பாஜக மண்டலத் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் இன்று (17.12.2021) திருவண்ணாமலை வந்திருக்கும் அந்தக் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சிதான் காரணம். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது அதிமுக பற்றி ஸ்டாலின் என்ன பேசினாரோ அதுதான் தற்போது சர்ச்சையாக உள்ளது. இப்போது அது விவாதமாகத்தான் இருக்கிறது. ஏனெனில், இரண்டு மாத இடைவெளிகளில் ஒவ்வொருவராக வரும்போதே தெரிகிறது, இது முற்றிலும் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு நடைபெறும் சோதனைதான் என்று. அதற்கான சார்ஜ் ஷீட் போடும்போது எல்லாம் தெரியவரும்.

மாரிதாஸைப் பொறுத்தவரை, 2018-ல் மேலப்பாளையத்தில் போடப்பட்ட ஒரு வழக்கில் கைதுசெய்துள்ளனர். அந்த தேசத்துரோக வழக்கில் மதுரை உயர் நீதிமன்றம் அற்புதமான ஒரு தீர்ப்பை அளித்திருந்தது. இருக்கிற இரண்டு வழக்கில்கூட அவர் எதிர்கொண்டு வெளியில் வருவார். 124(A) வழக்கு போட்டு மாரிதாஸ் கருத்துரிமையை நசுங்கும் போதுதான், பாஜக அவர் பின்னாடி இருந்து வழக்கறிஞர் அணியுடன் நின்று முறியடித்து வந்தோம். ஏற்கெனவே 2018, 2020-ல் அவர்மீது போடப்பட்ட வழக்குகளை அப்போதைய ஆட்சி, காவல்துறை நண்பர்கள், போதிய ஆதாரம் இல்லை எனப் பெரதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதுவும் நீதிமன்றத்துக்குப் போகும்போது முறியடிக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்றார்.
நீதிபதி ஒருவர் பாஜக நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாகவும், அதை மாரிதாஸ் வழக்குடன் ஒப்பிடப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் வெளியாகும் பதிவு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குத் தொடர்ந்து பதிலளித்த அவர், ``திமுக-வைச் சேர்ந்த நபர்கள்தான் இது போன்ற தேவையில்லாத வதந்திகளை, விதண்டா வாதங்களைக் கிளப்பிக்கொண்டு இருக்கின்றனர். ஒரு நீதியரசர் என்பவர், கட்சியைத் தாண்டி, சித்தாந்தத்தைத் தாண்டி வருகிற வழக்குகளைச் சட்டப்படி விசாரித்து தீர்ப்பளிக்கிறார். எல்லா நீதி அரசர்களுக்கும் அவர்களுக்கென தனிப்பட்ட கருத்து இருக்கும். ஒரு நீதி அரசர், கடவுள் இருக்கிறார் என நினைக்கலாம். மற்றொரு நீதியரசர், கடவுள் இல்லை என நினைக்கலாம். குறிப்பிடப்படும் இந்த நீதியரசரைப் பொறுத்தவரை, அவருடைய ஆன்மிக பக்தியை சமூக வலைதளங்களில் பார்த்துவருகிறோம். அது அவருடைய தனிப்பட்ட பழக்க வழக்கம். ஆன்மிகத்தை நம்பக்கூடிய ஒரு நீதியரசர் பாஜக-வைச் சார்ந்தவர் என்பது கண்டிக்கத்தக்கது.

பாஜக கட்சிக்குச் சம்பந்தமில்லாத, கட்சி நடத்தாத நிகழ்ச்சியில், ஏதோ ஒரு சங்கம் நடத்தும் ஒரு நிகழ்ச்சியில்... பாஜக தலைவர்களும் கலந்துகொள்கிறார்கள். அதேபோல, நானும் பல நீதிபதிகள் உள்ள நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறேன். அப்போது, அந்த நீதிபதிகளெல்லாம் பாஜக-வைச் சேர்ந்தவர்கள் என்பதா..? இவை அனைத்தும் அபத்தமான பேச்சு. ஆகவே தயவு செய்து நீதியரசர்களை, நீதித்துறையை அரசியலுக்கு மேலே வையுங்கள். அரசியலுக்குள் கொண்டு வந்துவிடாதீர்கள். இதில் சம்பந்தப்பட்ட நீதியரசர் இருந்த இடத்தில்தான் ஏ.கே.ராஜன் அவர்களும் இருந்தார். அப்படியென்றால் அவரும் பிஜேபி-யைச் சார்ந்தவர் எனச் சொல்வதா..?
இந்த அபத்தமான குற்றச்சாட்டுகளை விட்டுவிடுங்கள். அந்த நீதியரசர் கொடுத்திருக்கும் தீர்ப்பில் என்ன தவறு இருக்கிறது? எல்லா நீதி அரசர்களையும் மதிக்கக்கூடிய கட்சி பாஜக. நாங்கள் இதுபோல் அபாண்டமான குற்றம் சுமத்த மாட்டோம். எங்களின் பல வழக்குகள் நீதிமன்றத்துக்குப் போயிருக்கிறது. பல வழக்குகளில் தீர்ப்பு எதிராக வந்திருக்கிறது. அப்படியிருக்கும்போது, பாஜக கட்சி எப்போதாவது ஒரு நீதியரசரை 'இந்தக் கட்சியைச் சார்ந்தவர்' எனக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறோமா! அப்படி சொல்லவே கூடாது. இவர்கள் தேவையில்லாத விளையாட்டை விளையாடுகிறார்கள்.
நீதித்துறையை அரசியலாக்க முயற்சிக்கும்போது, கடைசியில் நீதித்துறைக்கு அந்த நிம்மதி நிலை எப்படி வரும்... ஏற்கெனவே சொன்னதுபோல அதிமுக-வுடன் எந்தக் குழப்பமும் இன்றி கூட்டணி இருக்கும்போது, மூன்றாவது கூட்டணி என்கிற பேச்சுக்கே தமிழகத்தில் இடமில்லை" என்றார்.