Published:Updated:

அராஜகம்... வன்முறை... வெறுப்பு அரசியல் செய்கிறதா பா.ஜ.க?

வெறுப்பு அரசியல் செய்கிறதா பா.ஜ.க?
பிரீமியம் ஸ்டோரி
வெறுப்பு அரசியல் செய்கிறதா பா.ஜ.க?

கட்சியை வளர்க்க வேண்டும், தங்களுக்கான பிரதிநிதிகளை மத்தியிலும் மாநிலத்திலும் அமர்த்த வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு கட்சியின் நோக்கமாக இருக்கும்.

அராஜகம்... வன்முறை... வெறுப்பு அரசியல் செய்கிறதா பா.ஜ.க?

கட்சியை வளர்க்க வேண்டும், தங்களுக்கான பிரதிநிதிகளை மத்தியிலும் மாநிலத்திலும் அமர்த்த வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு கட்சியின் நோக்கமாக இருக்கும்.

Published:Updated:
வெறுப்பு அரசியல் செய்கிறதா பா.ஜ.க?
பிரீமியம் ஸ்டோரி
வெறுப்பு அரசியல் செய்கிறதா பா.ஜ.க?

பா.ஜ.க மாநிலத் தலைவராக அண்ணாமலை பதவியேற்றது முதல் தொடர்ந்து தமிழ்நாட்டைப் பதற்றத்தில் வைத்திருப்பதற்கான அரசியலையே செய்துவருவதை, ‘இளையராஜா முதல் ரேஷன் கடை வரை... பதற்ற அரசியல் செய்கிறதா பா.ஜ.க?’ என்ற தலைப்பில் 27.4.2022 இதழில் பதிவு செய்திருந்தோம். அண்ணாமலையின் அந்தப் பதற்ற அரசியல் தற்போது வெறுப்பையும் அராஜகத்தையும் வளர்க்கும் அரசியலாக அடுத்த பரிணாமத்தை எட்டியிருக்கிறது. அதற்குச் சில சம்பவங்களை, அதுவும் ஆகஸ்ட் 10 முதல் 15-ம் தேதிக்குள் நடந்தவற்றை உதாரணமாகச் சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

 தருமபுரி, பாப்பாரப்பட்டியிலுள்ள பாரத மாதா ஆலயத்துக்கு மாலை அணிவிக்கச் சென்றனர் பா.ஜ.க-வினர். அதிகாரிகளின் உத்தரவில்லாமல் ஆலயத்தின் கதவைத் திறக்க முடியாது என்று ஊழியர்கள் சொல்ல, அவர்களுடன் தகராறில் ஈடுபட்டு ஆலயத்தின் பூட்டை உடைத்து அத்துமீறி உள்ளே சென்றுள்ளனர். இந்தச் சம்பவத்தில் பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

அராஜகம்... வன்முறை... வெறுப்பு அரசியல் செய்கிறதா பா.ஜ.க?

 ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான மோதலில் வீர மரணமடைந்த ராணுவ வீரரின் உடல் மதுரை விமான நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டது. விமான நிலையத்துக்குள் அரசு சார்பில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், மேயர், சட்டமன்ற உறுப்பினர்கள், காவல்துறை மற்றும் ராணுவ அதிகாரிகள் மட்டுமே அஞ்சலி செலுத்துவது மரபு. அரசியல் கட்சியினர் ராணுவ வீரரின் வீட்டுக்குச் சென்று அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதுதான் நடைமுறை. ஆனால், பா.ஜ.க-வினர் விமான நிலையத்திலேயே அஞ்சலி செலுத்த வேண்டும் என்று வாக்குவாதம் செய்ய, அதைத் தட்டிக் கேட்ட அமைச்சரின் காரில் செருப்பை வீசி அநாகரிகமாக நடந்துகொண்டனர்.

பொள்ளாச்சியிலிருந்து அண்டை மாநிலங்களுக்குக் கற்கள் கடத்தப்படுவதை எதிர்த்து அறவழியில் போராடலாம். ஆனால், சரக்கு லாரிகள் மீது கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டனர் அப்பகுதி பா.ஜ.க-வினர். அதன் பின்னணியில் தனிப்பட்ட பகை இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

 கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்திபெற்ற பாடலீஸ்வரர் கோயில் கோபுரத்தின் உச்சியில் அத்துமீறி ஏறிய பா.ஜ.க-வினர், தேசியக்கொடி ஏற்றி ‘செல்ஃபி’ எடுத்து வெளியிட்டனர். கோயில் தரப்பில் இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அராஜகம்... வன்முறை... வெறுப்பு அரசியல் செய்கிறதா பா.ஜ.க?
அராஜகம்... வன்முறை... வெறுப்பு அரசியல் செய்கிறதா பா.ஜ.க?

இவை தவிர மதுரவாயல் கூட்டத்தில் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசி கைதானார் பா.ஜ.க நிர்வாகி கனல் கண்ணன். திருவாரூரில் பல்கலைக்கழகத் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததால், பா.ஜ.க மாவட்டத் தலைவர் பாஸ்கரன் கைது செய்யப்பட்டார். பா.ஜ.க-வினரின் இந்தச் செயல்பாடுகள் அரசியல் வட்டாரத்தில் அதிருப்தியையும், சொந்தக் கட்சியினரிடம் முணுமுணுப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

பா.ஜ.க-வினர் கைதுசெய்யப்படுவது குறித்து அந்தக் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜனிடம் கேட்டோம். “பா.ஜ.க-வினர் சட்டத்துக்குப் புறம்பாக நடக்கிறார்கள் என்று சொல்வதே தவறானது. அப்படி யெல்லாம் செய்வது யார் என்று தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும். மதுரையில் அமைச்சர் கார் மீது செருப்பு வீசப்பட்டது தவறு என்று மாநிலத் தலைவர் அண்ணா மலையே சொல்லிவிட்டார். அதுதான் என்னுடைய கருத்தும். ஆனால், கனல் கண்ணனின் கருத்தை நாங்கள் வரவேற்கிறோம். இந்து மதத்துக்கு எதிராகப் பேசுபவர்களை விட்டு விடுகிறார்கள். மதத்தின்மீது பற்றுடையவர்கள்மீது வன்மத்தோடு நடந்துகொள்கிறது தி.மு.க அரசு. சில சம்பவங்களை நியாயப்படுத்தவில்லை. உணர்ச்சியில் செய்யப்படும் விவகாரத்தைச் சட்ட மீறல் எனச் சொல்ல முடியாது. வழக்குகள் இருக்கும் விவகாரங்களில் நான் எந்தக் கருத்தும் சொல்ல விரும்பவில்லை. எங்கள்மீது அவர்கள் சுமத்திய ஒருசில குற்றச்சாட்டுகள்போல ஆயிரமாயிரம் புகார்களை தி.மு.க-மீது நாங்கள் சொல்ல முடியும்” என்றார்.

கனல் கண்ணன்
கனல் கண்ணன்

‘பா.ஜ.க மீதிருக்கும் அச்சத்தில்தான் தி.மு.க இப்படிச் செய்கிறதா?’ என்ற கேள்வியை தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் இராஜீவ் காந்தியிடம் கேட்டோம். “சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. அதை மிகச் சரியாக செய்துகொண்டிருக்கிறோம். ஆனால், பா.ஜ.க இங்கு போலி தேசியம் மற்றும் மதத்தின் பெயரால் சட்டம்-ஒழுங்கைச் சிதைத்துக் கொண்டிருக்கிறது. `பெரியார் சிலையை உடைப்போம்’ எனப் பேசுவது, பாரதமாதா ஆலயத்தை உடைப்பது, அமைச்சரின் மாண்புக்கு பங்கம் ஏற்படும் வகையில் நடந்துகொள்வது, தேர்வில் ஆள்மாறாட்டம் செய்வதையெல்லாம் எப்படிச் சகித்துக்கொள்ள முடியும்... குற்றச் செயலில் ஈடுபடும் குற்றவாளிகளுக்குப் பொறுப்பு கொடுப்பது உங்கள் இஷ்டம். ஆனால், பொதுவெளியில் அவர்கள் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க நினைத்தால், கைது நடவடிக்கை தொடரத்தான் செய்யும். புழல் சிறையில் நடத்தவேண்டிய கட்சியை கமலாலயத்தில் நடத்திக் கொண்டிருக்கும் அண்ணாமலை, அராஜக அரசியல் மூலம் இங்கே நிலைத்துவிடலாம் என நினைக்கிறார். அது எங்களிடம் நடக்காது” என்றார் பதிலடியாக.

கரு.நாகராஜன் - இராஜீவ் காந்தி
கரு.நாகராஜன் - இராஜீவ் காந்தி

கட்சியை வளர்க்க வேண்டும், தங்களுக்கான பிரதிநிதிகளை மத்தியிலும் மாநிலத்திலும் அமர்த்த வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு கட்சியின் நோக்கமாக இருக்கும். ஆனால், அதை அடைய வெறுப்பை விதைப்பதையும், வன்முறையைத் தூண்டுவதையும், சட்டத்துக்குப் புறம்பாக நடந்துகொள்வதையும் மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்!