Published:Updated:

'தளர்வுகளில் டாஸ்மாக் திறந்தது ஏன்'- சேலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரைத் திறந்துவைத்த முதல்வர்
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரைத் திறந்துவைத்த முதல்வர்

மக்களுடைய வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டுதான் சில தளர்வுகளை அறிவித்திருக்கிறோம். அந்தத் தளர்வுகளை பொதுமக்கள் மெத்தனமாக எடுத்துக்கொள்ளாமல், ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனங்களுக்காக ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கமாக இருந்துவருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு பாசனத்துக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக மேட்டூர் அணைக்கு வந்து, தண்ணீரைத் திறந்துவைத்திருக்கிறார். மின்விசை மூலமாக அணைத் தண்ணீரைத் திறந்துவைத்த முதல்வர், சீறிப்பாய்ந்த தண்ணீரை மலர்தூவி மகிழ்ச்சியாக வரவேற்றார்.

மேட்டூர் அணையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
மேட்டூர் அணையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

அணையில் தண்ணீரைத் திறந்துவிட்ட பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “மேட்டூர் அணை கட்டப்பட்டதிலிருந்து ஜூன் 12-ம் தேதி குறுவை சாகுபடிக்கு 18-வது முறையாகத் தண்ணீர் திறந்துவிடப்பட்டிருக்கிறது. இதனால் திருச்சி, தஞ்சை, கரூர், திருவாரூர், நாகை, அரியலூர் போன்ற டெல்டா மாவட்டங்களில் 5.21 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மார்ச் 7-ல் திருச்சியில் நடந்த கூட்டத்தில் ஏழு உறுதிமொழிகளை நான் தந்திருந்தேன். அதில் வேளாண்மையும் நீர்வளமும் குறிப்பிடத்தக்கவை. அதேபோல குடிமக்களுக்குக் குறையாத தண்ணீர் கொடுக்கப்படுவதாகவும் சொன்னேன். இதற்கன திட்டமிடுதலைத் தொடங்கியிருக்கிறோம். தமிழகத்தில் நிகரப்பயிரிடு பரப்பு 60 சதவிகிதமாக இருக்கிறது. 10 ஆண்டுக்காலத்தில் அது 75 சதவிகிதத்தை அடைய நடைவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

தண்ணீரை பூ தூவி வரவேற்கும் முதல்வர்
தண்ணீரை பூ தூவி வரவேற்கும் முதல்வர்

சென்ற ஆண்டு சாகுபடிப் பரப்பைவிட காவிரிப் படுகையில் குறுவை சாகுபடி பரப்பு அதிகமாகிவருகிறதென்றால், அதை ஒவ்வோர் ஆண்டும் அதிகப்படுத்த வேண்டுமென்பதுதான் இந்த அரசினுடைய குறிக்கோள். திறந்துவிடப்படும் தண்ணீர் கடைமடை வரை செல்வதைக் கண்காணிக்க வேண்டும். இதற்காக அரசு உயர் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்காக நேற்றுக்கூட காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளைப் பார்வையிட்டோம். டெல்டா பாசனப் பகுதிகளில் நீர்நிலைகளைப் போர்க்கால அடிப்படையில் தூர்வாரி, சீரமைக்க ஆணையிட்டுள்ளேன். அந்தவகையில் திருச்சி, கரூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை என ஒன்பது மாவட்டங்களில் ரூ.65.10 கோடி மதிப்பீட்டில்  647 திட்டப் பணிகள் நடந்துவருகின்றன. 4,061 கி.மீ அளவுக்கு நீரிநிலைகள் தூர்வாரப்படும். இந்தப் பணிகளைக் குறித்த காலத்தில் முடிக்க வேண்டுமென ஒன்பது மாவட்டங்களுக்கும் சிறப்பு கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சீரமைப்புப் பணிகளால் டெல்டா மாவட்டங்களில் நீர்வளம் மேம்படும். நிர்ணயிக்கப்பட்ட இலக்கைத் தாண்டி சாகுபடியில், உணவு உற்பத்தியில் தமிழ்நாடு சாதனை படைக்கும்” என்றார்.

மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் தண்ணீர்
மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் தண்ணீர்

தொடர்ந்து பேசியவர், “தமிழகத்துக்கு உரிய தண்ணீரைத் திறந்துவிட வேண்டுமென கர்நாடக நீர்வளத்துறை அமைச்சருக்கு நினைவூட்டி கடிதம் எழுதியிருக்கிறோம். கடந்த ஆட்சியில் குடிமராமத்து திட்டத்தில் எங்கு, என்னென்ன வேலைகள் நடந்தன எனச் சட்டமன்றத்தில் வெள்ளை அறிக்கை கேட்டும், அப்போதைய அரசு எந்த முறையான பதிலையும் சொல்லவில்லை. தற்போது அந்த விவரங்களெல்லாம் சேகரிக்கப்படும். கொரோனாவைப் பொறுத்தவரை இப்போது நிலைமை ஒரு கட்டுக்குள் வந்திருக்கிறது. இன்னும் கொஞ்சம் இருக்கிறது, இல்லையென்றும் மறுக்கவில்லை. அதையும் படிப்படியாகக் குறைப்பதற்கான முயற்சியில் இந்த அரசு முழுமையாக ஈடுபட்டிருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது தினசரி தொற்று 36,000-ஐ தாண்டி இருந்தது. அது 60,000-ஐ தொட வாய்ப்பிருக்கிறது என்கின்ற சூழல் அன்றைக்கு இருந்தது. அதனால்தான் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் முழு ஊரடங்கைப் பிறப்பித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டுமென்கின்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்படி படிப்படியாக தொற்று பாதிப்பு குறைந்து நேற்றைய தினம் 16,000-க்கும் கீழாகக் குறைந்திருக்கிறது. சென்னையில் 7,000-க்கும் மேல் இருந்த பாதிப்பு இன்றைக்கு 1,000-க்குக் கீழ் வந்திருக்கிறது. கோவையில் 5,000-ஆக இருந்த பாதிப்பு இன்றைக்கு 2,000-ஆக இருக்கிறது. படுக்கை, ஆக்ஸிஜன் தட்டுப்பாடு போன்ற பிரச்னைகள் இல்லாத சூழலை உருவாக்கியிருக்கிறோம்.

தமிழ்நாட்டுக்கு அதிக அளவில் தடுப்பூசிகள் வேண்டுமென ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம். மக்களுடைய வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டுதான் சில தளர்வுகளை அறிவித்திருக்கிறோம். அந்தத் தளர்வுகளை பொதுமக்கள் மெத்தனமாக எடுத்துக்கொள்ளாமல், ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அவசியமில்லாமல் வெளியே நடமாடக் கூடாது. மாஸ்க் போடுவதில் ஆரம்பித்து அரசு கூறியுள்ள வழிமுறைகள் அனைத்தையும் மக்கள் கடைப்பிடிக்க வேண்டுமென கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் நிச்சயமாக கொரோனாவை கட்டுப்படுத்திவிடுவோம் என்கிற நம்பிக்கையிருக்கிறது” என்றார்.

ஒரு சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்திருக்கிறது என்கிற காரணத்தால்தான் சில தளர்வுகளை கொடுத்திருக்கிறோம். அந்த அடிப்படையில்தான் டாஸ்மாக் கடைகளுக்கும் அந்தச் சலுகைகளைக் கொடுத்திருக்கிறோம்.

‘கடந்த அரசு முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் திறந்ததை நீங்கள் மூடச்சொல்லி வலியுறுத்தியும் அவர்கள் மூடவில்லை.  தற்போது நீங்கள் திறக்க உத்தரவிட்டதை திரும்பப் பெற வாய்ப்பிருக்கிறதா’.. என பத்திரிகையாளர் ஒருவர் முதல்வரிடம் கேள்வியெழுப்ப, ‘சில தளர்வுகளைக் கொடுத்துதான் ஊரடங்கை அமல்படுத்தியிருக்கிறோம். மேற்கு மண்டலத்தில் அப்படித் தளர்வுகூட இல்லாமல் ஊரடங்கு நீடிக்கிறது. ஒருசில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்திருக்கிறது என்கின்ற காரணத்தால்தான் சில தளர்வுகளை கொடுத்திருக்கிறோம். அந்த அடிப்படையில்தான் டாஸ்மாக் கடைகளுக்கும் அந்தச் சலுகைகளைக் கொடுத்திருக்கோம். பிரதமரைச் சந்திக்க 17-ம் தேதி நேரம் கேட்டிருக்கிறோம். நேரம் கிடைத்த பிறகு டெல்லி பயணம் பற்றி அறிவிக்கப்படும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு