பாஜக கட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்காக திருவண்ணாமலை வந்திருந்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். பின் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர்,
"பாஜக கட்சியை பற்றி உங்களுக்கு தெரியும். அதன் சித்தாந்தமே தமிழ் மண்ணை சார்ந்த சித்தாந்தம் தான். ஆன்மீகத்தை அடிப்படையாக வைத்து தான் இந்த கட்சி வளர்ந்து கொண்டிருக்கிறது. இங்கே பௌர்ணமி நாட்களில் 10 லட்சம் முதல் 15 லட்சம் வரை மக்கள் வருவார்கள். கார்த்திகை தீபத்தின் போது 35 லட்சம் வரை மக்கள் எண்ணிக்கையில் தொட்டுவிடுவார்கள். அடிப்படையில் தமிழக மக்களுக்கு ஆன்மீகத் தேடுதல் இருக்கிறது. ஆன்மிகத்தில் அவர்களுடைய வாழ்க்கை பயணத்தை கொண்டு போக வேண்டும் என்பதற்காக கோவிலை புண்ணிய ஸ்தலமாக பார்க்கிறார்கள். இந்த ஆலயத்தில் யானை இல்லாதது தொடர்பாக பா.ஜ.க குரல்கொடுக்கும். இதற்கு முழுமையான தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம்" என்றார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த தலைவர் வருகை ஏற்பாடு குறித்த சர்ச்சையில் மதுரையில் உதவி ஆணையர் நீக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, "மோகன் பகவத் என்பவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருப்பவர். உலகத்திலேயே மிகப்பெரிய சேவை அமைப்பு அது. அதற்கு ஈடேதும் கிடையாது. அவருடைய பாதுகாப்பு என்பது உச்சகட்டமானது. அந்த இணை ஆணையரின் கடிதத்தில் அது தெளிவாக உள்ளது. பாதுகாப்பிற்காக தான் அது போன்ற பணிகளை சொல்லியிருக்கிறார்கள். அரசு அந்த இணை ஆணையரை நீக்கியது கண்டனத்திற்குரியது மட்டுமல்ல, அவர்களுடைய மனநிலை எப்படி உள்ளது என்பதையும் காட்டுகிறது. அங்கிருக்கும் எம்.பி ஒருவர் கடிதம் எழுதுகிறார், அதற்கு அரசு உடனே நடவடிக்கை எடுக்கிறார்கள். அவருக்கு பணி இல்லாமல் எங்கேயோ ஓரமாக அமரவைத்திருக்கிறார்கள். இதற்கு பா.ஜ.க சார்பில், அறிக்கை மூலம் தலைமை செயலாளருக்கு கடிதங்கள் எழுதியுள்ளோம்.
அந்த இணை ஆணையரை வேகமாக பணிக்கு கொண்டுவர வேண்டும். அவர் எந்த தவறும் செய்யவில்லை. இந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கொரோனா காலத்தில் செய்யாத உதவிகளே கிடையாது. உணவிலிருந்து ஆக்ஸிஜன் செரிவூட்டி வரை கொடுத்து உதவியிருக்கிறார்கள். அரசுக்கு அப்படியென்ன காழ்ப்புணர்ச்சி என்று எனக்கு தெரியவில்லை. இது முழுவதுமே ஆர்.எஸ்.எஸ் என்ற இயக்கத்தை புரிந்து கொள்ளாமல், மதுரை எம்.பி போல சிலர் தவறாக சித்தரித்து எழுதிய கடிதத்தினால் அரசு எடுத்த எதிர்வினையாக தான் நான் பார்க்கிறேன். மீண்டும் அவரை பணியில் அமர்த்த வேண்டும்.” என்றவர் தடுப்பூசி குறித்து பேசினார்.
``தமிழகத்திற்கு, ஜூன் மாதத்தில் 41 லட்சம் தடுப்பூசிகளை தருவதாக கூறிய மத்திய அரசு.. 52 லட்சம் தடுப்பூசிகளை கொடுத்திருக்கிறது. 11 லட்சம் தடுப்பூசியை கூடுதலாக கொடுத்திருக்கிறார்கள். இந்த மாதம் 70 லட்சம் தடுப்பூசி தருவதாக சொல்லி இருக்கிறார்கள். அதை தாண்டி கூடுதலாகத்தான் தடுப்பூசி வரும். அடுத்த 15 நாட்களுக்கு எப்படி தடுப்பூசி வரும் என்ற விவரத்தை மத்திய அரசு முறையாக அறிவித்துவிடுகிறார்கள். அதே போல தான் வருகிறது. ஆனா, தமிழகத்தில் இருக்கிற திமுக காரர்கள், தடுப்பூசி போடப்படும் மருத்துவமனைகளுக்கு காலங்காத்தாலேயே போய் விடுகிறார்கள். அங்கிருந்து டோக்கன்களை வாங்கி வந்து அவர்களுக்கு தெரிந்த நபர்களுக்கு கொடுத்து வருகிறார்கள். இது தெரிந்ததினால் தான் அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள். பா.ஜ.க.வும் ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சொல்லட்டுமே..!

'ஜூன் மாதத்தில் மத்திய அரசு கொடுப்பேன் என சொன்னதை விட குறைவான தடுப்பூசியை கொடுத்திருக்கிறார்கள்' என்று அறிக்கை கொடுக்கட்டுமே..! டெல்லி போகும் போது இவர்கள் சொல்வது, 'மத்திய அரசு நிறைய தடுப்பூசி கொடுக்கிறார்கள்' என்று; சென்னை வந்ததும் பேச்சை மாற்றி விடுகிறார்கள். 'மத்திய அரசு பாகுபாடு பார்க்கிறது' என்று. தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கிடைத்துவிட்டால் எங்களைப் போன்ற சந்தோஷம் அடைபவர்கள் யாரும் கிடையாது. சொல்வதைவிட மத்திய அரசு அதிகமாக தடுப்பூசிகளை கொடுக்கும்போது அதை மறைத்து ஏன் அரசியல் செய்கிறார்கள் என தெரியவில்லை.
மத்திய அரசை பொறுத்தவரை பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான வேலையை செய்து கொண்டு இருக்கிறார்கள். நிச்சயமாக கட்டுக்குள் கொண்டு வரப்படும். இன்னொரு புறமோ.. 'ஐந்து ரூபாயை குறைப்பேன்' என்று கூறி ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள் தமிழகத்தில். அவங்க சொன்ன ஐந்து ரூபாயையும் குறைக்கவில்லை. ஒரு லிட்டருக்கு 13 ரூபாயை நேரடியாகவும்; கச்சா எண்ணெய் மூலம் 15 சதவீதமும் மாநில அரசுக்கு போய்கிட்டு இருக்கு. அப்படிப் பார்த்தால் 6 ரூபாய் 20 பைசாவாக குறைக்க வேண்டும்.
தமிழகத்தில் புது அரசு ஆட்சிக்கு வரும் போது வருமான வரித்துறையை ஏவி சோதனை நடத்துவது வாடிக்கையான ஒரு விஷயம்தான். அப்படியான ஒரு விஷயம்தான் இப்போது முன்னாள் அமைச்சர் வீட்டில் நடந்துள்ளது. எங்கள் கட்சியின் துணைத் தலைவர் துரைசாமி அவர்களும் தெளிவாக கூறியிருந்தார்கள். 'இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காகத்தான் நடத்தப்படுகிறது' என்று. போலீஸ் அதிகாரிகள் அவர்களுடைய கடமையை செய்தால் பிரச்னை இல்லை. அரசு சொல்லும் அனைத்தையும் செய்ய வேண்டும் என்ற அவசியமும் இல்லை.

கிறிஸ்துவ மத பாதிரியார் ஒருவர் பாரதமாதாவை பற்றியும், அரசியல் தலைவர்கள் பற்றியும் தரக்குறைவாக பேசியிருந்தார். அவர் மீது புகார் அளித்திருந்தோம். அப்போதும் நடவடிக்கை இல்லாமல் இருந்து வந்தது. சமூகவலைதளத்தில் அரசு பற்றி ஒருவர் தன் கருத்தை பதிவு பண்ணினாலும் அவரை குண்டர் சட்டத்தில் பிடித்து உள்ளே போட்டுவிடுகிறார்கள். கருத்து சுதந்திரம் குறைந்து கொண்டே வருகிறது என்பது மக்களுக்கு தெரிகிறது. சித்தாந்த அடிப்படையில் நாங்கள் சரியாக கேள்வி கேட்க அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். இன்று தமிழக பா.ஜ.க போராட்டம் அறிவித்திருந்த நிலையில் இன்று காலையில்தான் அந்த பாதிரியார் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். அவருக்கு உண்டான தண்டனை கிடைக்கட்டும். சட்டம் தன் கடமையை செய்யட்டும்" என்றார்.