெல்லாம் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட அண்ணாமலை, ‘நீங்க சொல்றதெல்லாம் சரிங்ணா. கண்டிப்பா சரி செய்றேண்ணா’ என்றிருக்கிறார்.

மூன்று மணி நேரத்துக்கு மேல் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் கட்சியின் வளர்ச்சித் திட்டங்கள், பொறுப்பாளர்கள் நியமனம் பற்றி விவாதித்திருக்கின்றனர். ‘நம்ம ஊர் பொங்கல்’, வாஜ்பாய் பிறந்தநாள் கொண்டாட்டம் போன்ற நிகழ்வுகள் மூலம் கட்சியை மக்களிடம் எப்படி எடுத்துச் செல்லலாம் என்று ஆலோசித்திருக்கின்றனர்.

அட்வைஸ் செய்த சீனியர்கள்... சொன்னதைக் கேட்ட அண்ணாமலை!

இதோடு, ‘மோடி கபடிப் போட்டி’போல, மாநிலம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, இளைஞர்களைக் கட்சிக்குள் ஈர்க்கவும் விவாதிக்கப்பட்டது. ‘வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக இதுவரை இல்லாத அளவு நம் வேலைகள் இருக்க வேண்டும். தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வில் இருக்கும் அணிகள்போல் நம் கட்சியிலிருக்கும் அணிகளுக்குப் பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும். அதற்கு முதலில் பூத் கமிட்டிகளை நாம் வலிமைப்படுத்த வேண்டும். ஏனெனில் கட்சி வலிமையாக இருக்கும் கன்னியா குமரியிலேயே 13%-தான் பூத் கமிட்டிகள் நம்மிடம் இருக்கின்றன. ஒவ்வொரு மாவட்டமாகத் தொடர் நிகழ்ச்சிகளை நாம் ஏற்பாடு செய்ய வேண்டும்’ எனக் கட்சி சீனியர்கள் வழங்கிய அட்வைஸை அண்ணாமலை ஏற்றிருக்கிறார்” என்றனர்.

இந்தச் சூழலில், மோடி கபடிப் போட்டி தொடர்பாகவும் ஒரு சர்ச்சை வெடித்திருக்கிறது. பெயர் குறிப்பிட விரும்பாத சீனியர் ஒருவர், ‘‘மோடி கபடிப் போட்டி நடத்த 28 கோடி ரூபாய் வசூலாகியிருப்பதாகச் சொல்கிறார்கள். அதில் பத்து கோடிதான் செலவு செய்யப்பட்டதாகக் கூறுகிறார்கள். மீதிப் பணம் என்ன ஆனது என்பது தெரியவில்லை. அந்தப் போட்டிக்காக வசூல் செய்த தொகைக்கும் இதுவரை கணக்கு இல்லை. இந்தப் புகாரோடு சேர்த்து, தமிழக பா.ஜ.க விளையாட்டுத்திறன் மேம்பாட்டுப் பிரிவு தலைவராகவும், அண்ணாமலையின் வலதுகரமாகவும் இருக்கும் அமர்பிரசாத் ரெட்டி மீது கொடுக்கப்பட்ட மற்ற புகார்களையும் விசாரிக்க ஆர்.எஸ்.எஸ் மேற்பார்வையில் விசாரணைக்குழு ஒன்று அமையவிருக்கிறது. உண்மை விரைவில் வெளிச்சத்துக்கு வரும்” என்றார்.

பா.ஜ.க என்றாலே சர்ச்சைதானோ?