Published:Updated:

தொடர் போராட்டத்தில் மக்கள்; என்.எல்.சி விவகாரத்தைக் கையிலெடுக்கும் பாஜக!

என்.எல்.சி - பா.ஜ.க

என்.எல்.சி நிறுவனத்தால் பாதிக்கப்படும் மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் நிலை குறித்து கேட்டறிந்ததோடு, டெல்லியில் மத்திய நிலக்கரித்துறை அமைச்சரையும் சந்தித்து நிலைமையை எடுத்துரைத்திருக்கிறார் பா.ஜ.க மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன்.

Published:Updated:

தொடர் போராட்டத்தில் மக்கள்; என்.எல்.சி விவகாரத்தைக் கையிலெடுக்கும் பாஜக!

என்.எல்.சி நிறுவனத்தால் பாதிக்கப்படும் மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் நிலை குறித்து கேட்டறிந்ததோடு, டெல்லியில் மத்திய நிலக்கரித்துறை அமைச்சரையும் சந்தித்து நிலைமையை எடுத்துரைத்திருக்கிறார் பா.ஜ.க மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன்.

என்.எல்.சி - பா.ஜ.க

நெற்பயிர்கள், கரும்பு, உளுந்து, சிறு தானியங்கள், காய்கறிகள் என விவசாயத்தை மட்டுமே மூலதனமாகக்கொண்டிருக்கும் கிராமங்களில், என்.எல்.சி நிறுவனம் நிலங்களைக் கையகப்படுத்துவதால் நில உரிமையாளர்கள், நிலத்தை நம்பி வாழும் விவசாயக் கூலித் தொழிலாளர்கள், எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறார்கள் என்ற கேள்விக்கு பதில் இல்லாமல் போராடி வருகின்றனர். இவர்களோடு, சுரங்க விரிவாக்கத்துக்காக மேற்கொண்டுவரும் நிலம்‌ கையகப்படுத்தும்‌ பணியை உடனடியாகக் கைவிட வேண்டும் என அ.தி.மு.க., பா.ம.க., நா.த.க., தே.மு.தி.க., வி.சி.க., இடதுசாரிகள்., த.வா.க என அரசியல் கட்சிகள், இயக்கங்களும் தொடர்ந்து குரல் கொடுத்துவருகின்றன. போராட்டங்களும் நடத்திவருகின்றன.

அமைச்சர்‌ பிரகலாத்‌ ஜோஷி, அஸ்வத்தாமன்
அமைச்சர்‌ பிரகலாத்‌ ஜோஷி, அஸ்வத்தாமன்

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக பா.ஜ.க-வும் இணைந்திருக்கிறது. அந்த வகையில், என்.எல்.சி நிறுவனத்தால் பாதிக்கப்படும் மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் நிலை குறித்து கேட்டறிந்ததோடு, டெல்லியில் மத்திய நிலக்கரித்துறை அமைச்சரையும் சந்தித்து நிலைமையை எடுத்துரைத்திருக்கிறார் பா.ஜ.க மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன். இதன் தொடர்ச்சியாக, ‘நெய்வேலி நிலக்கரி நிறுவன விரிவாக்கம்‌ தொடர்பான தமிழக பா.ஜ.க-வின்‌ அறிவிக்கை!’ என்கிற தலைப்பில் மாநிலச் செயலாளர் வினோஜ் பி செல்வம் ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

அதில்... ``நெய்வேலி நிலக்கரி நிறுவன சுரங்க விரிவாக்கம்‌ தொடர்பாக புவனகிரி, நெய்வேலி வட்டாரத்துக்குட்பட்ட கத்தாழை, மும்முடிசோழகன்‌, வளையமாதேவி மேல்‌/கீழ்‌, ஆதண்டர்‌ கொல்லை, கங்கைகொண்டான்‌, வடக்கு வெள்ளூர்‌, தொப்புளிக்குப்பம்‌, அம்மேரி, தென்குத்து, வானதிராஜபுரம்‌, அகிலாண்ட கெங்காபுரம்‌ போன்ற கிராமங்களில்‌ நிலம்‌ கையகப்படுத்துதல்‌ பணிகளால்‌ எழுந்திருக்கும் மக்களின்‌ எதிர்ப்புகள்‌, அவர்களின்‌ நியாயமான கோரிக்கைகளின்‌மீது தமிழக பா.ஜ.க-வும்‌, மாநிலத் தலைவர்‌ அண்ணாமலையும் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறோம்.

1935-ம்‌ ஆண்டு ஜம்புலிங்க முதலியார்‌ அவர்களால்‌ கனிம வளங்கள்‌ கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றை தேசத்தின்‌ வளர்ச்சிக்குப் பயன்படுத்த எண்ணி 14.11.1956-ம்‌ அன்று நெய்வேலி லிக்னைட்‌ கார்ப்பரேஷன்‌ இந்திய அரசின்‌ நவரத்தின நிறுவனமாக உருவாக்கப்பட்டது. 1962-ம்‌ ஆண்டு முதல்‌ தொடர்ச்சியாக சுரங்கம்‌ தோண்டி நிலக்கரி வெட்டி எடுக்கும்‌ பணிகள்‌ நடைபெற்றுவருகின்றன.

கடந்த ஆறு தசாப்தங்களுக்கும்‌ மேலாக, என்‌.எல்‌.சி இந்தியா லிமிடெட்‌ எரிசக்தி துறையில்‌ நாட்டின்‌ பொதுத்துறை நிறுவனங்களில்‌ முன்னோடியாக இருந்துவருகிறது. நிலக்கரி உற்பத்தியில்‌ பெரும்‌ பங்கும்‌, அனல்‌, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின்‌ உற்பத்தியில்‌ குறிப்பிடத்தக்க வகையிலும் NLCIL நிறுவனம்‌ பங்களித்துவருகிறது.

தொடக்க காலங்களில்‌ NLCIL நிறுவனத்துக்காக நிலம்‌ வழங்கியவர்களின் குடும்பத்தில்‌ ஒருவருக்கு அரசு வேலை, உரிய இழப்பீடு போன்றவற்றை முறையாக வழங்கி வந்ததாகவும்‌, 1990-க்குப் பிறகு நிலைமை கொஞ்சம்‌ கொஞ்சமாக மாறி... தற்போது வேலை உத்திரவாதங்கள்‌, உரிய இழப்பீடு போன்றவற்றை அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நமது மாநிலத் தலைவரின்‌ கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

எனவே, நமது மாநிலத் தலைவர்‌ அண்ணாமலை, NLCIL நிறுவனத்தின்‌ தனி இயக்குநர்‌ சுப்ரதா சவுத்ரி அவர்களை தனது இல்லத்துக்கு அழைத்து பொதுமக்கள்‌, தமிழக பா.ஜ.க தொண்டர்களின் கோரிக்கைகளை அவரிடத்தில்‌ எடுத்துச்‌ சொன்னார்‌.

வினோஜ் பி செல்வம்
வினோஜ் பி செல்வம்
Nithiesh Kumar

1) உள்ளூர்‌ இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்‌ என்ற பொதுமக்களின்‌ நீண்டநாள்‌ கோரிக்கையை, நெய்வேலி நிலக்கரி நிறுவனம்‌ செயல்படுத்த வேண்டும்‌. உள்ளூர்‌ இளைஞர்களைக் குறைந்தபட்சம்‌ மேற்பார்வையாளர்‌ வேலை வரையிலுமாவது நியமிக்க வேண்டும்‌.

2) நிலம்‌ கொடுத்தவர்களுக்கு 'வீட்டுக்கு ஒரு வேலை' என்ற வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை. 1990 முதல்‌ வெவ்வேறு காலகட்டங்களில்‌ நிலம்‌ கொடுத்த பொதுமக்கள்‌ வீட்டில்‌, ஒருவருக்கு வேலை என்ற நியாயமான கோரிக்கையை உடனடியாக நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்‌.

3) புதிதாக நிலம்‌ கையகப்படுத்தும்‌போது, மத்திய அரசு வழங்கியிருக்கும் வழிமுறைப்படி, நில உரிமையாளர்களுக்கான உரிய இழப்பீட்டுத்‌தொகை வழங்கப்பட வேண்டும்‌.

4) நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின்‌ சி.எஸ்‌.ஆர்‌ நிதி நெய்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளின்‌ வளர்ச்சிக்கு அதிக அளவில்‌ செலவிடப்பட வேண்டும்‌.

என வலியுறுத்தினார்‌. நம்‌ கோரிக்கைகள்‌ அனைத்தையும்‌ நிறுவனத்தின்‌ நிர்வாக இயக்குநருக்கும்‌, மற்ற உயர்‌ அதிகாரிகளுக்கும்‌ எடுத்துச்‌ சொல்வதாக நிறுவனத்தின்‌ தனி இயக்குநர்‌ சுப்ரதா சவுத்ரி நமது மாநிலத் தலைவரிடம்‌ உறுதியளித்திருக்கிறார்.

மேலும்‌, மத்திய நிலக்கரி, சுரங்கங்கள்‌ மற்றும்‌ நாடாளுமன்ற விவகாரங்கள்‌துறையின்‌ அமைச்சர்‌ பிரகலாத்‌ ஜோஷி அவர்களிடமும்‌ இது தொடர்பாகப் பேசியிருக்கிறார்‌. நிலக்கரி சுரங்க விரிவாக்கத்தில்‌ பாதிக்கப்படும்‌ கிராமங்களிலுள்ள முக்கியஸ்தர்களை டெல்லிக்கு அழைத்துச் சென்று அவர்களை மாண்புமிகு மத்திய நிலக்கரித்துறை அமைச்சருடன்‌ நேரில்‌ பேசுவதற்கான ஏற்பாட்டையும்‌ தமிழக பாரதிய ஜனதா கட்சியின்‌ சார்பில்‌ செய்து கொடுக்க முடிவுசெய்திருக்கிறோம்‌.

அண்ணாமலை,  NLCIL நிறுவனத்தின்‌ தனி இயக்குநர்‌ சுப்ரதா சவுத்ரி
அண்ணாமலை, NLCIL நிறுவனத்தின்‌ தனி இயக்குநர்‌ சுப்ரதா சவுத்ரி

மக்கள்‌ முன்வைத்திருக்கும் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித்தர பாரதிய ஜனதா கட்சி மக்களோடு மக்களாக நிற்கும் என உறுதியளிக்கிறோம். எனவே, உங்கள்‌ பிரச்னைகளில்‌ யாராவது அரசியலுக்காக அணுகினால்‌ அவர்களிடம்‌ எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுல்கொள்கிறேன்‌” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

என்.எல்.சி விவகாரத்தை பா.ஜ.க கையிலெடுத்திருப்பது குறித்து அந்தக் கட்சியின் சீனியர்கள் சிலரிடம் பேசினோம். “என்.எல்.சி விவகாரம் தொடர்பாக மாநிலத் தலைவர் அண்ணாமலை, என்.எல்.சி நிறுவனத்தின்‌ தனி இயக்குநர்‌ சுப்ரதா சவுத்ரியை சந்தித்து சில கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறார்.

டிசம்பர் 31, 2013-ல் நிலம் கையகப்படுத்துவதற்கு ஓர் ஏக்கருக்கு ஆறு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கடுத்து ஜனவரி 1, 2014-ல் 25 லட்சம் ரூபாயாக அது உயர்த்தப்பட்டிருக்கிறது. இதில் குறைந்த தொகை கொடுக்கப்பட்டவர்களுக்கு உரிய தொகை கொடுக்க வேண்டும் என்பது கோரிக்கை. அதன்படி பார்த்தால், 2,000 ஏக்கர்களுக்கு, சுமார் 400 கோடி ரூபாய்தான் ஆகிறது. ஆண்டுக்கு ரூ.11,000 கோடி வருவாய் ஈட்டும் என்.எல்.சி நிறுவனம், சராசரியாக ரூ.2,000 கோடி லாபம் ஈட்டுகிறது. எனவே எளிதாகவே போராடும் மக்களுக்கு என்.எல்.சி நிறுவனத்தால் கொடுக்க முடியும். இதை தமிழக பா.ஜ.க வலியுறுத்தியிருக்கிறது" என்றனர்.